"நாடு எதிர்கொள்ளும் எரிசக்தி நெருக்கடிக்கு ஒரு தீர்வாக, சூரிய சக்தி மின்சாரத்திற்கு மாறுவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். இப்போதெல்லாம் மைல் கணக்கில் மின்கம்பிகளை இழுத்து, கோடிக்கணக்கில் செலவழித்து ஒரு குடியிருப்புக்கு மின்சாரம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை.” - பிரதமர் தினேஷ் குணவர்தன

இன்று (02) பத்தரமுல்லை செத்சிறிபாயவில் இடம்பெற்ற உலக குடியிருப்பு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. "பாதுகாப்பான நகர்ப்புற பொருளாதாரம்" என்பது இந்த ஆண்டு உலக குடியிருப்பு தினத்தின் கருப்பொருளாகும்.

மனித சமூகத்தில் அடிப்படை மனித உரிமைகளைப் பெற உலகம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அதற்காக நாடுகள், அமைப்புகளுக்கு இடையே சில முக்கிய பிரச்னைகள் தொடர்பாக ஒப்பந்தங்கள் எட்டப்படுகின்றன. நீண்ட காலத்திற்கு முன்பே, ஐக்கிய நாடுகள் சபை மனித சமுதாயத்தில் உணவு, உறைவிடம் மற்றும் உடைகளை அடிப்படை மனித உரிமைகளாக அங்கீகரித்தது. அந்த இலக்கை நோக்கியே நாம் இன்னும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எமது நாடு நீண்ட காலமாக பெரும் முயற்சிகளை மேற்கொண்டு அதன் பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தப் பிரச்சினைக்கு இன்னும் உலகம் தீர்வு காணவில்லை என்று குறிப்பிட்டார். அது எம்மைப் போன்ற சிறிய நாடுகளுக்கானதாகும்.

இந்த அனைத்து நகரங்களைச் சுற்றிலும் சேரிப் பகுதிகள் உள்ளன. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வாழும் மக்களுக்காக தனியானதொரு தினம் தனியானதொரு வேலைத்திட்டம் அவசியம் என்ற முன்மொழிவை அப்போதைய எமது பிரதமர் ஆர்.பிரேமதாச ஐக்கிய நாடுகள் மாநாட்டில் முன்வைத்தார். அது ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை அந்த முன்மொழிவை ஏற்க வேண்டியிருந்தது. அதன்பின்னர், எமது அரச தலைவர்கள் அந்த வேலைத்திட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல முடிந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் எமது நாட்டின் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு பல இலட்சம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், வீடுகளை நிர்மாணிக்க பல்வேறு திட்டங்களை தயாரித்து ஆதரவு அளிக்கப்பட்டது.

இக்குடியிருப்புகளில் வாழும் பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கு சுத்தமான நீர் மற்றும் அவர்களின் எதிர்கால இருப்பை உறுதிப்படுத்த கல்வி அவசியம். அதன் அடிப்படையில், வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு குடியிருப்பை அமைக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

நாம் வாழும் நிலப் பிரதேசம் அதிகரிப்பதில்லை. மேலும், நகர்புற நிலங்களை முறையாக முகாமைத்துவம் செய்ய வேண்டும். இல்லை என்றால் மேலும் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உலக குடியிருப்பு தினமான இந்நாளில், மக்களின் வாழ்க்கை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் நடவடிக்கைகள் குறித்து மேலும் கலந்துரையாடல்கள் நடைபெறும் என்று நம்புகிறேன்.

இன்று எமது சவால்கள் மாறிவிட்டன. இருள்சூழ்ந்த காலம் முடிந்துவிட்டது. மைல்கணக்கில் மின் கம்பிகளை இழுக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு குடியிருப்புக்கு மின்சாரம் வழங்க கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டியதில்லை. அது நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்று நாம் எதிர்கொள்ளும் சவால் சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றுவது. எனவே புதிதாக சிந்திக்க வேண்டும். செலவுகளைக் குறைக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும். அதற்கு ஐக்கிய நாடுகள் சபை எங்களுக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளது. அதே போல, மற்ற எல்லா துறைகளையும் திட்டமிடும் சவாலை நாம் வெற்றிகொள்ள வேண்டும்.

இந்த நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ். சத்யானந்த, நிகழ்ச்சி முகாமைத்துவ அதிகாரி, ஐக்கிய நாடுகளின் மனித குடியேற்றத் திட்டத்தின் இலங்கை அலுவலகத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் Salem Karimzada ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு