அக்வா பிளானட் ஸ்ரீ லங்கா (Aqua Planet Sri Lanka) - 2025 சர்வதேசக் கண்காட்சி ஆரம்பம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
மீனவ சமூகத்தின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பினை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும்.
மீன்பிடித் துறையின் அபிவிருத்திக்காக முதன்முறையாக நீலப் பொருளாதாரம் (Blue Economy) தொடர்பான கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் தயாரிக்கப்படுகின்றன.
நீருயிர்கள், நீர்த் தாவரங்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட கடலுணவு உற்பத்தித் துறையில் புத்தாக்கங்களை சர்வதேச மீன் சந்தையை இலக்காகக் கொண்டு நாம் மேற்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.
"நீர்வளத்தால் செழிப்பான எதிர்காலம்" எனும் தலைப்பில் மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட "அக்குவா பிளானட் ஸ்ரீ லங்கா – 2025" கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் சார்ந்த உற்பத்திகள், நவீன தொழில்நுட்ப உபகரணங்கள், நீரியல் தாவரங்கள், அலங்கார மீன் வகைகள் உட்பட மீன்பிடித் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நடைபெறும் அக்குவா பிளானட் 2025 சர்வதேசக் கண்காட்சி இன்று, நவம்பர் 21 முதல் 23ஆம் திகதி வரை தாமரைக் கோபுர வளாகத்தில் நடைபெறவுள்ளது.
ஆரம்ப விழாவை முன்னிட்டு, மீனவ சமூகத்திற்காக அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கும் ஓய்வூதிய உரிமைப் பத்திரங்கள் பிரதமரின் தலைமையில் வழங்கப்பட்டது. அக்குவா பிளானட் 2025ஐ அடையாளப்படுத்தும் வகையில் முதலாம் நாள் தபால் உறை, ஞாபகார்த்த முத்திரை ஆகியனவும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.
இவ்விழாவில் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
எமது அரசாங்கத்தின் "வளமான நாடு – அழகான வாழ்க்கை" என்ற கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்ப, நாம் எதிர்பார்த்தபடி இலங்கையை மீன்பிடித் துறையின் உலக ஏற்றுமதி மையமாக (Global Export Hub) மாற்ற வேண்டும் என்ற இலக்கை யதார்த்தமாக்கும் ஒரு படியாகவே அக்குவா பிளானட் ஸ்ரீ லங்கா – 2025 சர்வதேசக் கண்காட்சியை நான் பார்க்கின்றேன்.
நாட்டின் தேசியப் பொருளாதாரத்தில் முக்கியமான பங்கினையும் வகிக்கும் அதே வேளை, நமது நாட்டின் பெருமளவு மக்களின் பிரதான வாழ்வாதாரமாகவும் மீன்பிடித் தொழில் இருந்து வருகின்றது. ஆகையினால் நீரின வளர்ப்பு மற்றும் உள்ளக மீன்பிடித் தொழிலை மேலும் விரிவுபடுத்த வேண்டும். உயிரினங்கள் மற்றும் நீர்த் தாவரங்கள், மதிப்புச் சேர்க்கப்பட்ட கடலுணவுப் பொருட்கள் ஆகிய உற்பத்தித் துறைகளில் புத்தாக்கங்களை சர்வதேச மீன் சந்தையை இலக்காகக் கொண்டு நாம் மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு, விஞ்ஞான ரீதியிலான (Science-Based) வள முகாமைத்துவம், பொதியிடல், சூழல்நல மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் நவீன நீரின வளர்ப்பு பற்றிய அறிவையும், தொழில்நுட்பத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதற்குத் தேவையான ஆதரவைப் பெற்றுத்தர அரசாங்கம் என்ற வகையில் நாம் தயாராக இருக்கிறோம் என்பதை இந்தத் தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.
குறிப்பாக, மதிப்புச் சேர்க்கப்பட்ட மீன் உற்பத்திக்குத் தேவையான நிதி வசதிகளை வழங்குவதற்கான ஒரு செயற்றிட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. அத்துடன், மீன்பிடித் தொழிலுடன் சம்பந்தப்பட்ட கிராமியச் சிறிய அளவிலான உற்பத்தியாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பினைக் கற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நாட்களில் பிரதான பேசுபொருளாக இருப்பது எமது அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத் திட்டம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
2026 வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் மீன்பிடித் துறையின் அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி இருக்கின்றது. எமது மீன்பிடித் துறையின் அபிவிருத்திக்காக முதன்முறையாக நீலப் பொருளாதாரம் (Blue Economy) தொடர்பான கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வழிமுறைகளைத் தயாரிப்பதற்காக இந்த வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
துறைமுக உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கும், மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் 500 மில்லியன் ரூபாயை நாம் ஒதுக்கி இருக்கின்றோம். அத்தோடு, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக அபிவிருத்திக்காக 350 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான உயிர்காப்பு உபகரணங்கள் வழங்குவதற்காக 100 மில்லியன் ரூபாய் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோளை அடிப்படையாகக் கொண்ட மீன்பிடிப் பிரதேச கண்காணிப்பு முறைமைக்காக (Satellite-Based Fish-Ground Tracking Systems) 100 மில்லியன் ரூபாயை ஒதுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அத்தோடு நீரினப் பண்ணை அபிவிருத்தி நிலையங்களை உருவாக்குதல், மீனவ சமூகத்தின் பாதுகாப்பு, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் மீன்பிடித் துறையின் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றுக்காகவும் இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதைக் கூற விரும்புகிறேன்.
இறுதியாக, வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் அனைவருக்கும் பெற்றுக் கொடுக்க நாம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களுக்குப் பங்களிக்குமாறு மீன்பிடித் துறை சார்ந்த உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் எனப் பிரதமர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் திரு. ராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள்,
வீழ்ச்சியடைந்திருந்த மீன்பிடித் தொழிலை மீட்டெடுப்பதற்கான பாரிய செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அதன் ஒரு பகுதியாகவே இந்தக் கண்காட்சி திட்டமிடப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்தக் கண்காட்சியின் பிரதான நோக்கம், நமது நாட்டின் கடல் வளங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், கடல் வளத்தை மேம்படுத்துவதற்கு மக்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதன் மூலம் அவர்களுக்கும் அதன் பயன்களைப் பெற்றுக் கொடுப்பதோடு, நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துக் கொள்வதே ஆகும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, தொழிற்கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே, டிஜிட்டல் பொருளாதாரப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் திரு. கோலித்த கமல் ஜினதாச உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், தூதுவர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் மீனவ மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு





