கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஊழல் இல்லாமல் கொண்டு சேர்ப்பதற்கு இந்த தேர்தல் அரசாங்கத்திற்கு மிகவும் தீர்க்கமானது
எதிர்க்கட்சிகளுக்கு, இந்தத் தேர்தல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான மற்றுமொரு போராட்டம் மட்டுமே என்றபோதிலும், கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஊழல் இல்லாமல் கொண்டு சேர்ப்பதற்கு இந்த தேர்தல் அரசாங்கத்திற்கு மிகவும் தீர்க்கமானது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறினார்.
கொழும்பு மாவட்டத்தின் மத்திய கொழும்பு, மாளிகாவத்தை பிரிவில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
எமது அரசாங்கம் இப்போது பணிகளைத் தொடங்கியுள்ளது. நாங்கள் அரசாங்கத்தின் முதல் வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்தோம். அது அடுத்த எட்டு மாதங்களுக்கானது. பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில நன்மைகளை வழங்கும் அபிவிருத்தியை உருவாக்க, கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்த நாங்கள் விரும்பினோம்..
நம் மீது குறை கூறும் யாரும் இந்த நாட்டின் முன்னைய ஆட்சியாளர்கள் செய்த பண விரயம் பற்றிப் பேசுவதில்லை.
நிதிகளை மிகவும் கவனமாக முகாமைத்துவம் செய்வதன் மூலம் நாங்கள் மக்களுக்காக உழைக்கிறோம். திட்டங்களை வகுக்கின்றோம். அந்தத் திட்டங்களை கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல, கீழ்மட்டத்தில் உள்ள தலைமையும் தூய்மையாக இருக்க வேண்டும்.
எனவே, இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது. இது ஒரு பிற்போடப்பட்டிருந்த தேர்தல். நாம் முதலில் செய்ய வேண்டியது, முன்னைய அரசாங்கங்களால் நிறுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை நிறைவுசெய்வதும், தவறுகளைச் சரிசெய்வதும்தான்.
அரசாங்கம் செலவிடும் ஒவ்வொரு ரூபாயைப் பற்றியும் ஆயிரம் முறை சிந்திக்கிறது. அரசாங்கம் ஒதுக்கப்பட்ட பணத்தை கிராம மட்டத்திற்கு அனுப்பும்போது, அங்கு திருடர்கள் இருந்தால், நாம் எப்படி கிராமத்தை அபிவிருத்திசெய்ய முடியும்?. நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான மக்களின் முடிவின் மூன்றாவது சவாலாகக் கருதி, மே 6 ஆம் திகதி நடைபெறும் தேர்தல்களில் முன்னைய தேர்தல்களைப் போன்ற ஒரு வெற்றியைப் பெறுவோம்.
ஆட்சியின் மேல் மட்டத்தில் ஒன்று, கீழ் மட்டத்தில் ஒன்று என இரண்டு அரசியல் கலாசாரங்கள் இருக்க முடியாது. மேல் மட்டங்கள் வீண்விரயம், ஊழல் மற்றும் மோசடி இல்லாமல் செயற்பட வேண்டுமென்றால், கிராம மட்டத்திலும் இதே போன்ற கட்டுப்பாடு இருக்க வேண்டும். அந்த நோக்கத்திற்காக தேசிய மக்கள் சக்தி மட்டுமே பொருத்தமான வேட்பாளர்களை முன்வைத்துள்ளது.
கொழும்பின் மேயர் வேட்பாளராக நாங்கள் முன்வைத்திருப்பது மேலிருந்து கொண்டுவரப்பட்ட ஒருவரையோ, சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்திலிருந்து வந்த ஒருவரையோ அல்ல, மாறாக கொழும்பில் வாழ்ந்து, கொழும்பைப் பற்றியும், மக்களைப் பற்றியும், கொழும்பு எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றியும் நன்கு புரிந்துகொண்ட ஒரு வேட்பாளரைத்தான். சகோதரி வ்ராய் எனது தனிப்பட்ட செயலாளராக இருந்தபோது, எந்தவொரு முக்கியமான பிரச்சினைக்கும் மிகத் துல்லியமாக பதிலளிக்கும் திறன் அவருக்கு இருப்பதை நான் உணர்ந்தேன். அப்படிப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேயர் பதவி வழங்கப்பட வேண்டும். ஒரு வர்க்கம், ஒரு பிரிவு அல்லது ஒரு பகுதியைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்ட ஒருவர் கொழும்பின் மேயராக முடியாது. முழு கொழும்பு பிராந்தியத்திற்கும் மேயராக பணியாற்றக்கூடிய ஒருவர், மக்களின் விவகாரங்கள் குறித்த உணர்திறன் கொண்ட ஒருவர் கொழும்பின் மேயராக வேண்டும். மக்களுக்கு சேவை செய்வதற்கும் மக்களுக்காக உழைப்பதற்கும் இதுபோன்ற ஒரு அரசியல் நோக்கத்துடன் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களை முன்வைத்துள்ளது.
கொழும்பு மாநகர சபையின் வருடாந்த வருமானம் 30 பில்லியன் ஆகும். அது மக்களுக்காக ஒதுக்கப்பட்டால், இன்று கொழும்பு இப்படி இருந்திருக்காது. கொழும்பில் ஆனந்தா, நாளந்தா, ரோயல் போன்று ஆசிரியர்கள் இல்லாத, தண்ணீர் இல்லாத, கழிப்பறை வசதிகள் இல்லாத பாடசாலைகள் உள்ளன. அது எப்படி நடந்தது?
பிரதேச மட்டத்திலான பிரச்சினைகளுக்கு உள்ளூராட்சி நிறுவனங்கள் அதிக பொறுப்பைக் கொண்டுள்ளன. அந்த நிறுவனங்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற முடியாவிட்டால், நாம் எப்படி ஒரு புதிய நாட்டை உருவாக்க முடியும்?
இன்று, அரசின் திட்டங்களால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. இந்த நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். நாட்டின் அபிவிருத்தி இப்போதுதான் தொடங்குகிறது, ஆனால் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. தேசியளவில் செய்யப்படும் திட்டங்களை கீழ்மட்டங்களில் யதார்த்தமாக்க, நகர சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு சரியான தலைமை அவசியம்.
நாட்டை ஊழல் அரசியலிலிருந்து விடுவிப்பதற்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மக்கள் தங்கள் வாக்குகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், கொழும்பு மேயர் வேட்பாளர் வ்ராய் கெலீ பல்தசார், மா நகர சபை வேட்பாளர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு