அதேபோன்று, பாராளுமன்றத்தின் பொறுப்பு முதலீடுகளுக்கான செலவீனங்களை மதிப்பிடுவதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படலாகாது.
அரச செலவீனங்கள் ஊடாக எதிர்பார்க்கப்படும் சமூக மற்றும் பொருளாதாரப் பலன்கள் உண்மையாகவே சென்றடைகின்றனவா என்பதை ஆராய்ந்து செயற்படவேண்டியது அதன் பொறுப்பாகும்.
2026 ஜூலை 21, நடைபெற்ற "பராமரிப்புப் பொருளாதாரத்திற்கான நிதி வழங்கள், அதற்கான பாராளுமன்றத்தின் பங்கு" (Financing the Care Economy: The Role of Parliament) எனும் வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
வெஸ்ட்மின்ஸ்டர் ஜனநாயகத்திற்கான மன்றமும் (Westminster Foundation for Democracy - WFD) இலங்கை பாராளுமன்றத்தின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியமும் இணைந்து இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தன. பொருளாதாரம் மற்றும் நிதித் துறை, பாலின சமத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கத்தவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஆண் பெண் சம பங்கேற்பை உள்ளடக்கிய பொருளாதார மற்றும் வரவுசெலவுத் திட்ட பகுப்பாய்வின் ஊடாகப் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரான தடைகளைக் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவதே இக்கலந்துரையாடலின் முதன்மை நோக்கமாகும். அத்துடன் பராமரிப்புப் பொருளாதாரத்திற்காக முதலீடு செய்வதன் முக்கியத்துவம் மற்றும் எதிர்வரும் அரச வரவுசெலவுத் திட்டத்தில் சமூகப் பாதுகாப்பிற்கான முதலீடுகளை உள்ளடக்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
நியாயமான விலையில் போதுமான பராமரிப்புச் சேவைகள் இல்லாத பட்சத்தில், குடும்பங்கள் தனித்தனியாகத் தீர்வுகளைத் தேட வேண்டிய நிலை ஏற்படுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டியதோடு, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இதற்காகத் தமது வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டியிருப்பது பெண்களுக்கே என்பதையும், அதனால் அவர்களின் சேவைக்காலம் குறைவடைதல், வேலைவாய்ப்புகளை நிராகரித்தல், தொழில்சார் வாழ்க்கையை அரைகுறையில் கைவிடுதல் அல்லது தொழிலாளர் படையிலிருந்து முற்றாக வெளியேறுதல் போன்ற தீர்மானங்களை எடுக்க நேரிடுகின்றது என்பதையும் வலியுறுத்தினார். இதன் விளைவாகப் பெண்களின் வருமானம், தொழில் வாய்ப்புகள் மற்றும் பொருளாதார சுயாதீனம் என்பன இல்லாமற்போவதுடன், நாட்டிற்கும் திறமைகள், அறிவு மற்றும் உற்பத்தித்திறன்மிக்க உழைப்புச் சக்தி என்பவற்றை இழக்க நேரிடுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ஆகையினால், பராமரிப்புச் சேவைகளை இதற்குமேலும் தனிப்பட்ட பொறுப்பாகக் கருதாது, தேசிய பொருளாதாரம் மற்றும் அரச கொள்கை முன்னுரிமையாகக் கருத வேண்டும் என்றும் வலியுறுத்திய பிரதமர்,
பராமரிப்புப் பணிகளை ஒரு குடும்பத்திற்குள் மாத்திரம் நிறைவேற்றப்பட வேண்டிய தனிப்பட்ட பொறுப்பாகக் கருதுவதை நாம் நிறுத்த வேண்டும். பராமரிப்புச் சேவைகள் என்பது சமூகத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பாகும். அது ஒரு பொருளாதாரப் பிரச்சினை மாத்திரமன்றி, பாலின சமத்துவம் தொடர்பான ஒரு பிரச்சினையுமாகும். அதேபோன்று, இதன் மூலம் அரச கொள்கை சார்ந்த விடயங்களும் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்படுகின்றன எனக் குறிப்பிட்டார்.
பராமரிப்புப் பொருளாதாரத்திற்காக முதலீடு செய்வது சமூக நலன்புரிக்காக மேற்கொள்ளப்படும் செலவினம் மாத்திரமன்றி, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மனித மூலதனத்தைப் பலப்படுத்தும் மூலோபாய முதலீடாகும் என்பதை வலியுறுத்திய பிரதமர், நியாய விலையிலான சிறுவர் பராமரிப்புச் சேவைகள், தரமான ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி, முதியோர் பராமரிப்புச் சேவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவு மற்றும் பலமான சமூக பாதுகாப்பு முறைமை என்பவற்றின் மூலம் பெண்கள் அதிகளவில் தொழிலாளர் படையில் இணைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதுடன், அதன் மூலம் பராமரிப்புத் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி, குடும்பங்களும் சமூகங்களும் பலமடைகின்றன என்றும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மேலும், வரவுசெலவுத் திட்டம் என்பது வெறும் நிதி சார்ந்த ஆவணம் மாத்திரமல்ல. அது ஒரு நாடு என்ற வகையில் நமது முன்னுரிமைகளைப் பிரதிபலிக்கும் ஒன்றாகும். அதன் மூலம் அரச வளங்களுக்கான முதலீடுகளை ஒதுக்குவது தொடர்பாக நாம் எடுக்கும் தீர்மானங்கள் மட்டுமன்றி, நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம், நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியத் தேவையாகக் கருதப்படுவது எது என்பதும் தெளிவுபடுத்தப்படுகின்றது எனக் குறிப்பிட்ட பிரதமர்,
போட்டித்தன்மைமிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு, பெண்கள் பொருளாதார நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கேற்கக்கூடிய சமூக உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படுவது அத்தியாவசியமாகும் என்பதை வலியுறுத்தினார்.
அத்தோடு, பராமரிப்புச் சேவைகளைப் பலப்படுத்துவதில் பாராளுமன்றத்தின் பொறுப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
பாராளுமன்றத்தின் பொறுப்பானது அரச செலவினங்களை அங்கீகரிப்பதோடு மாத்திரம் வரையறுக்கப்படலாகாது என்றும், பராமரிப்புச் சேவைகளுக்கான உள்கட்டமைப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் ஊதியமின்றி ஆற்றப்படும் பராமரிப்புச் சேவைகள் மீதான சுமையைக் குறைத்துப் பொதுச் சேவைகளுக்கான முதலீடுகளை ஒதுக்குதல் ஆகியன வரவுசெலவுத் திட்டத்தில் சரிவர நடைபெறுகின்றனவா என்பதை உறுதிப்படுத்துவதும் அதன் பொறுப்பாகும் என்றும், கொள்கை வகுப்பிற்கு வலுவான சான்று அடிப்படையிலான அடித்தளம் அவசியமானது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவியும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான, சரோஜா சாவித்திரி போல்ராஜ், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள், இராஜதந்திரப் பிரதிநிதிகள், இலங்கையிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் ஜனநாயகத்திற்கான அறக்கட்டளையின் (WFD) பணிப்பாளர் மற்றும் பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், துறைசார் நிபுணர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு