2026 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் வெற்றியளித்துள்ளன, 2027 ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்திற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

2026 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஆகையினால், 2027 ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்திற்கும் கல்விச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தினால் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

2025 ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து இருபத்தோராயிரத்து நானூற்றுப் பதின்மூன்று ஆகும். இது முதலாம் தரத்தில் உள்வாங்கப்பட்ட மாணவர்களின் சதவீதத்தில் 65.29% ஆகும். 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு 317,326 பேர் தோற்றினர், இது முதலாம் தரத்தில் உள்வாங்கப்பட்டவர்களின் சதவீத அடிப்படையில் 93.57% ஆகும். 2023 சாதாரண தரப் பரீட்சைக்கு 322,537 பேர் தோற்றினர், இது முதலாம் தரத்தில் உள்வாங்கப்பட்டவர்களின் சதவீதத்தில் 92.08% ஆகும். 2024 ஆம் ஆண்டில் சாதாரண தரப் பரீட்சைக்கு 322,704 பேர் தோற்றினர், இது முதலாம் தரத்தில் உள்வாங்கப்பட்டவர்களில் 95.15% ஆகும்.

2026 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆகையினால் 2027 ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்திற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இதற்கான பாடவிதானக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, பாட மொடியூல்கள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன. தேவையான மாற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு அவை அனைத்தும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்த மாதத்திற்குள் அந்தப் பாட மொடியூல்கள் அச்சிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், தேவையான ஆசிரியர் பயிற்சிகள் ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கப்படும், இதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டு இரண்டாம் தரத்திற்கும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் ஆரம்பிக்கப்படும் என்பதோடு, அதற்கான பாட மொடியூல்கள் அச்சிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கல்விச் சீர்திருத்தப் பணிகளுக்காகத் தேசிய வழிகாட்டல் குழுவொன்றும் எம்மால் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் மேற்பார்வையின் கீழேயே இவை அனைத்தும் முன்னெடுக்கப்படுகின்றன. புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆரம்பிக்கப்படும். இந்தக் கல்விச் சீர்திருத்தங்களுக்குத் தடையொன்று ஏற்படுமாயின், அது கல்விச் சீர்திருத்தங்கள் வேண்டாம் எனக் கூறுபவர்களாலோ அல்லது கல்விச் சீர்திருத்தங்களைக் குழப்பி அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் நோக்கில் தலையிடுபவர்களாலோ மாத்திரமே ஏற்படக்கூடும். அத்தோடு இந்தச் சீர்திருத்தங்களுக்கு உலக வங்கியின் நிதியுதவி கிடைக்கவில்லை, என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் தற்போதைய சபாநாயகர் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர்,

தற்போதைய சபாநாயகரின் தனிப்பட்ட பணியாளர் தொகுதியின் எண்ணிக்கை 12; அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை 20. தற்போதைய சபாநாயகர் தனது தனிப்பட்ட தேவைகளுக்குச் சபாநாயகருக்கான உத்தியோகபூர்வ இல்லத்தைப் பயன்படுத்துவதில்லை. உத்தியோகபூர்வ இல்லத்திற்காக 15 பணியாளர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும், 8 பேர் மாத்திரமே கடமையாற்றுகின்றனர். அந்த உத்தியோகபூர்வ இல்லம் பெரியது என்பதால் அதன் பராமரிப்புப் பணிகளுக்காகப் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். இராஜதந்திர நடவடிக்கைகளுக்குத் தேவைப்படும் போது மாத்திரமே சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் பயன்படுத்தப்படுகின்றது. ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அலரி மாளிகை ஆகியவையும் இவ்வாறான இராஜதந்திர நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடனான கடிதத்தின் மூலம், சபாநாயகர் பதவியை வகிக்கும் காலப்பகுதிக்கு மாத்திரம் கொழும்பில் அமைந்துள்ள அரச உத்தியோகபூர்வ இல்லமொன்று சபாநாயகருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் வாடகையைச் சபாநாயகரின் மாதாந்தக் கொடுப்பனவிலிருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, அந்த இல்லத்தின் நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களைச் சபாநாயகரே செலுத்தி வருகிறார்.

அத்தோடு, சபாநாயகரின் பயன்பாட்டிற்காக 07 வாகனங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. எனினும், சபாநாயகர் 02 வாகனங்களை மாத்திரமே பயன்படுத்துகிறார். இதுவரை காலமும் சபாநாயகர் பதவியை வகித்தவர்களுக்கு மட்டுப்படுத்தப்படாத எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்பட்ட போதிலும், தற்போதைய சபாநாயகர் அதனை மட்டுப்படுத்தி, அமைச்சரொருவருக்கு வழங்கப்படும் 900 லீட்டர் எரிபொருளை மாத்திரமே பயன்படுத்துகிறார்" எனப் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு