மிகவும் முக்கியமான வயதெல்லையில் இருக்கும் முன்பள்ளிச் சிறார்களின் கல்வியின் தரத்தையும்,அவர்களின் பாதுகாப்பையும் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதற்காக முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்ட, அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஆரம்பகால சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் மூலம் ஆரம்பகால பிள்ளைப்பருவ கல்வி பற்றிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பிற்கு அமைவாக முறையான செயற்றிட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.
கம்பஹா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய விஷ்வ முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்களுடன் 2025, நவம்பர் 24ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, ஆரம்பகால பிள்ளைப்பருவ கல்வி பற்றிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பிற்கு அமைவாகப் பயிற்றுவிப்பாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகத் தகுதியான பயிற்றுவிப்பாளர்களைத் தெரிவு செய்தல், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளித்தல், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் பங்களிப்பு ஓய்வூதியம் வழங்குவதற்காக நிதி ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
முன்பள்ளிகளை ஒழுங்குபடுத்துதல், மற்றும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட முன்பள்ளிகள் மூலம் ஆரம்பகால பிள்ளைப்பருவ கல்வியை வழங்குவதன் முக்கியத்துவம், ஆரம்பகால சிறுவர் அபிவிருத்தி அதிகாரிகள் மூலம் அரசாங்கத்திற்கும் முன்பள்ளிகளுக்கும் இடையே முறையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு, ஆரம்பகால பிள்ளைப்பருவ கல்வி பற்றிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பிற்கு அமைவாகப் பாடத்திட்டத்தைத் தயாரித்தல், முன்பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களின் நலன்புரி விடயங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திருமதி. சரோஜா சாவித்திரி போல்ராஜ், பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன, பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. சமன்மாலீ குணசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு