பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

இலங்கை சமூகத்தை அனர்த்த அபாயங்களிலிருந்து பாதுகாப்பதிலும், பேண்தகு அபிவிருத்திக்கு உதவுவதிலும் RIMES மேற்கொண்டுவரும் பணிகள் பாராட்டத்தக்கது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மே மாதம் 8 ஆம் திகதி கொழும்பில் உள்ள சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்ற ஆபிரிக்கா மற்றும் ஆசியாவிற்கான பிராந்திய கூட்டு பல் அனர்த்த முன் எச்சரிக்கை முறைமையின் (RIMES) நான்காவது அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகள் முக்கியமாக முகம்கொடுக்கும் ஆபத்துக்கள் பற்றி கண்காணித்தல், மதிப்பீடு செய்தல், தொடர்பாடல்களை மேற்கொள்ளுதல் மற்றும் முடிவுகளை எடுப்பதற்காக அந்த தகவல்களை பயன்படுத்துவதை எளிதாக்குவதற்காக 2009 ஏப்ரல் 30 ஆந் திகதி ஆபிரிக்கா மற்றும் ஆசியாவிற்கான பிராந்திய கூட்டு பல் அனர்த்த முன் எச்சரிக்கை முறைமை (RIMES) நிறுவப்பட்டது.

பிரதமர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்:

2017 ஆம் ஆண்டு பப்புவா நியூ கினியாவில் நடைபெற்ற மூன்றாவது அமைச்சர்கள் மாநாட்டில், RIMES இன் நான்காவது அமைச்சர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. உலகளாவிய COVID-19 தொற்றுநோய் மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு சவால்கள் காரணமாக இந்த மாநாடு இதுவரை ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், இன்று இந்த வாய்ப்பை நனவாக்க குறிப்பாக RIMES உட்பட காணி மற்றும் நீர்ப்பாசனம், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சு வழங்கிய ஆதரவை நாம் பாராட்ட வேண்டும்.

இயற்கை அனர்த்தங்களில், 2004 இல் நாம் சந்தித்த சுனாமி பேரனர்த்தமானது அண்மைய வரலாற்றில் நாம் சந்தித்த மிக மோசமான ஒரு அனர்த்தமாகும். அந்தப் பேரழிவு சுமார் 40,000 பேரின் உயிர்களை காவுகொண்டது. இந்த பேரழிவு நாட்டிற்கு ஏற்படுத்திய பொருளாதார மற்றும் சமூக வீழ்ச்சியையும், பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களை இழந்த பிள்ளைகளின் வலியையும் நாம் இன்னும் தாங்கிக் கொண்டிருக்கிறோம்.

இதுபோன்ற சூழ்நிலைகளில், இலங்கை சமூகத்தை அனர்த்த அபாயங்களிலிருந்து பாதுகாப்பதிலும், பேண்தகு அபிவிருத்திக்கு உதவுவதிலும் RIMES மேற்கொண்டுவரும் பணிகள் பாராட்டத்தக்கது. இதுபோன்ற சமூகப் பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்ற RIMES அமைப்பின் முயற்சிகளுக்கு நான் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, முழு இலங்கை மக்களினதும் உலகளாவிய சமூகத்தினதும் நலனுக்காக இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

இந்த நிகழ்வில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, தூதுவர்கள், RIMES உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சுக்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

உலக வங்கிக் குழுவின் தலைவர் பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் உலக வங்கி குழுமத் தலைவர் அஜய் பங்கா அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு மே 7 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கையின் அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் மூலோபாய ஒத்துழைப்பினை தொடர்ச்சியாக பேணுவது குறித்து கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.

இலங்கை முகம்கொடுத்த அண்மைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உலக வங்கி வழங்கிய ஆதரவிற்காக உலக வங்கிக் குழுவின் தலைவருக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பேண்தகு அபிவிருத்திக்கான அரசாங்கத்தின் திட்டம் குறித்தும் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த முறைமையைப் பாராட்டிய உலக வங்கி குழுமத் தலைவர் திரு. பங்கா, பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வேலை தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

சுகாதாரம், கல்வி, விவசாயம், சுற்றுலா மற்றும் உற்பத்தித் தொழிற்துறைகள் போன்ற முக்கியமான துறைகளில் முதலீடு செய்வது குறித்து இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக விவசாயம் மற்றும் அதன் முக்கிய துறைகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் சாத்தியக்கூறுகள் மற்றும் முக்கியத்துவம் குறித்தும் திரு. பங்கா தனது கருத்துக்களை தெரிவித்தார்.

