குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சலுகைகளைப் பெற்றுக்கொடுப்பது எமது அரசாங்கத்தின் கொள்கையல்ல - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
மக்களுக்குப் பயனளிக்கும் வகையிலேயே அரசாங்கம் பொருளாதாரத்தை நிர்வகித்து வருகின்றது
குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சுகபோகங்களையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் கொள்கையல்ல என்றும், மக்களுக்குப் பயனளிக்கும் வகையிலேயே அரசாங்கம் பொருளாதாரத்தை நிர்வகித்து வருகின்றது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில், வட மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இன்று 2025 டிசம்பர் 21 கிளிநொச்சி, இரணைமடு இராணுவ முகாமின் ’நெலும் பியச’ மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 300 மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் மேலும் உரையாற்றிய பிரதமர்,
குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் வசதி வாய்ப்புகளை வழங்குவது எமது கொள்கையல்ல. மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் நாம் பொருளாதாரத்தை நிர்வகித்து வருகிறோம். ’திட்வா’ புயலினால் நாட்டின் பல மாவட்டங்களில் உட்கட்டமைப்பு வசதிகள், பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் வீதிகள் சேதமடைந்தன. சுமார் ஐம்பதாயிரம் மக்கள் இன்னமும் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.
யுத்தம் காரணமாக வடபகுதி மக்கள் நீண்டகாலம் இடம்பெயர்வு முகாம்களில் வாழ்ந்த கசப்பான அனுபவங்களை அறிவோம். எனவே, புயலினால் பாதிக்கப்பட்டவர்களை அத்தகைய முகாம்களில் நீண்டகாலம் வைத்திருக்க எமது அரசாங்கம் விரும்பவில்லை. இதற்காக 500 பில்லியன் ரூபா மதிப்பிலான குறைநிரப்புப் பிரேரணையை அண்மையில் நிறைவேற்றினோம். ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் முறையான பொருளாதார முகாமைத்துவத்தால், இதற்காகக் கடன் வாங்காமலேயே நிதியை ஒதுக்க முடிந்தது.
கல்வித் துறை மீது நாம் விசேட கவனம் செலுத்தி வருகிறோம். பிள்ளைகளின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்தவே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளோம். 2025ஆம் ஆண்டு முதல் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, கல்வி முறையைப் பலப்படுத்துவோம். வவுனியா மற்றும் கிளிநொச்சி பல்கலைக்கழகங்களின் தண்ணீர் மற்றும் தங்குமிடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுள்ளோம்.
அண்மையில் நடத்தப்பட்ட முன்னேற்ற மீளாய்வின்படி, வட மாகாணத்தின் கல்வித்துறை சார் முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை. ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. எனவே, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் அதிக ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டும். 2026ஆம் ஆண்டில் ஆசிரியர் மற்றும் உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
யாழ்ப்பாணம் ஒரு கல்வி மையம் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அதேவேளை வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் கல்வியின் தரத்தையும் நாம் மேம்படுத்த வேண்டும். அனைத்துப் பிள்ளைகளுக்கும் சமமான, தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே எமது இலக்கு என தெரிவித்தார்.
விழாவில் உரையாற்றிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள்,
ஜனாதிபதி நிதியம் என்பது இன்று மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒன்றாக மாறியுள்ளது. 44 ஆண்டுகளாக இந்நிதியம் இருந்தபோதிலும், 2025 ஜனவரியில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னரே அதன் உண்மையான பணிகள் மக்களிடம் சென்றடைந்தன. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முறை பிரதேச செயலக மட்டத்திற்குப் பரவலாக்கப்பட்டுள்ளது. கடந்த 11 மாதங்களில் 4,200 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த ஆண்டு ஜனாதிபதி நிதியிலிருந்து கல்விக்காக 4,899 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கனத்த அறிவித்தார்
இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் இராமலிங்கம் வேதநாயகம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீ பவனேந்திரராஜா, இளங்குமரன், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, மாகாண மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உட்படப் பல அரச அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு





