நிப்பொன் நிலையத்தின் 40-வது ஆண்டு நிறைவு மற்றும் வண. மீகஹதென்னே சந்தசிறி நாயக்க தேரரின் 75-வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் பங்கேற்பு

ஸ்ரீலங்கா நிப்பொன் கல்வி மற்றும் கலாசார நிலையத்தின் (SNECC) 40-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் அதன் பொதுச் செயலாளரும் அத்துல்கோட்டை ஸ்ரீ மஹிந்தாராமய விகாராதிபதியும் மேல் மாகாணத்தின் பிரதம சங்கநாயக்கருமான சாஸ்திரபதி வணக்கத்திற்குரிய மீகஹதென்னே சந்தசிறி நாயக்க தேரரின் 75-வது பிறந்தநாள் விழா ஆகியவற்றில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

1986-ஆம் ஆண்டு முதல் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலானதொரு நட்புறவுப் பாலமாகச் செயற்பட்டு, இந்நாட்டுப் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக ஸ்ரீலங்கா நிப்பொன் கல்வி மற்றும் கலாசார மத்திய நிலையம் ஆற்றிய மகத்தான சேவையைப் பாராட்டுவதே இவ்விழாவின் பிரதான நோக்கமாக அமைந்தது.

இங்கு உரையாற்றிய பிரதமர்,

இந்நாட்டுப் பிள்ளைகளின் கல்விக் கனவை நனவாக்குவதற்காக நிப்பொன் நிலையத்தினூடாக வணக்கத்திற்குரிய மீகஹதென்னே சந்தசிறி நாயக்க தேரர் முன்னெடுக்கும் சமூகப் பணி மிகுந்த பாராட்டுக்குரியதாகும் எனத் தெரிவித்தார். திறமையான பிள்ளைகளை நாட்டுக்குப் பங்களிக்கக்கூடிய நற்பண்புகள் மிக்க பிரஜைகளாகக் கட்டியெழுப்புவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இந்நிறுவனம் வழங்கும் பங்களிப்பை அரசாங்கம் பெரிதும் மதிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த நான்கு தசாப்தங்களாக நிப்பொன் நிலையத்தினால் முன்னெடுக்கப்படும் "நிப்பொன் புலமைப்பரிசில்" திட்டத்தின் ஊடாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் பாடசாலை உபகரணங்கள், மாதாந்த நிதி உதவி, மருத்துவ உதவி மற்றும் மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்படுவதுடன், ஜப்பானிய மொழிப் பயிற்சியை வழங்கி ஜப்பானில் தொழில் மற்றும் பயிற்சி வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு வழிகாட்டப்படுகின்றது. அத்துடன், இரு நாட்டு மாணவர்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் ஜப்பான் சுற்றுப்பயணங்கள் மற்றும் ஒத்துழைப்புத் திட்டங்கள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்த விசேட தருணத்தைக் குறிக்கும் வகையில், 75-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வணக்கத்திற்குரிய மீகஹதென்னே சந்தசிறி நாயக்க தேரருக்குப் பிரதமர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவரது சமூகப் பணிகளைத் தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கான வலிமை கிடைக்கப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கோட்டை மாநகர முதல்வர் ஆரோஷ அத்தப்பத்து, ஜப்பானிய அனுசரணை நிறுவனங்களின் பிரதிநிதிகள், கல்விப் புலமைப்பரிசில் பெற்ற மாணவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு