பிரதமரின் செயலாளர் பிரதீப் ஹபுதன்த்ரி மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் திரு அன்ட்ரு பட்றிக் (Andrew Patrick) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (7) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைத்தல் , ஊழல் எதிர்ப்பு மசோதாவை நடைமுறைப்படுத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகிய செயற்பாடுகளினூடாக பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு இலங்கை அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பாராட்டு தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துமுகமாக விவசாயத் துறையை மேம்படுத்துதல் மற்றும் கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளின் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்துவதுடன் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவாதற்கு புதிய அரசாங்கம் தம்மை அர்ப்பணித்துள்ளதாக பிரதமரின் செயலாளர் திரு பிரதீப் ஹபுதன்த்ரி இங்கு குறிப்பிட்டார்.
பொருளாதார ஒத்துழைப்பை விருத்தி செய்யுமுகமாக புதிய வழிகளை அறிமுகம் செய்தல் மற்றும் சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்துவதன் மூலம் இருநாடுகளுக்கிடையிலான இருதரப்பு தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இச்சந்திப்பில் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் முதலாம் செயலாளர் (அரசியல்) திரு. டொம் சோப்பர் (Tom Soper), FCDO சிரேஷ்ட ஆட்சி ஆலோசகர் திரு பென் பவிஸ் (Ben Powis ) ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடகப்பிரிவு