நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு வலுசக்தி வினைத்திறனை அதிகரிக்க வேண்டியது அத்தியாவசிய காரணியாகும் என்றும், இது வெறும் நுகர்வைக் குறைப்பது மாத்திரமன்றி, நாட்டின் அபிவிருத்திச் செயல்முறைக்கு வழங்கப்படும் ஒரு தனித்துவமான பங்களிப்பாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையும் வலுசக்தி அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த “இலங்கை தேசிய வலுசக்தி வினைத்திறன் விருது வழங்கல்” விழா, பெப்ரவரி 24ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“Energy Efficiency: Refueling the Economy” (வலுசக்தி வினைத்திறன் மூலம் பொருளாதாரத்திற்குப் புத்துயிரளித்தல்) எனும் தலைப்பில் நடைபெற்ற இவ்விழாவில், கொழும்பு உலக வர்த்தக மையத்தின் (WTC) திரு. ஜீவக துஷார அவர்கள் ’சிறந்த முகாமையாளர்’ விருதினைப் பெற்றுக்கொண்டார். அத்துடன் National Cleaner Production Center, Forbes Marshall Lanka, World Trade Center Colombo, BiC and DENTA Manufacture மற்றும் MAS Fabrics Thulhiriya ஆகிய நிறுவனங்கள் வலுசக்தி வினைத்திறனுக்கான தங்க விருதுகளைத் தனதாக்கிக்கொண்டன.
விழாவில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
“வலுசக்தி வீண்விரயத்தைக் குறைப்பதன் ஊடாக வெளிநாட்டுச் செலாவணியைச் சேமிக்க முடிவதுடன், அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் முடியும். கடந்த வருடத்தில் மிகுந்த வினைத்திறனுடன் வலுசக்தியைப் பயன்படுத்திய அரச மற்றும் தனியார் நிறுவனங்களை இங்கு விசேடமாகப் பாராட்ட வேண்டும். பாரிய தொழிற்சாலைகள் முதல் சிறு வணிகங்கள் வரை வலுசக்தி முகாமைத்துவத்தைப் பிரபல்யப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைத்தல் மற்றும் புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்துவதற்கான ’பாரிஸ் உடன்படிக்கை’ போன்ற சர்வதேச இணக்கப்பாடுகளுக்கு அமைய ஒரு நாடாகச் செயற்படுவது மிக முக்கியமாகும். அத்துடன், வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகப் புதிய தொழில்நுட்ப முறைகளைக் கையாள்வது மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வளங்களை நோக்கித் திரும்புவது குறித்தும் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது, என தெரிவித்தார்.
வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி உரையாற்றுகையில்:
2030ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியை 70% வரை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்காகும். ஊழல் மற்றும் வினைத்திறனற்ற தன்மையால் வீழ்ச்சியடைந்திருந்த நிறுவனக் கட்டமைப்பை மாற்றி, முறையான தேசியக் கொள்கையின் கீழ் நாம் செயற்பட்டு வருகின்றோம். இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன. தவறான வழிகளில் பணம் சம்பாதித்தவர்கள் எமது அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களால் கலக்கமடைந்துள்ளனர். அவர்களுக்கு நஷ்டம் ஏற்படும் போது அதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இருக்கின்றனர்.
முறையான வழிமுறைகளின் கீழ் கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, வலுசக்தி வினைத்திறனின் உண்மையான நன்மைகளை நாட்டு மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வலுசக்தி பிரதி அமைச்சர் பொறியியலாளர் அர்க்கம் இல்லியாஸ், அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு