அரசாங்கத்தின் பங்களிப்பில் கல்வி பயின்று, பாராட்டுப் பெறும் நீங்கள், சமூகத்திற்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் உயர்தரப் பரீட்சை சாதனையாளர்களைப் பாராட்டும் நாடு தழுவிய நிகழ்ச்சியின் ஒன்பதாவது கட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் 2025 டிசம்பர் 14ஆம் திகதி, அலரி மாளிகையில் நடைபெற்றது.
இதன் போது, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மேல் மாகாண மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 361 சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர். இவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் 36.1 மில்லியன் ரூபாய் பெறுமதியான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.
விழாவில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
ஜனாதிபதி நிதியம் மக்களின் நிதியம் என்றும், அது மக்களுக்குச் சொந்தமானது என்ற உணர்வை ஏற்படுத்த அரசாங்கம் விசேட முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தார்.
"இதுவரை, விசேட அதிகாரம் அல்லது பதவிகளை வகிப்பவர்களுக்கு மாத்திரம் நன்மையைப் பெறுவதற்கு இலகுவாக இருந்த, சாதாரண மக்கள் பயனடைவது கடினமானதும் சிக்கலானதுமான செயல்முறையாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை, இணையவழியில் (Online) மற்றும் தத்தமது பிரதேச செயலகங்கள் ஊடாக விண்ணப்பிக்கக்கூடிய எளிய முறைமைக்கு கொண்டுவர எமது அரசாங்கம் வழி வகுத்திருக்கின்றது.
இந்தச் செயற்திட்டங்கள் அனைத்தையும் நாம் மேற்கொள்வது, நமது மனித வளத்தை தற்போதைய உலகிற்கு ஏற்றவாறு மேம்படுத்தி, முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காகவே ஆகும். இன்றைய உலகின் சிக்கலான தன்மைகளைப் புரிந்துகொண்டு பயணிக்கக்கூடிய மனித வளத்தை உருவாக்க ஒரு அரசாங்கம் என்ற வகையிலேயே நாம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம்.
அந்த நோக்கத்திலேயே 2026 ஆம் ஆண்டு முதல் கல்வி முறையில் ஒரு மாற்றத்தை கொண்டுவர விசேட வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். உற்பத்தித்திறன் மிக்க நல்ல பிரஜையை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.
சுற்றுச்சூழலை நேசிக்கும், அதனைப் பாதுகாப்பதில் முன்னிற்கும், தலைமைத்துவப் பண்பு கொண்ட, கருணை மற்றும் கூட்டுமுயற்சி பற்றிய உணர்வுள்ள, ஜனநாயகத்தை மதிக்கும் பொறுப்புமிக்க மனித வளத்தை உருவாக்குவதே எமது தேவையாக இருக்கின்றது.
சகல அரசாங்கங்களும் உங்கள் கல்விக்காகப் பங்களித்துள்ளன. இந்தப் பங்களிப்பு, நாட்டின் அனைத்து மக்களினதும் வரிப் பணத்திலிருந்தே மேற்கொள்ளப்படுகிறது. ஆகையினால் அந்தச் சமூகத்திற்காகச் சேவையாற்றவும், தலைமைத்துவத்தை வழங்கவும் கூடிய திறமையானவர்கள் நீங்கள் என்பதாலேயே, நீங்கள் எமக்கு மிகவும் பெறுமதியானவர்களாகின்றீர்கள்.
இன்று வழங்கப்படும் இந்தக் கௌரவமானது, நாம் உங்களுக்குகாக மேற்கொள்ளும் ஒரு முதலீடாகும். அரசாங்கத்தின் பங்களிப்பில் கல்வி பயின்று, அரசாங்கத்தின் பங்களிப்பினால் பாராட்டுப் பெறும் நீங்கள், சமூகத்திற்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இருக்கின்றது" எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இந்த விழாவில் கருத்துத் தெரிவித்த தொழில் அமைச்சரும், நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான திரு. அனில் ஜயந்த,
மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களுக்கு நிதி உதவி பெறக்கூடிய நிதியமாகவே மக்கள் மத்தியில் ஜனாதிபதி நிதியம் பிரபலமாக இருந்துவந்தது. ஆயினும் புதிய அரசாங்கத்தின் கீழ், அதன் பயன்பாட்டுக்கான செயற்பரப்பு விரிவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அமைய கல்வியையும் ஒரு விசேட துறையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், எவரையும் கைவிடாது (Inclusivity), அனைவரையும் உள்வாங்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையும் ஜனாதிபதி நிதியமும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் திரு. ரோஷன் கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. சந்தன சூரியஆரச்சி, திரு. சந்திம ஹெட்டியாராச்சி, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, மேல் மாகாண ஆளுநர் திரு. ஹனிப் யூசுப், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், ஜனாதிபதி நிதியத்தின் முகாமைத்துவ சபை அதிகாரிகள், அரச அதிகாரிகள், புலமைப்பரிசு பெற்ற மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதமரின் ஊடகப் பிரிவு





