உலகப் பொருளாதார மேடையில் இலங்கையின் புதிய மறுமலர்ச்சியைக் குறித்துக்காட்டிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் டாவோஸ் விஜயம் நிறைவு; சர்வதேச நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பிற்கான புதிய பாதை திறப்பு.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-குளோஸ்டர்ஸ் (Davos-Klosters) நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) 56ஆவது வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இலங்கையின் எதிர்காலப் பயணத் திசையையும் புதிய அரசாங்கத்தின் கொள்கை ரீதியான ஸ்திரத்தன்மையையும் உலகிற்குப் பெருமையுடன் எடுத்துக்கூறி, தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து ஜனவரி 23ஆம் திகதி நாடு திரும்பினார்.
தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்ட தூதுக்குழுவினர் கலந்துகொண்ட இந்த விஜயம், வெறும் இராஜதந்திரச் சந்திப்புகளுக்கு அப்பால், இலங்கை மீதான சர்வதேச நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பிய ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
இவ்விஜயத்தின் போது, பிரதமர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசாடோ கான்டா ஆகியோருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் மிக முக்கியமானவையாக அமைந்தன. இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயல்முறை, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடனான நிதி முகாமைத்துவம் குறித்து இதன்போது விளக்கமளித்த பிரதமர், இலங்கையின் எதிர்காலப் பயணத்திற்கு அந்த நிறுவனங்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை உறுதிப்படுத்தினார்.
இராஜதந்திர உறவுகள் ரீதியாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) சர்வதேசப் பங்காளர்களுக்கான ஆணையாளர் ஜோசப் சிகேலா மற்றும் அவசரகால முகாமைத்துவத்திற்கான ஆணையாளர் ஹட்ஜா லாபிப் ஆகியோரைச் சந்தித்த பிரதமர், இலங்கையில் ஏற்பட்ட ’திட்வா’ (Ditwah) சூறாவளியை எதிர்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய உதவிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்தார். அத்துடன், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் பணிகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீண்டகால ஒத்துழைப்பையும் அவர் இதன்போது உறுதிப்படுத்தினார்.
அதேபோன்று, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) நிர்வாகி அலெக்சாண்டர் டி குரூ உடனான சந்திப்பில், புதிய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணைக்கு அமைய, நல்லாட்சி மற்றும் பலமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்குவது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
உலகப் பொருளாதார மன்றத்தின் பிரதான பேச்சாளராகப் பிரதமர் கலந்துகொண்ட "Jobs Crisis in Emerging Markets" மற்றும் "Reskilling Revolution" ஆகிய அமர்வுகளில் முன்வைத்த கருத்துகள் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மனிதப் பண்புகளுக்கும் இடையிலான ’கால இடைவெளியைத்’ தவிர்ப்பதற்கு, ’கற்கும் சமூகம்’ (Learning Society) ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் தர்க்கரீதியாக விளக்கினார்.
இலங்கையில் 50,000 இளைஞர், யுவதிகளை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் முழுமையான நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய பயிற்சித் திட்டங்கள் மற்றும் தொழிற்கல்வி மறுசீரமைப்புகள் குறித்துத் தெளிவுபடுத்திய பிரதமர், குறிப்பாகச் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் மாற்றங்களுக்கு மத்தியில் தலைமுறைகளுக்கு இடையிலான இடைவெளி அதிகரிக்காத வகையில், "கற்கும் சமூகம்" ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதன் மூலம் உலகளாவிய கவனத்தை ஈர்த்தார்.
உலகப் பெண் தலைவர்கள் பற்றிய "World Woman Davos Agenda 2026" மாநாட்டில், "மாறிவரும் உலகிற்குத் தலைமை தாங்கும் பெண்கள்" எனும் தலைப்பில் பிரதமர் ஆற்றிய உரையில், தலைமைத்துவம் என்பது வெறும் பதவிகளில் அமர்வது மட்டுமல்ல, மாறாக இருக்கும் கட்டமைப்புகளைப் புனரமைப்பதாகும் என்று குறிப்பிட்டார். குறிப்பாகப் பெண்கள் மேற்கொள்ளும் ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளைப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய பகுதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதோடு, இலங்கையின் தற்போதைய நாடாளுமன்றத்திற்கு 20 பெண்கள் தெரிவு செய்யப்பட்டமை அனைவரையும் உள்ளடக்கிய ஆளுமைக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையில் உலகின் முன்னணி நிறுவனமான MAERSK இன் தலைவர் ரொபர்ட் உக்லா மற்றும் மென்சீஸ் (Menzies) விமான சேவை நிறுவனத்தின் தலைவர் ஹசன் எல் ஹூரி ஆகியோருடன் இலங்கையின் துறைமுகங்கள், விநியோகச் சங்கிலி மற்றும் விமானச் சேவைத் துறைகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்த பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்தார்.
அத்தோடு, சுவிட்சர்லாந்தின் Hamilton Medical மற்றும் Variosystems ஆகிய உயர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விஜயம் செய்த பிரதமர், சுவிட்சர்லாந்தின் இரட்டைத் தொழிற்பயிற்சி (Dual Vocational Training) மாதிரியை இலங்கைக்குப் பொருத்தமான வகையில் அறிமுகப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தினார்.
பிராந்திய ஒத்துழைப்பைப் பலப்படுத்தும் வகையில் சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்தைச் சந்தித்துக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு ஒத்துழைப்பு குறித்துக் கலந்துரையாடியதோடு, பங்களாதேஷ் தலைமை ஆலோசகரின் விசேட பிரதிநிதி லட்பி சித்திக் அவர்களுடனும் இருதரப்பு உறவுகள் குறித்துக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார்.
சுற்றுலாத்துறை தொடர்பாக யூரோ நியூஸ் (Euronews Hub) இல் நடைபெற்ற கலந்துரையாடலில், சுற்றுலாத்துறையை "மென் அதிகாரம்" (Soft Power) மற்றும் இராஜதந்திர மூலதனமாகப் பயன்படுத்துவதன் முக்கியத்தைப் பிரதமர் வலியுறுத்தினார்.
தனது விஜயத்தின் நிறைவு அம்சமாகச் சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கை வர்த்தக மற்றும் தொழில்முறைச் சமூகத்தினரையும், சுவிஸ் வர்த்தகப் பிரதிநிதிகளையும் சந்தித்த பிரதமர், இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்காக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் சர்வதேச முதலீட்டாளர்களும் வழங்கக்கூடிய நடைமுறைச் சாத்தியமான பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.
பிரதமரின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க டாவோஸ் விஜயத்தின் மூலம், இலங்கை என்பது வெறும் உதவி பெறும் நாடு மட்டுமல்ல, மாறாக உலகின் புதிய போக்குகளை இனங்கண்ட, கொள்கை ரீதியான ஸ்திரத்தன்மையைக் கொண்ட, மனித கௌரவத்தை மையமாகக் கொண்ட ஒரு முற்போக்கான நாடாகும் என்பதை உலக அரங்கில் உறுதிப்படுத்த முடிந்தது. இவ்விஜயத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நன்மதிப்பும் நம்பிக்கையும் இலங்கையின் எதிர்கால அபிவிருத்திப் பாதையை மேலும் பிரகாசமாக்க உதவும்.
பிரதமர் ஊடகப் பிரிவு