புத்தாக்கம் மற்றும் உற்பத்தித்திறனுக்காக இந்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் சாத்தியப்பாடுகள் குறித்து ஆராய்வதை இலங்கையும் ஊக்குவித்தது.

வளர்ந்து வரும் தொழிற் துறைகளின் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்யும் வகையில் சுகாதாரக் கொள்கையை வலுப்படுத்தவும், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வியை விரிவுபடுத்தவும் அரசாங்கம் தொடர்ந்து பாடுபட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் உலக வங்கிக் குழுவின் விசேட ஆலோசகர் ட்ரெவர் கின்கெய்ட், மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான துறை பணிப்பாளர் டேவிட் சிஸ்லன், மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கான தேசிய பணிப்பாளர் கெவோர்க் சர்க்சியன், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் இமாத் ஃபகூரி இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா மற்றும் இலங்கைக்கான மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பி.கே.ஜி. ஹரிச்சந்திர, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் பொருளாதார விவகார (இருதரப்பு) பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் தர்ஷன பெரேரா மற்றும் அவ் அமைச்சின் வெளிவிவகாரத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் தம்மிக பிரேமரத்ன ஆகியோர் பங்குபற்றினர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

GSP+ கண்காணிப்பு பணியின் ஒரு பகுதியாக, பிரதமருக்கும் ஐரோப்பிய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய GSP+ கண்காணிப்புப் பணியின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய வெளி விவகார சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சார்லஸ் வைட்லி அவர்களை இன்று (மே 05) சந்தித்தார்.

ஐரோப்பிய ஒன்றியக் குழுவை வரவேற்ற பிரதமர், குறிப்பாக GSP+ சட்டகத்தின் ஊடாக, ஐரோப்பிய ஒன்றியத்துடனான கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் “Clean Sri Lanka” திட்டம் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

கலந்துரையாடலின் போது, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து பிரதமர் குறிப்பாக வலியுறுத்தியதுடன், போதைப்பொருள் கடத்தல், மனித கடத்தல் போன்றவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான சட்டத்தை இயற்றுவது குறித்தும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட தற்போதைய சட்ட சீர்திருத்தங்கள் குறித்தும் கவனப்படுத்தினார்.

இலங்கை அறிமுகப்படுத்தியுள்ள புதிய கொள்கைகளை, குறிப்பாக GSP+ பொறிமுறையின் முக்கிய நோக்கங்களுடன் இணங்கிச்செல்லும் கொள்கைகளை ஐரோப்பிய ஒன்றியக் குழு வரவேற்றது. GSP+ வரிச் சலுகைகளுக்காக மீளவும் விண்ணப்பம் செய்யும் முறை குறித்த வழிகாட்டுதலை அவர்கள் வழங்கியதுடன், இலங்கையின் முறையான அபிவிருத்தி முயற்சிகளை ஆதரிப்பதற்கான தமது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தினர். இந்த உரையாடலின் போது சர்வதேச நாணய நிதியத்தின் பங்கேற்பு மற்றும் பெண்களின் அரசியல் மற்றும் பொருளாதார பங்கேற்பை அதிகரிப்பதன் முக்கியத்துவம் குறித்து மேலும் கலந்துரையாடப்பட்டது. தொழிற்படையில் அதிக பெண்களை ஈர்க்கும் வகையில் குழந்தை பராமரிப்பு சேவைகள், முதியோர் பராமரிப்பு மற்றும் போக்குவரத்து போன்ற ஆதரவு முறைமைகளை மேம்படுத்துவதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

பொருளாதாரம், கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறைகள் மூலம் இலங்கையுடனான உறவுகளை மேம்படுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்துவதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கார்மென் மொரேனோ அவர்கள் இதன் போது தெரிவித்தார்.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணரத்ன உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சருக்கும் இலங்கை பிரதமருக்கும் இடையில் சந்திப்பு.

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகதானி, இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று (மே 4) அலரி மாளிகையில் சந்தித்தார்.

இந்த கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு நட்புறவு குறித்து மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதுடன், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், குறிப்பாக பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்புத் துறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான கூட்டு முயற்சிகளுக்கு ஜப்பானின் ஆதரவை அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார். சமுத்திரப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய உறவுகளில் இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம், குறிப்பாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். வெளிப்படைத்தன்மை, பொருளாதார சீர்திருத்தம் மற்றும் தேசிய மாற்றத்திற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

காலநிலை மாற்றம், மனிதாபிமான உதவி மற்றும் சமுத்திரப் பாதுகாப்பு போன்ற பொறுப்புகளை உள்ளடக்கியதாக இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் பங்கை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை பற்றிய தகவல்களையும் பிரதமர் பகிர்ந்து கொண்டார். வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட ஐந்து முக்கிய துறைகளில் இராஜதந்திர உறவுகளை மேலும் விரிவுபடுத்தவும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாட்டா (Akio Isomata) மற்றும் இரு நாடுகளின் அரசாங்கங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

உலகப் பொருளாதாரத்தில் ஆசியா ஒரு சக்தி வாய்ந்த நிலைக்கு மாறி வருகிறது. அந்தப் பொருளாதாரத்தில் எமது இடம் என்ன என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

முறைகேடுகளினால் பயனடைந்தவர்கள் அரசாங்கம் மேற்கொண்டுவரும் மாற்றங்களுக்கு தடைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்

நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மேலோட்டமாகவன்றி நிரந்தரத் தீர்வுகளை வழங்க அரசாங்கத்திடம் திட்டம் உள்ளது.

முறைகேடுகளினால் பயனடைந்தவர்கள் அரசாங்கம் மேற்கொண்டுவரும் மாற்றங்களுக்கு தடைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மேலோட்டமாகவன்றி நிரந்தரத் தீர்வுகளை வழங்க அரசாங்கத்திடம் திட்டம் உள்ளது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கடுவெல மற்றும் தெஹிவளை, கல்கிஸ்ஸை மாநகர சபைகளை மையமாகக் கொண்டு இன்று (03) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

நாங்கள் நாட்டைப் பொறுப்பேற்றபோது நாட்டின் நிலைமை உங்களுக்குத் தெரியும். வெறும் அரசியல் கலாசாரம் மட்டுமல்ல, அரச சேவையிலும் இதேபோன்ற மாற்றம் தேவை. நாங்கள் இப்போது அதைச் செய்துவருகிறோம்.

வெள்ளத்திற்கு எம்மிடம் உள்ள ஒரே தீர்வு நிவாரண சேவைகளை வழங்குவதுதான். நடக்க வேண்டியது அதுவல்ல. வெள்ளத்தைக் குறைப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் எமக்கு திட்டங்கள் தேவை. நாட்டின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் இதுதான் நடந்துள்ளது. மேலோட்டமான தீர்வுகளையே நாடுகிறார்கள், பிரச்சினையை சரியான முறையில் தீர்க்கவில்லை. அரசாங்க சேவையும் அதற்குப் பழக்கப்பட்டுள்ளது.

முறைகேடுகள் நிறைந்த ஒரு கலாசாரம் ஒரு சரியான முறைமையாக மாற்றப்படும்போது, அந்த முறைகேடுகளினால் பயனடைந்தவர்கள் இழப்பைச் சந்திப்பார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே, இந்த மாற்றம் நடக்காமல் தடுக்க பல்வேறு தடைகளை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

