ஒரு நாட்டின் வீதிகள், கட்டடங்கள் மற்றும் பொருளாதாரம் அபிவிருத்தியடையும் அதேவேளை, மக்களின் அக வாழ்வும் அழகியல், கலாசாரம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றால் செழுமையடைய வேண்டும் எனவும், அபிவிருத்தியைப் பௌதிக வளங்களின் முன்னேற்றத்தால் மாத்திரம் அளவிட முடியாது எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இரக்க உணர்வும் சிறந்த இரசனை உணர்வும் கொண்ட சமூகமொன்றைக் கட்டியெழுப்புவது புதிய மறுமலர்ச்சிக் காலத்தின் முக்கிய எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கண்டி மாவட்டச் செயலகம், கலாசாரத் திணைக்களம் மற்றும் கண்டி மாவட்டக் கலாசார மன்றம் ஆகியன இணைந்து ஒக்டோபர் 15ஆம் திகதி கண்டி மாவட்டச் செயலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ‘அலுத் வெஸ்ஸ’ கலாசார விழா மற்றும் கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
கலைத்துறைக்கு மகத்தான சேவையாற்றிய கண்டி மாவட்டக் கலைஞர்களைப் பாராட்டி, அவர்களுக்கான விருதுகளும் பிரதமரினால் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மேலும் தெரிவித்ததாவது:
“கண்டி என்பது எமது நாட்டின் வரலாற்று, கலை மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தின் பெறுமதியை மிகச் சிறப்பாக அனுபவிக்கக்கூடிய இடமாகும். ஸ்ரீ தலதா மாளிகை, அம்பக்க மரச் சிற்பங்கள், தெகல்தொருவ சுவரோவியங்கள், கண்டிய நடன மரபு, அத்துடன் பாணிபாரத, கலாநிதி ஆனந்த குமாரசுவாமி மற்றும் மினெட் டி சில்வா போன்ற புகழ்பெற்ற கலைஞர்களின் பங்களிப்பு ஆகியவற்றின் காரணமாக, கண்டிக்கே உரித்தான தனித்துவமான கலாசார அடையாளம் உருவாகியுள்ளது.
கடந்த நாட்களில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையின்போது கண்டி மக்கள் எதிர்கொண்ட சிரமங்களுக்கு மத்தியில், காலி, மாத்தறை மற்றும் களுத்துறை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தாமாகவே முன்வந்து பெரும் ஒத்துழைப்பை வழங்கினர். அவர்கள் வெளிப்படுத்திய இரக்க உணர்வையும் அர்ப்பணிப்பையும் உண்மையிலேயே பாராட்ட வேண்டும்.
அதேபோன்று, இந்த அனர்த்தத்திற்குப் பின்னர் மீண்டும் எழுச்சியடைந்து வரும் கண்டி மாவட்டத்தில், மலையக ரயில் பாதையை வழமைக்குக் கொண்டுவருதல், சேதமடைந்த வீடுகளைப் புனரமைத்தல் மற்றும் அழிவடைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விகாரைகளை மத்திய கலாசார நிதியத்தின் ஊடாகப் புனரமைத்தல் போன்ற பணிகள் தற்போது விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எமது கல்விச் சீர்திருத்தங்களின் மூலம் நாம் எதிர்பார்ப்பது, தொழில்சார் அறிவுக்கு மாத்திரம் மட்டுப்படாமல், கலைநயம் மிக்க உணர்வுகளையும் மனிதப் பண்புகளையும் கொண்ட சிறந்த தலைமுறையொன்றை உருவாக்குவதாகும்” எனப் பிரதமர் தெரிவித்தார்.
மஹா விஹாரவங்சிக ஷ்யாமோபாலி மகா நிகாயாவின் அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்க தேரரும், களனிப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான சங்கைக்குரிய நாரம்பனாவே ஆனந்த அனுநாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், ஏனைய மதத் தலைவர்கள், மத்திய மாகாண ஆளுநர் வைத்தியர் சுரங்க பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் மனுவர்ண, தனுர திசாநாயக்க, துஷாரி ஜயசிங்க மற்றும் ஈ.எம். பஸ்நாயக்க ஆகியோர், மாநகர முதல்வர் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், கலைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் பெருமளவிலான மாணவ, மாணவியர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு