ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு சிறு பிரிவின் விருப்பமாகவன்றி முழு நாட்டினதும் கலாசாரமாக மாற வேண்டும். -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
ஊழல் எதிர்ப்புச் சட்டம் மற்றும் அறநேர்மை என்ற கருப்பொருளின் கீழ் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுடன் இணைந்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் நடைமுறைப்படுத்தபடும் இலஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்கள் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில் நடத்தப்படவுள்ள நிகழ்ச்சித் தொடரின் அங்குரார்ப்பண செயலமர்வு ஆகஸ்ட் 28 ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள மேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நாடளாவிய ரீதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த செயலமர்வில் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர்,
“நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் இடையிலான முதன்மையான தொடர்புப் புள்ளியை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும், நாங்கள் வழங்கும் ஒவ்வொரு சேவையும், உங்கள் மூலமே மக்களை சென்றடைகிறது.
இதன்போது பல்வேறு துறைகளில் அபிவிருத்தியை உருவாக்குவதுடன், குடிமக்களின் நம்பிக்கையையும் வளர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் அங்கு ஊழல் மற்றும் மோசடி உட்பட பல ஆபத்துகள் எழக்கூடும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, நாம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும்.
ஊழல் என்பது ஒரு உலகளாவிய சவாலாகும். உலகப் பொருளாதார மன்ற அறிக்கையின்படி, ஊழல் காரணமாக உலகப் பொருளாதாரம் ஆண்டுதோறும் சுமார் 3.5 டிரில்லியன் டொலர்களை இழக்கிறது. ஆனால் தீவிர மற்றும் முழுமையான வறுமையை முடிவுக்குக் கொண்டுவர தேவைப்படுவது 70-325 பில்லியன் டொலர்கள் வரை மட்டுமே ஆகும். இது ஊழல் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை தெளிவாகக் காட்டுகிறது. இந்த வழியில், ஒரு பொருளாதாரம் சுகாதாரம், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு போன்ற அத்தியாவசிய சேவைகளுக்குக் கிடைக்கும் பணத்தை இழக்கிறது. பொதுப் பணம் வீணடிக்கப்படுவது மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் சமூக சேதத்தையும், பொதுமக்களின் நம்பிக்கையையும் நீர்த்துப் போகச் செய்கிறது.
நாம் ஊழலைப் பற்றிப் பேசும்போது, அதை பாரிய அளவிலான ஊழல், சிறிய அளவிலான ஊழல் என்று வகைப்படுத்துகிறோம். அதனால் என்ன பயன்? அது ஒரு கலாசாரமாகிவிட்டது. அதை மாற்றுவதுதான் முக்கியம். ஊழலின் தாக்கத்தை சமூகத்தில் நிறுத்துவதுதான் முக்கியம். ஊழல் நிறைந்த ஒரு கலாசாரத்தில், விடயங்களைச் செய்ய தொடர்புகள் அல்லது பணம் தேவை. ஆனால் பெரும்பான்மையானவர்கள் அத்தகைய தொடர்புகள் இல்லாதவர்கள். இந்த நாட்டில் இதுபோன்றவர்களால் எப்படி விடயங்களைச் செய்துகொள்ள முடியும்?
இந்த யதார்த்தத்தை, இந்த ஊழல் நிறைந்த கலாசாரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை மாற்ற வேண்டியவர்கள் நீங்கள்தான். இங்குள்ள உங்களில் பெரும்பாலோர் இந்த ஊழல் நிறைந்த கலாசாரத்தை மாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குழு. இப்போது அதை ஒரு யதார்த்தமாக்க நமக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. நாம் எமது குடிமக்களுக்குப் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். நாம் நியாயமாக நடந்து கொள்கிறோம் என்பதை அவர்கள் உணர வேண்டும். அரச வளங்கள் திறம்படவும் வெளிப்படையாகவும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்பதை வார்த்தைகள் மூலமாக மட்டுமன்றி, செயல்கள் மூலமாகவும் நிரூபிப்பது மிக முக்கியம்.
ஆனால் மாற்றம் என்பது அதிகாரிகளுடன் சண்டையிடுவதைக் குறிக்காது. அதிகாரிகளை மாற்றுவதைக் குறிக்காது. இந்த முறைமையை நாம் மாற்ற வேண்டும். இந்த மாற்றம் தொழில்நுட்ப மாற்றம் அல்ல. இது ஒரு கலாசார மாற்றம். ஒரு ஆன்மீக நிலை. இதை உருவாக்கவே நீங்கள் அனைவரும் இந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளீர்கள். அந்தச் சூழலை உருவாக்குவது, ஒரு முன்மாதிரியாக திகழ்வது மற்றும் வழிநடத்துவது உங்களுடைய பொறுப்பு என்பதை நான் அறிவேன். நீங்கள்தான் அதற்காகக் குரல் கொடுத்தவர்கள்.
ஆனால் இந்த ஊழல் எதிர்ப்பு கலாசாரத்தை எங்கள் குழுவிற்குள் மாத்திரம் வைத்துக்கொண்டு, ஒரு குழுவாக பிரிந்து நிற்பது போதாது. முழு நாட்டிற்கும் ஒரு கலாசாரமாக இதை மாற்றுவதே எங்கள் சவால். இதற்கு அரசு இயந்திரம் மற்றும் பொது சமூகம் இரண்டையும் கையாளும் ஒரு விரிவான அணுகுமுறை தேவைப்படுகிறது. சட்டத்தை வலுப்படுத்துதல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொது செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றைத் தாண்டிய அணுகுமுறை இதற்குத் தேவைப்படுகிறது.
"அதற்கு, நாம் நமது மனசாட்சியை விழிப்படையச் செய்ய வேண்டும். இது ஒரு போர் அல்ல. ஆனால் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்திற்கான உங்கள் பொறுப்பை வலிமையுடனும் தைரியத்துடனும் நிறைவேற்ற, தேவையான தலைமையை வழங்குங்கள்" என்று பிரதமர் மேலும் கூறினார்.
இந்நிகழ்வில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எஸ்.ஏ. திசாநாயக்க, புதிய உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பல அரச அதிகாரிகள் பங்கேற்றனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு