பெண்களின் உரிமைகளைச் சட்டத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது, அவர்களின் நிஜ வாழ்க்கையிலும் அவற்றை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும் - சர்வதேச மகளிர் தினத் தேசிய விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு

பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை வெறுமனே சட்டப் புத்தகங்களுக்குள்ளோ அல்லது ஆவணங்களுக்குள்ளோ மாத்திரம் மட்டுப்படுத்தாது, அவற்றை இந்நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் தமது நிஜ வாழ்க்கையில் அனுபவிக்கக்கூடிய யதார்த்தமாக மாற்றுவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

“வளமான நாட்டின் அபிமானம் - அவளே நாட்டின் முன்னோடி” எனும் தொனிப்பொருளின் கீழான இம்முறை சர்வதேச மகளிர் தினத் தேசிய விழா, மார்ச் 08ஆம் திகதி மாத்தறை, ருஹுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் ஞாபகார்த்த மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

இன்று நாம் அனுபவிக்கும் கல்வி, அரசியல் உரிமைகள் உள்ளிட்ட சகல விதமான சுதந்திரங்களும் வரலாறு முழுவதிலும் பெண்கள் முன்னெடுத்த பாரிய போராட்டங்களினால் கிடைத்தவையாகும். இந்நாளை வெறும் பூங்கொத்துக்களுக்கு மாத்திரம் வரையறுக்க முடியாது. அந்த உரிமைகளைப் பாதுகாத்து, எமது நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்க்கையைத் தற்போதைய நிலையை விடச் சிறந்த இடத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதே எமது உன்னத நோக்கமாகும்.

இந்நாட்டின் பெண் தொழில்முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் அந்தந்தப் பிரதேசங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படக் கூடாது. அவர்களைத் தேசிய பொருளாதாரத்தின் ஒரு செயற்திறன்மிக்க பங்காளிகளாக மாற்றுவதற்குத் தேவையான பின்னணியை அரசாங்கம் தயாரித்து வருகின்றது.

அதேபோல், குடும்பத்திற்காகவும் நாட்டின் பொருளாதாரத்திற்காகவும் பெண்கள் ஊதியம் பெற்றோ அல்லது பெறாமலோ மேற்கொள்ளும் அளப்பரிய அர்ப்பணிப்பை மதிப்பீடு செய்வதற்காக “தேசிய பராமரிப்புக் கொள்கை” (National Care Policy) ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான யோசனையை நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் அண்மையில் முன்வைத்தது.

உலகில் இடம்பெறும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், மனிதநேயத்திற்காகவும் அமைதிக்காகவும் முன்னிற்க வேண்டிய பெரும் பொறுப்பு பெண்களுக்கு இருக்கின்றது. ஆகையினால் கருணையுடன் ஒன்றிணைந்து அமைதிக்காகக் குரல் எழுப்ப முன்வருமாறு இந்நாட்டுப் பெண்களிடம் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இச்சபையில் உரையாற்றிய மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள்,

இந்நாட்டின் டொலர் கையிருப்பை அதிகரிப்பதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் சிந்திய கண்ணீர் மற்றும் வியர்வைக்குச் சரியான மதிப்பினை வழங்கும் யுகம் தற்போது உதயமாகியுள்ளது. பெண் தொழில்முயற்சியாளர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அனைத்து அமைச்சுக்களையும் ஒருங்கிணைத்த ஒரு விரிவான கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படும், எனக் கூறினார்.

இந்தத் தேசிய விழாவிற்கு இணைவாக, நாடு முழுவதிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட 25 பெண் தொழில்முயற்சி வெற்றியாளர்களுக்குக் கௌரவ விருதுகளைப் பிரதமர் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி, பிரதி அமைச்சரான வைத்தியர் நாமல் சுதர்சன, தென் மாகாண ஆளுநர் பேராசிரியர் சுசிறிபால மானவடு, இலங்கைக்கான தூதுவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் பங்குபற்றினர்.

பிரதமர் ஊடகப் பிரிவு