பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

மூன்றாண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் தாய்லாந்து பயணம்...

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் நடைபெறும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (BIMSTEC) அமைப்பின் 6 ஆவது உச்சி மாநாட்டில் பங்குபற்றும் தலைவர்களுக்கான இராப்போசன விருந்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (03) கலந்து கொண்டார்.

பிம்ஸ்டெக் 6வது உச்சிமாநாடு தாய்லாந்தின் பேங்கொக் நகரில் ஏப்ரல் 4ஆம் திகதி (இன்று) நடைபெறவுள்ளதுடன், அதில் பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று பிற்பகல் 5.55 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக் நகரில் உள்ள சுவர்ண பூமி விமான நிலையத்தை சென்றடைந்தார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் இந்த ஆண்டு BIMSTEC உச்சிமாநாட்டின் கருப்பொருள், "சுபீட்சம், மீளாற்றல் மற்றும் திறந்த தன்மை" என்பதாகும்.

பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியான்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே BIMSTEC உச்சிமாநாட்டின் நோக்கமாகும்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமர் ஹரிணி அமரசூரிய ஜேர்மனி ஜனாதிபதியுடன் சந்திப்பு.

தொழிற்கல்வி மற்றும் பொருளாதார உறவுகளை பலப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்.

அண்மையில் ஜேர்மனியின் ஹம்பேர்க் நகருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே தொழிற் கல்வி மற்றும் பொருளாதார கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, அவர் 102வது கிழக்கு ஆசிய நட்புறவு விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதுடன், ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் வோல்டர் ஸ்டைன்மியரையும் சந்தித்தார். மேலும், முதலீடு, கல்வி மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்த பல உயர்மட்ட கலந்துரையாடல்களிலும் பிரதமர் பங்கேற்றார்.

ஜேர்மன் ஆசிய பசுபிக் வர்த்தக சங்கத்தின் (OAV) வருடாந்த கூட்டத்தில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட பிரதமர், வர்த்தக தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் மத்தியில் உரையாற்றியதுடன், இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்தும் கருத்துக்களை வெளியிட்டார். அபிவிருத்தியடைந்து வரும் முதலீட்டு பிராந்தியமாக இலங்கையின் சாத்திய வளங்கள் குறித்தும் அவர் வலியுறுத்தினார். இலங்கையில் இயங்கி வரும் 160க்கும் மேற்பட்ட ஜேர்மன் நிறுவனங்களின் பங்களிப்பைப் பாராட்டிய அவர், வர்த்தகம் மற்றும் வர்த்தகத் துறையில் மேலும் ஒத்துழைப்பைப் பேணுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற வகையில், ’தொழிற் கல்வி மற்றும் பயிற்சிக்கான ஜெர்மன்-ஆசிய மன்றத்தில்’ பிரதமர் சிறப்புரை ஆற்றினார். இலங்கையில் தொழிற்கல்வித் துறையில் ஜேர்மனியின் பல தசாப்தகால ஆதரவைப் பாராட்டிய அவர், தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்ப தொழிற்பயிற்சியை நவீனமயமாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், ITECH தொழிற்கல்வி பாடசாலை மற்றும் NXP மற்றும் DESY போன்ற ஜெர்மன் ஆராய்ச்சி நிலையங்களுக்கும் விஜயம் செய்த பிரதமர் இரு நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் தகவல் தொழிநுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கைத்தொழில்களில் புதிய வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினார்.

ஜேர்மன் ஜனாதிபதி ஸ்டெய்ன்மியருடன் பிரதமர் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, சமூக பாதுகாப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். வர்த்தக வட்டமேசை கலந்துரையாடலொன்றிலும் பங்கேற்ற பிரதமர், ஜெர்மன் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பொருளாதார விரிவாக்கம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பேண்தகு அபிவிருத்தி முயற்சிகள் குறித்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

இந்த விசேட சந்திப்புகளில் பிரதமருடன் ஜேர்மனிக்கான இலங்கைத் தூதுவர் வருணி முத்துக்குமாரன மற்றும் தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

உலக மரபுரிமை சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் தலையீடு பாராட்டுதற்குரியது. - பிரான்சில் இடம்பெற்ற யுனெஸ்கோ சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

அனுராதபுரம் இலங்கையின் மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்தாகும்.

நாட்டின் வரலாற்று சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் தலையீடு பாராட்டுதற்குரியது. அனுராதபுரம் இலங்கைக்கு மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்து என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

பிரான்சிலுள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் ஏப்ரல் முதலாம் திகதி ’இலங்கையின் உலக மரபுரிமை சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான ஒன்றிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறை’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற சர்வதேச நிபுணர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் இணைந்து யுனெஸ்கோ ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில், கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்தும்வாய்ந்த UNESCO உலக மரபுரிமை சொத்தான அனுராதபுரத்தை பாதுகாப்பதற்கான நிரந்தர உபாய மார்க்கங்களை கலந்துரையாடும் வகையில் சர்வதேச நிபுணர்களின் பங்கேற்புடன் இந்த மாநாடு இடம்பெற்றது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.

யுனெஸ்கோ மற்றும் இலங்கைக்கிடையிலான தொடர்புகள் 75 வருடங்களை அண்மிக்கும் தருணத்தில் யுனெஸ்கோ சர்வதேச மாநாட்டில் உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஓத்ரி அசூலே அவர்கள் கடந்த ஜூலை மாதம் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் பிரதிபலனாக அனுராதபுரத்தை பாதுகாக்கும் வகையில் இந்த மாநாடு இடம்பெறுகிறது.

யுனெஸ்கோ மற்றும் இலங்கைக்கிடையிலான நீண்டகால ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கும், கலாசாரங்களுக்கிடையிலான உரையாடல், மரபுரிமைகளை பாதுகாத்தல், கல்வி, நிலைபேறான அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் இந்த மாநாடு கைகொடுக்கும்.

எதிர்கால சந்ததியினருக்கென கலாசார பாரம்பரியத்தை பாதுகாத்து முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை பலப்படுத்துவதற்கு உலகளாவிய தலைவராக யுனெஸ்கோவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு முன்னரை விடவும் மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படும் காலப்பகுதியில் நாம் உள்ளோம். கலாசாரத்திற்கென முன்னர் இல்லாத மகத்தான வரவேற்பைப் பெறுதல், உலக அமைதி, அபிவிருத்திக்கான அறிவுத்திறன் மற்றும் புத்தாக்கங்களை பயன்படுத்தல், AI தொழில்நுட்பத்தை உயர் நெறிமுறைகளுடன் கையாளுதல், நிலைபேறான கல்வி, சமுத்திர உயிரியல் பல்வகைத்தன்மை மற்றும் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் திறனை மேம்படுவதற்காக யுனெஸ்கோ எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை என்பதுடன் காலத்திற்கு ஏற்றவை.

கலாசார முக்கோணம் நிறுவப்பட்டுள்ள அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை இராச்சியங்களில் காணப்பட்ட மிகவும் முன்னேற்றகரமான நாகரிகம் மற்றும் இயற்கையை பாதுகாப்பதற்கு 1980களிலிருந்து யுனெஸ்கோவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

எமது அரசு இனவாதத்தை புறக்கணிக்கிறது. அனைவருக்கும் சமமான உரிமைகளுடன் அனைவரையும் ஒன்றிணைக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. குரோத அரசியல் இலாபங்களுக்கு எதிராகவும், மக்கள் பிளவுபடுவதை விரும்பாதவர்களுமே இந்த தேசிய மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றியுள்ளனர்.

எதிர்காலத்தில் இலங்கையின் அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய 3 நகரங்களையும் தேசிய கலாசார நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு எமது அரசு திட்டமிட்டுள்ளது.

இதேவேளை மியன்மார் மற்றும் தாய்லாந்தில் ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தினால் உருவாகியுள்ள பேரழிவுகள் தொடர்பில் அந்த நாடுகளின் அரசுகள் மற்றும் மக்களுக்கு இலங்கை ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிட்டார்.

யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் ஓத்ரி அசூலே, இலங்கையின் புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹிணிதும சுனில் செனவி உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் மற்றும் சர்வதேச நிபுணர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.

பிரதமர் ஊடக பிரிவு

யுனெஸ்கோவில் இடம்பெறவுள்ள உயர் மட்ட கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கை பிரதமர் பிரான்சிற்கு விஜயம்.

உலக பாரம்பரிய சொத்துக்களில் ஒன்றான இலங்கையின் புனித நகரமான அனுராதபுரத்தையும் அதனுடன் தொடர்புடைய வாழ்வியல் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறை’ என்ற தலைப்பில் சர்வதேச நிபுணத்துவ மாநாட்டின் உயர் மட்டப் பிரிவில் பங்கேற்பதற்காக இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பிரான்ஸ் தலைநகர் பெரிசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். ஏப்ரல் முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை யுனெஸ்கோ தலைமையகத்தில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் Audrey Azoulay அவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

இலங்கையுடன் இணைந்து யுனெஸ்கோ அமைப்பு இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது. யுனெஸ்கோவில் உலக பாரம்பரிய மரபுரிமை சொத்தாக கருதப்படும் கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த அனுராதபுரத்தை பாதுகாப்பதற்கான நிலையான உத்திகளைப் பற்றி கலந்துரையாடுவதற்கென சர்வதேசத்தின் முன்னணி நிபுணர்களை இணைக்கும் சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஆர்வத்தைக் கொண்டுள்ள பிரிவுகள் தொடர்பில் பிரான்ஸ் அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகளுடனும் பிரதமர் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹிணிதும சுனில் செனவி உள்ளிட்ட பிரதிநிதிகளும் இந்த விஜயத்தில் இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.

இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சகோதர சகோதரிகள் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் இவ் வேளையில், அமைதி, சுபீட்சம் மற்றும் ஆன்மீக ஈடேற்றத்திற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆழ்ந்த ஆன்மீக ஈடுபாடு, இறை வழிபாடுகள் மற்றும் சுய ஒழுக்கத்தினை அதிகரிக்கும் ரமழான் மாதம் இரக்கம், தாராள மனப்பான்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் பெறுமானங்களை எமக்குக் கற்பிக்கிறது. இந்த புனித மாதத்தில் எமது சகோதர முஸ்லிம் சமூகத்தினர் கடைபிடிக்கும் நோன்பு ஒரு வணக்க வழிபாடாக மட்டுமன்றி, எமது ஆதரவற்ற சகோதர சமூகத்தினர் எதிர்கொள்ளும் போராட்டங்களை எமக்கு நினைவூட்டுகிறது. அது குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகத்துடனான எமது பிணைப்பை வலுப்படுத்தும் அதே வேளையில், பொறுமை, பணிவு மற்றும் நன்றியுணர்வு ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பமாகும்.

கருணை, மன்னிப்பு மற்றும் நற்பணிகளில் ஈடுபடல் போன்ற மனிதநேய செயற்பாடுகளையும் அது உட்பொதிந்துள்ளது. குறிப்பாக இக் காலப்பகுதியில் நிறைவேற்றப்படும் சகாத் மற்றும் சதகா ஆகிய நட்கருமங்கள் சமூகத்தில் தேவையுள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவத்தை பிரதிபலிப்பதுடன், உண்மையான சுபீட்சம் என்பது அடுத்த மனிதர்கள் எழுந்து நிற்க உதவுவதாகும் என்பதை எமக்கு நினைவூட்டுகிறது.

இவை உலகளாவிய பெறுமானங்களாகும் என்பதுடன், முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து சமூகங்களுடனும் மிக ஆழமாக பிணைந்திருக்க வேண்டியவையாகும். மேலும் இவை பல்வேறு சமயங்கள் மற்றும் நம்பிக்கை கோட்பாடுகள் மற்றும் சமூக பின்னணியில் உள்ள மக்களிடையே நல்லிணக்கத்தையும் புரிந்தணர்வையும் வளர்க்கின்றன.

நாம் வாழும் இலங்கைத் தேசம் பன்முகத்தன்மையினால் வளம்பெற்ற ஒரு தேசமாகும். பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பு மூலம் எமது எதிர்காலத்தை வலுப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த ஈகைத் திருநாள் எமக்கு நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, நீதி மற்றும் அமைதியை நோக்கி செயல்பட வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது.

ரமழான் மாதம் மகிழ்ச்சியான ஈத் கொண்டாட்டத்துடன் நிறைவடைகின்ற போதிலும், அது நம்மிடம் விட்டுச் செல்லும் இரக்கம், ஒற்றுமை மற்றும் நற்பண்பு ஆகிய பெறுமானங்களை எமது அன்றாட வாழ்வில் இணைத்துக்கொள்ள பாடுபடுவோம். இந்த அருள் நிறைந்த மாதம் எமக்கும் முழு தேசத்திற்கும் அமைதி மற்றும் சுபீட்சத்திற்கான செய்தியைக் கொண்டு வரட்டுமாக!.

உங்கள் அனைவருக்கும் இனிய நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்...!!!

கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடிய
2025 மார்ச் 31 ஆம் திகதி

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் செக் குடியரசின் தூதுவர் மற்றும் பிரதமருக்கு இடையில் சந்திப்பு.

இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவர் கலாநிதி எலிஸ்கா சிகோவா அவர்கள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை மார்ச் 25 ஆம் திகதி அலரி மாளிகையில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மீண்டும் வலியுறுத்தப்பட்டதுடன் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கான செக் குடியரசின் தொடர்ச்சியான ஆதரவை பிரதமர் இதன்போது பாராட்டினார். நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில், ஜனநாயக ஆட்சி முறைக்கான புதிய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் இரண்டு அமைதியான தேர்தல்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியமைக்கு தூதுவர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. தூதுவர் சிகோவா இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள ஒப்பந்தங்களின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதுடன், முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த தனது அரசாங்கத்தின் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையே விஞ்ஞானம் மற்றும் கல்வி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், அதற்று கல்வி பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்கள், ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் அறிவு பரிமாற்ற திட்டங்களைச் சேர்ப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

சூழல் பாதுகாப்பு மற்றும் நகர நிலைபேற்றுத்தன்மைக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட தேசிய அளவிலான திட்டமான " Clean Sri Lanka " திட்டம் குறித்து தூதுவருக்கு பிரதமர் விளக்கமளித்ததுடன், இலங்கையின் கலாசார பாரம்பரியம், இயற்கை சூழல் மற்றும் சுற்றுலா சூழல் முறைமைகளை அனுபவிக்க செக் நாட்டின் சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இச்சந்திப்பில், செக் குடியரசில் உள்ள இலங்கை தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பி.ஆர்.எஸ்.எஸ். குணரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு