டிஜிட்டல் மயமாக்கல் ஊடாகப் பாராளுமன்றத்திலும் அரச துறையிலும் காகிதப் பயன்பாட்டைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் காகிதப் பயன்பாடு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குச் செப்டெம்பர் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் பாராளுமன்றத்தின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் ஹன்சாட் அறிக்கைகள், கட்டளைப் புத்தகங்கள், நிகழ்ச்சி நிரல்கள் உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற அச்சுப் பணிகளுக்காக 2023ஆம், 2024ஆம் மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்காகச் செலவிடப்பட்ட மொத்தத் தொகை கீழே தரப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டிற்காக 45.3 மில்லியன் ரூபாவும், 2024ஆம் ஆண்டிற்காக 58.7 மில்லியன் ரூபாவும், 2025ஆம் ஆண்டிற்காக 73.1 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளன.
இந்த அனைத்து அச்சுப் பணிகளும் பாராளுமன்றத்தின் வேண்டுகோளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், காகிதப் பயன்பாட்டைக் குறைப்பதற்கான வேலைத்திட்டமொன்றும் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
திறைசேரியின் செயலாளரால் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கைக் கடிதத்திற்கு அமைய, எதிர்காலத்தில் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கைகளை டிஜிட்டல் முறையில் மாத்திரம் சமர்ப்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துப் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய செயற்குழுவில் பரிசீலிக்கப்பட்டது. இதன் போது, ஒவ்வொரு உறுப்பினரினதும் விருப்பத்தைக் கேட்டறிவதற்காகக் கருத்துக் கணிப்பொன்றை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அக்கருத்துக் கணிப்பின் முடிவுகளுக்கு அமைய, எதிர்காலத்தில் டிஜிட்டல் வடிவில் இந்த ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிக்கும் உறுப்பினர்களுக்கு டிஜிட்டல் வடிவிலும், அச்சுப் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிக்கும் உறுப்பினர்களுக்கு அச்சுப் பிரதிகளாகவும் உரிய ஆவணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இக்கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதன் பின்னர், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய செயற்குழுவினால் தீர்மானிக்கப்படும் திகதியிலிருந்து இவ்வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோன்று, அனைத்து அமைச்சுகளிலும் அரச நிறுவனங்களிலும் தற்போது காகிதப் பயன்பாட்டைக் குறைத்து டிஜிட்டல் மயமாக்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், இதற்குச் சிறிது காலம் எடுக்கும். உதாரணமாக, கல்வி அமைச்சில் முன்னர் பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான விடுமுறைக் கோரிக்கைக் கடிதம் அச்சிடப்பட்ட பிரதியாகவே அமைச்சுக்குக் கிடைத்தது. ஆயினும், இப்போது அந்த முழுச் செயற்பாடும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. விடுமுறைக் கோரிக்கைக் கடிதத்திற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக அமைச்சு அனுமதியளிப்பது டிஜிட்டல் முறையின் கீழ் இடம்பெற்று வருகின்றது. இதேபோன்று, ஒவ்வொரு அமைச்சும் இந்த மாற்றத்திற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. டிஜிட்டல் முறைமை நிறுவப்படும்போது காகிதப் பயன்பாட்டைப் பெருமளவில் குறைக்க முடியும் என நாம் கருதுகிறோம் எனக் குறிப்பிட்டார்.
பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் பாரத்தைக் குறைப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட வினாவுக்குப் பதிலளித்த பிரதமர்,
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் ஊடாகச் செயற்படுத்தப்படும் செயற்பாட்டு அடிப்படையிலான கற்றல் முறையினால் புத்தகங்களின் பாரம் குறைவடையும். புத்தகங்கள் வகுப்பறையிலேயே இருக்கும் என்பதால், இனி புத்தகங்களை அங்கும் இங்குமாக எடுத்துச் செல்ல வேண்டிய தேவை ஏற்படாது. பாடசாலைத் தவணை இறுதியிலேயே புத்தகங்களை வீட்டிற்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்படும்.
2027ஆம் ஆண்டு முதல் 6ஆம் தரத்திற்குத் தொகுதிப் பாடக் கற்றல் முறைமை அறிமுகப்படுத்தப்படும். தொகுதிகள் என்பன பெரிய புத்தகங்கள் அல்ல என்பதால், அந்தந்தப் பாடத்திற்கு அமைவாக அத்தவணைக்குரிய தொகுதி மாத்திரமே பிள்ளைகளுக்கு வழங்கப்படும். எனவே, இம்முறைமையின் மூலம் பிள்ளைகளின் புத்தகச் சுமையைக் கணிசமான அளவு குறைக்க முடியும் எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு