சரியான தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு மக்களின் பங்கேற்புடனான முறையான பொறிமுறை அவசியம்! - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டினை வழமை நிலைக்குக் கொண்டுவரும் செயற்பாட்டிற்கு சரியான தரவுகள் அவசியமென்றும், அந்தத் தரவுகளைச் சேகரிப்பதற்கு மக்கள் பங்கேற்புடனான முறையான பொறிமுறை அவசியமென்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டினை வழமை நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பில் நேற்று 2025 டிசம்பர் 10ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைக் கூறினார்.
இயற்கை அனர்த்தங்களைக் குறைத்து, இயற்கையுடன் இணைந்து நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்துப் பேராசிரியர் நிஹால் பெரேரா அவர்கள் விசேட உரையை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து, கருத்துத் தெரிவித்த பிரதமர்:
புதிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நோக்கிச் செல்லும்போது, நாம் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை என்னவென்றால், பல்வேறு தரப்பிலிருந்து பெறப்படும் தரவுகளை ஓரிடத்தில் தொகுப்பதற்குரிய பொறிமுறை இல்லாமையேயாகும்.
அடித்தளத்தில் இருக்கும் அரச உத்தியோகத்தர்களினதும் பொதுமக்களினதும் பங்கேற்புடனான தரவு சேகரிப்புப் பொறிமுறை ஒன்றினை உருவாக்குவது மிகவும் அவசியமாகும். கிராமிய மட்டத்திலான தகவல்களைச் சரியாக அறிந்திருப்பது அவர்களே. அதனால், பிரதேச மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் சரியான தரவுகளைச் சேகரிப்பதற்கான பொறிமுறை ஒன்றினைத் தயாரித்துக்கொள்வது மிகவும் முக்கியமானதெனப் பிரதமர் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த வெகுசன ஊடகப் பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன:
மக்கள் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எந்தளவிற்குப் பிரயோசனமானவை என்பதை ஏற்பட்ட அனர்த்த நிலைமையின்போது நாம் நன்றாகப் புரிந்துகொண்டோம். வெள்ள நிலைமையின்போது கடுவெல பிரதேச மக்கள் பங்கேற்புடன் நாம் செயற்பட்ட விதம் மிகவும் வெற்றிகரமானதாக அமைந்தது. அதன் போது எமக்கு கொட்டகச் சபை முறைமை மிகவும் பிரயோசனமாக இருந்தது. தரவு சேகரிப்புச் செயற்பாட்டிற்கும் சமூக சக்தி கொட்டகச் சபை போன்றதொரு பொறிமுறையைப் பயன்படுத்த முடியுமானால் மிகவும் பிரயோசனமாக அமையும்.
பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்கள்:
தரவுகள் தொடர்பான விடயத்தில் அரச நிறுவனங்களுக்கிடையில் முறையான தொடர்பின்மை பிரதான பிரச்சினையாகும். நிறுவனங்களுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாமையும், தமது எல்லைக்குள் உள்ள கடமைகளைச் செய்வதற்கு மாத்திரம் அதிகாரிகள் செயற்படுவதும் இந்த நிலைமை ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது. அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் ஒன்றிணைத்த தரவு சேகரிப்புப் பொறிமுறை ஒன்றைத் தயாரித்துக்கொள்வது மிகவும் முக்கியமானதெனத் தெரிவித்தார்.
தரவுகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பதன் அவசியம் மற்றும் அது தொடர்பில் பிரதேச மட்ட அதிகாரிகளையும் மக்களையும் அறிவூட்ட வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தக் கலந்துரையாடலின்போது வலியுறுத்தப்பட்டது.
பிரதமரின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு





