" இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த 40 மில்லியன் டொலர் பெறுமதியான உணவு மானியத்திற்கு மேலதிகமாக, இன்னமும் 20 மில்லியன் டொலர் பெறுமதியான உணவு மானியத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்."

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கும் உலக உணவுத்திட்டத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய பணிப்பாளர் ஜோன் அயிலிப் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று 2022.09.01 ஆந் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

இதன்போது உலக உணவுத் திட்டத்தினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற மானியத்தை அதிகரிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு போஷாக்கான உணவுகளை வழங்குவதற்காக மேலதிக அனுசரணை வழங்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்குஉலக உணவு திட்டம் ( WFP) தமது விருப்பத்தைத் தெரிவித்தது. உலக உணவுத்திட்டம் மற்றும் இலங்கை அரசு என்பவற்றிற்கிடையே பேணப்படுகின்ற சிறந்த உறவு, அவர்களது ஒருங்கிணைந்த திட்டமான பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவை வழங்குதல் மற்றும் திரிபோசா வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு பெரிதும் பங்களிப்பதாகவும், அத்திட்டங்கள் ஏனைய நாடுகளுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக அமைவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு ஆரோக்கியமான சமுதாயத்தின் முக்கியத்துவம் தொடர்பில் எடுத்துக்காட்டிய பிரதமர், இலங்கையில் வீட்டுக் கைத்தொழில், சிற்றளவிலான மீன்பிடி கைத்தொழில் என்பவற்றை அபிவிருத்தி செய்வதற்கான இயலுமை தொடர்பில் ஆராயுமாறும் மேலும் கோரினார்.

இவ்விக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற உதவிகளை, 20 மில்லியன் டொலர்களால் அதிகரிப்பதாக, பிராந்தியத்திற்கான பணிப்பாளர் தெரிவித்தார்.
அதனடிப்படையில் வழங்கப்படுகின்ற ஒட்டுமொத்த உதவியானது 60 மில்லியன் டொலர் வரை அதிரிக்கும்.

இக்கலந்துரையாடலில் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதி அப்துர் றஹீம் சித்திக், அரச தரப்பு பிரதிநிதி முஸ்தபா நிஹ்மத், பிரதமர் செயலாளர் அநுர திசாநாயக்க மற்றும் மேலதிகச் செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன ஆகியோர் பங்குபற்றினர்.