எப்படியிருந்தாலும், இந்த நாட்டை தற்போதிருக்கும் முறைமையுடன் முன் கொண்டுசெல்ல முடியாது. தவறான வழிமுறைகளால்தான் இந்த நாட்டின் பொருளாதாரம் இந்த அளவுக்கு சரிந்தது. அரசாங்கம் அந்த நிலைமையை மாற்றி திட்டமிட்ட முறைமையை செயற்படுத்தி வருகிறது, அதனால்தான் பொருளாதாரம் இப்போது ஓரளவுக்கு ஸ்திரமான நிலையை அடைந்துள்ளது. பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தாங்கும் வகையில் இந்த முறைமைகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தீர்மானங்கள் ஐரோப்பாவையும் ஆசியாவையும் கொந்தளிப்பான நிலைக்கு தளிளியுள்ளன. இந்த இந்த நாடுகள் தான் பொருளாதாரத்தை இயக்குகின்றன என்ற நமது பாரம்பரிய நம்பிக்கை மாறி வருகிறது. ஆனால் அந்த நிலைமைகளுக்கு மத்தியிலும் பொருளாதார வாய்ப்புகள் உருவாகின்றன. உலகப் பொருளாதாரத்தில் ஆசியா ஒரு சக்தி வாய்ந்த நிலைக்கு மாறி வருகிறது. அப்படியானால் அந்தப் பொருளாதாரத்தில் எமது இடம் என்ன என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். அதற்கு, எமது நாடு தனது சர்வதேச உறவுகளை முறையாக முகாமைத்துவம் செய்ய வேண்டும். நாம் வெளிப்படைத் தன்மையுடன் முறைமைகளை உருவாக்க வேண்டும். அந்த வகையில் ஸ்திரமான நிலைக்கு மாறுவதே எமது குறிக்கோள்.

ஆசிரியர் வெற்றிடங்களை இன்னும் நிரப்ப முடியவில்லை. திட்டமிடாமல் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டமையால் ஏற்கனவே ஒரு பெரிய நெருக்கடி உருவாகியுள்ளது. இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரச்சினையும் மேலோட்டமாக தீர்க்கப்பட்டிருக்கிறது, ஆனால் பிரச்சினை முறையாக தீர்க்கப்படவில்லை. மற்றுமொரு அரசாங்கத்திற்கு இனி எந்தப் பிரச்சினையும் ஏற்படாதவாறு நாம் ஒரு முறைமையின் பிரகாரம் செயற்பட வேண்டும்.

புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. இதற்குக் காரணம் புலமைப் பரிசில் பெறுவது பற்றியது அல்ல, மாறாக சிறந்த வசதிகள் கொண்ட பாடசாலைக்கு ஒரு பிள்ளையை மாற்றுவது பற்றியதாகும். இதைத் தீர்க்க, பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழவுகள் நீக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை இப்போது நாம் மேற்கொண்டுவருகிறோம். அரசாங்கம் இதையெல்லாம் திட்டமிட்ட முறையில் செயற்படுத்தி வருகிறது.

நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாங்கள் கண்டறிந்து, குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகளை உருவாக்கி வருகிறோம். சர்வதேச நம்பிக்கையைப் பெற்று, முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறோம். நாங்கள் படிப்படியாக முன்னேறி வருகிறோம்.

முன்னர் இருந்த அரசியல் கலாசாரம், பொலீஸார் சட்டத்தை முறையாக அமுல்படுத்துவதற்கு பெரும் தடைகளை உருவாக்கியது. இப்போது அந்த நிலைமைகள் சீராகி வருகிறது.

சிறந்த அரசியல் கலாசாரத்திற்குள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்திற்கு மக்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

உங்கள் பாடசாலை, வைத்தியசாலை மற்றும் அலுவலகத்தில் நடக்கும் மோசடிகளை நிராகரியுங்கள் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பல்கலைக்கழக மாணவரின் துயர சம்பவம் சமூகப் பிணைப்புகளில் ஏற்பட்டுள்ள முறிவை எடுத்துக்காட்டுகிறது

மே 07 ஆம் திகதி வெற்றியை அமைதியாக கொண்டாடுங்கள், எங்கள் புதிய பிரதிநிதிகள் பணிகளை ஆரம்பிக்க தயாராகுங்கள்

மே மாதம் 7 ஆம் திகதி வெற்றியை ஜனநாயக ரீதியாகவும் அமைதியாகவும் கொண்டாடுங்கள் என்றும் மோசடிக்கு எதிராக சமூகம் எழுந்திருக்க வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஹோமாகம, கிரிவந்த்துடுவ, தொம்பே, நாவலமுல்ல மற்றும் மாகம்மன ஆகிய இடங்களில் மே 2 ஆம் திகதி நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பின்வருமாறு கூறினார்.

எமக்கு இன்னும் நிறைய வேலைகள் உள்ளன. மிக முக்கியமான விடயம் எமது கல்வி முறையை சீர்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு முறையாகப் பயிற்சி அளிக்க வேண்டும். ஆசிரியர் வெற்றிடங்களை முறையாக நிரப்ப வேண்டும். பல ஆண்டுகளாக ஆசிரியர் நியமனங்கள் முறையாக நடைபெறவில்லை. அதிபர் நியமனங்கள் முறையாக செய்யப்படவில்லை. கல்வி அமைச்சினால் செய்யப்பட்ட பல்வேறு முறைகேடுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் உள்ளன.

மோசடி சமூகத்தால் நிராகரிக்கப்பட வேண்டும். பாடசாலைகள், வைத்திய சாலைகள், வேலைதளங்கள், அலுவலகங்கள், கடைகள் என எல்லா இடங்களிலும் மோசடியை மக்கள் எதிர்க்க வேண்டும். குறிப்பாக நமது இளைஞர் குழுக்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து, செய்ய வேண்டிய விடயங்கள் உள்ளன. கனவுகளைக் காண மட்டுமல்ல, அவற்றை நனவாக்கவும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.

அண்மையில், ஒரு பல்கலைக்கழக மாணவரின் துயரச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டோம். நாங்கள், அமைச்சில் போன்றே பொலிஸார் இந்த விடயத்தை விசாரித்து வருகிறோம். இது போன்ற சம்பவங்கள் சமூகத்திற்கும் பல்கலைக்கழக முறைமைக்கும் இடையிலான பிணைப்புகளில் ஏற்பட்டுள்ள முறிவைக் காட்டுகின்றன, மேலும் அந்த நிலையை நாம் மாற்ற வேண்டும்.

நீண்ட காலமாக ஒரு திட்டம் இல்லாமல் இருக்கும் நிறுவனங்கள் உள்ளன, அவற்றை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். இந்தப் பயணத்தை யாரும் எதிர்க்க முடியாது. பண்பாட்டை நேசிக்கும் யாரும் எங்கள் பயணத்தை எதிர்க்க முடியாது. அதனால்தான் இது வெறும் மற்றொரு தேர்தல் அல்ல.

முதல் முறையாக, எமது நாட்டின் ஆட்சியாளர்களும் மக்களும் இணைந்து செயற்படுகிறார்கள். மக்கள் தங்கள் ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையை வளர்த்துக் கொண்டுள்ளனர். அந்த நம்பிக்கையை நிலைநிறுத்துவதன் மூலம் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

உங்களிடமும் வரிகள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பணம் இவ்வளவு காலமாக சிலரின் சட்டைப்பைகளுக்குள் சென்று கொண்டிருந்தது, உங்கள் பணம் மீண்டும் யாருடையவும் பைகளுக்கும் செல்ல நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நீங்கள் அந்தப் பணத்தை உங்களுக்கு ஒரு சேவையாகக் கிடைக்கச் செய்கிறீர்கள்.

இது ஒரு பண்பாடான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பயணம். இதை இருபத்தி நான்கு மணி நேரத்தில் செய்துவிட முடியாது. இது துல்லியமாகவும் திட்டமிடலுடனும் செய்யப்பட வேண்டும், எனவே இதற்கு நேரம் எடுக்கும். அரசாங்கம் என்ன செய்தது என்று கேட்பவர்கள் மக்களை மனதில் கொண்டு கேட்பதில்லை.

இந்த முறை தேர்தலில் வெற்றி நிச்சயம். மே 7 ஆம் திகதி வெற்றியை அமைதியாகக் கொண்டாடுங்கள். உள்ளூராட்சி நிறுவனங்களில் பணியாற்ற எமது புதிய உறுப்பினர்கள் தயாராகுங்கள்.

யார் கலவரமடைந்தாலும், கூச்சலிட்டாலும், அரசாங்கம் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை. அரசாங்கம் ஒரு திட்டத்தின் படி பயணம் மேற்கொண்டு வருவதாகவும், அரசாங்கம் மக்களுக்கு மட்டுமே பதிலளிக்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த தொடவத்த மற்றும் அருண பனாகொட உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்களும், பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு