சிறுவர் சுகாதார மேம்பாட்டிற்கான தேசிய தொடர்பாடல் திட்டம் (SBCC) அங்குரார்ப்பணம்! - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய
முன்பள்ளி ஆசிரியர் பயிற்சியை முறையாக முன்னெடுத்துச் செல்லவும் முன்பள்ளிகளின் தரத்தை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை
முன்பள்ளிக் கல்வியை ஒரு கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கும், அதனை ஒரு பொதுவான கலைத்திட்டத்திற்குள் உள்வாங்குவதற்கும், ஆசிரியர் பயிற்சியினைச் சீராக முன்னெடுத்து அதன் தரத்தை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகம், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, யுனிசெப் (UNICEF) நிறுவனம் மற்றும் Clean Sri Lanka திட்டம் ஆகியன இணைந்து, ஆரம்பகாலச் சிறுவர்களின் சமூகம் மற்றும் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகச் சிறுவர் சுகாதார மேம்பாட்டிற்கான தேசிய தொடர்பாடல் திட்டத்தை (SBCC) அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இன்று (10) அலரி மாளிகையில் வைத்து இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
ஆரம்பகாலக் குழந்தைப்பருவ வளர்ச்சியானது, மனித இன வளர்ச்சிக்கும் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் பிரதான காரணியாக அமைகின்றது. பிள்ளைகளின் எதிர்காலம், ஆரம்பகாலக் குழந்தைப்பருவ வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது என்பது நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையாகும். ஒரு பிள்ளையின் வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசியமான பல விடயங்கள் ஐந்து வயது வரையிலான காலப்பகுதியிலேயே நிகழ்கின்றன. அக்காலப்பகுதியில் பிள்ளை பெறும் அனுபவங்கள், அரவணைப்பு மற்றும் அன்பு ஆகியன மிகவும் தீர்க்கமானவையாக அமைகின்றன.
ஒரு பிள்ளை பெரியவராக உருவாவதற்குச் சிறுவயதில் பெறும் சமூகமயமாக்கலின் தாக்கம், இடைத்தொடர்புகள் மற்றும் சூழலின் செல்வாக்கு ஆகியன அடிப்படையாக அமைகின்றன. ஒருவர் வளர்ந்த பின்னர் அவரை மாற்றியமைக்க முடியாத அளவிற்கு ஆரம்பகாலக் குழந்தைப்பருவ வளர்ச்சி வாழ்க்கை மீது செல்வாக்கு செலுத்துகின்றது.
பிள்ளைகளின் செயற்பாடுகள் குறித்துப் பெரியவர்கள் வெளிப்படுத்தும் பிரதிபலிப்புகள், அவர்களுடன் பழகும் விதம், அவர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு ஆகிய அனைத்தும் மிக முக்கியமானவையாகும். எனவே, பிள்ளைகளின் ஆரம்பகாலக் குழந்தைப்பருவ வளர்ச்சியைப் பெற்றோரின் பொறுப்பாக மாத்திரம் எம்மால் ஒருபோதும் கருத இயலாது. இது அனைத்துப் பிரஜைகளினதும் கூட்டுப் பொறுப்பாகும்.
ஒரு பிள்ளையைச் சிறந்த பிரஜையாக எம்மால் தனித்து உருவாக்க இயலாது. எமது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போதும், எமது பெற்றோரைப் போலவே எமது வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்திய பெருமளவானோர் இருக்கின்றனர் என்பது தெரியவருகின்றது. எமக்கு அன்பையும் பாதுகாப்பையும் வழங்கிய பலர் இருக்கின்றனர். அவர்கள் அனைவரினதும் பங்களிப்பாலேயே இன்று நாம் இந்த நிலையை எட்டியுள்ளோம். ஆகையினால் பிள்ளைகளைப் பாதுகாப்பாதை ஒரு சமூகப் பொறுப்பாகவே எமது அரசாங்கம் கருதுகின்றது. ஒரு பிள்ளையை உருவாக்குவதில் அவருக்குக் கிடைக்கவேண்டிய அரவணைப்பு, பாதுகாப்பு, கல்வி மற்றும் சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல் என்பது ஒரு சமூகப் பொறுப்பாகும் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்துவதில் ’கிளீன் ஸ்ரீலங்கா’ அமைப்பின் தலையீடு மிகவும் முக்கியமானதாக அமைகின்றது.
பிள்ளைகளுக்காக முன்பள்ளி ஆசிரியர்கள் விசேட பணியை ஆற்றுகின்றார்கள். பிள்ளைகளுக்கு அப்பருவத்தில் கிடைக்கும் அன்பு, அரவணைப்பு மற்றும் அவர்களுக்குச் செவிசாய்த்தல் என்பன பிள்ளைகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவையாக அமைகின்றன. அந்த வகையில் பிள்ளைகளின் வாழ்க்கையில் நீங்கள் ஒரு முக்கியமான பங்களிப்பைச் செய்கிறீர்கள். ஆரம்பகாலக் குழந்தைப்பருவ வளர்ச்சி குறித்துக் கல்விக் கொள்கையொன்று உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. UNICEF நிறுவனம் இதற்காக எமக்குத் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்குகின்றது. முன்பள்ளிக் கல்வியை ஒரு கட்டமைப்பிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. முன்பள்ளிக் கல்வியை ஒரு பொதுவான கலைத்திட்டத்திற்குள் கொண்டு வருவதற்கும், ஆசிரியர் பயிற்சியை முறையாக முன்னெடுப்பதற்கும், அதன் தரத்தை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆரம்பகாலக் குழந்தைப்பருவ வளர்ச்சி என்பது கல்வித்துறையில் ஒரு விசேட துறையாக இனங்காணப்பட்டு, அத்துறை மீது அரசாங்கம் கவனம் செலுத்தும், எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ்,
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் 2026ஆம் ஆண்டிற்கான முதன்மை இலக்கு, ஆரம்பகாலக் குழந்தைப்பருவ வளர்ச்சியைத் தரப்படுத்துவதும் மேம்படுத்துவதுமாகும். தாயின் மடியிலிருந்தும் தந்தையின் தோளிலிருந்தும் பிரிந்து முன்பள்ளி ஆசிரியர்களிடம் வரும் பிள்ளை, தாயிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் பெற்ற அதே அரவணைப்பையும் அன்பையும் ஆசிரியர்களிடமிருந்தும் எதிர்பார்க்கின்றது. ஆசிரியர்கள் அச்சிறுவர்களைப் பார்க்கும் விதத்திலும், அவர்களுடன் பேசும் வார்த்தைகளிலும் அந்த அன்பை உணரச் செய்வது ஆசிரியர்களின் கடமையாகும். ஒரு பிள்ளை சூழலை நேசிக்கவும், மற்றவரை மதிக்கவும் அவர்களுக்குக் கிடைக்கும் அன்பும் பாதுகாப்பான சூழலுமே காரணமாக அமைகின்றன, எனக் கூறினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ:
"எதிர்க்காலத்தில் இந்நாட்டைப் பொறுப்பேற்கவுள்ள தலைமுறையை, இன்று நாம் எதிர்கொள்ளும் பல்வேறு தடைகள் மற்றும் இன்னல்களிலிருந்து விடுபட்ட ஒரு அழகான தலைமுறையாக மாற்றுவதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்காகப் பொருத்தமான குழுவினரே இந்தத் திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
எமது நாட்டு மக்களை ஆரோக்கியமானவர்களாகக் கட்டியெழுப்புவதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டால், குறிப்பாகத் தொற்றா நோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது அவசியமாகும். இன்று 3 முதல் 5 வயது வரையிலான பிள்ளைகளே, 2040ஆம் ஆண்டளவில் 18 முதல் 20 வயதை எட்டிய தலைமுறையினராக இருப்பார்கள். இத்தலைமுறையைத் தொற்றா நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு இவ்வாறானதொரு தொடர்ச்சியான வேலைத்திட்டம் அவசியமாகும். அதற்கு ஆரம்பகாலக் குழந்தைப்பருவத்திற்கு முன்னரான தாயின் கருவறையில் இருக்கும் காலத்திலிருந்தே தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பகாலக் குழந்தைப்பருவ வளர்ச்சி மையங்களின் ஆசிரியர்களாகிய நீங்கள் பொறுப்பேற்பது, எதிர்காலத்தில் இந்நாட்டின் பாரிய மாற்றத்திற்காக ஆற்றப்பட வேண்டிய பெரும் பணியேயாகும, எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய, மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமால் சுதர்ஷன, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) இலங்கைக்கான பிரதிநிதி Emma Brigham, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள்) ரஸல் அபோன்சு, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (கிளீன் ஸ்ரீலங்கா) எஸ். பி. சி. சுகீஸ்வர, அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், முப்படைத் தளபதிகள், துறைசார் அமைச்சுகளின் அதிகாரிகள், மாகாண சபை அதிகாரிகள், முன்பள்ளி ஆசிரியர்கள், முன்பள்ளிச் சிறுவர் சிறுமியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு





