புதிதாக இரண்டாயிரம் கிராம உத்தியோகத்தர்கள் நியமனம்...

கிராம உத்தியோகத்தர் தரம்-III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நடத்தப்பட்ட பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தகுதி பெற்ற இரண்டாயிரம் விண்ணப்பதாரர்களுக்கு புதிய நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன. பிரதமர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (2024.05.08) அலரி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க-

இன்று நீங்கள் தெரிவுசெய்யப்பட்டு, பயிற்சியை முடித்த பின்னர், அரசாங்க சேவைக்கு நியமிக்கப்படுகிறீர்கள். இன்று மிகவும் மகிழ்ச்சியாக வீட்டிற்கு செல்ல முடியும். அரசாங்க சேவையில் சிறப்பாக பணியாற்றும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று நான் உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் எதிர்காலத்தையும், மக்களின் எதிர்காலத்தையும் சிறப்பாக மாற்ற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இதில் உங்களுக்குப் பெரியதோர் பொறுப்பு உள்ளது. நாட்டின் அடிப்படை நிர்வாகப் பிரிவான கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நீங்களே பொறுப்பு.

அந்த ஆரம்பப் பணிகளை செய்பவர்கள் நீங்கள். நீங்கள் அனைவரும் அரசாங்கத்திற்கான தகவல்களைச் சேகரித்து இந்த நிர்வாகப் பணியைச் செய்கிறீர்கள். அதைப் பற்றி நான் புதிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. உங்களுக்கு நிர்வாகப் பணிகள் மட்டும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது, இந்த நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக அபிவிருத்தி செய்ய எம்மால் முடிந்தது. அது இன்னும் முற்றுப்பெறவில்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் பல நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அடிப்படையில், 2022ல் ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர், நானும், பிரதமரும், அனைவரும் சேர்ந்து நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தினோம். அபிவிருத்தியை நகரத்திலிருந்து தொடங்கவில்லை. கிராமத்திலிருந்தே ஆரம்பித்தோம். எங்கள் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவளித்தனர். 2023 இல் வெற்றிகரமான ஒரு சிறு போகத்தை செயற்படுத்த முடிந்தது. அதனைத் தொடர்ந்து மற்றொரு வெற்றிகரமான பெரும்போகத்தை அடைந்தோம். அந்த உற்றிபத்திகளில் இருந்து தான் இந்த நிலையை அடையும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் நாம் இன்னும் முன்னோக்கிச் செல்ல வேண்டும். இப்பணி வெற்றி பெற்றதால், பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க, எங்கள் திறைசேரியினால், இரண்டாயிரம் கிராம உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு, பணத்தை வழங்க முடிந்தது.

இப்போது நீங்கள் அனைவரும் இந்த சேவையில் இணைந்துள்ளீர்கள். நிர்வாகப் பணிகள் மட்டுமின்றி, பொருளாதாரத்தை மேம்படுத்த பல அபிவிருத்திப் பணிகள் உள்ளன. குறிப்பாக பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் இணைந்து செயற்படும் நான்கு விடயங்களைப் பற்றி நான் கூற விரும்புகின்றேன். முதலில், நாங்கள் அஸ்வெசும திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். சமூர்த்தி இருந்தது. அதன் பின்னர் அஸ்வெசும அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் உலக வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமுர்த்தியைப் போன்று கொடுப்பனவுகளை மும்மடங்கு அதிகரிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த முறையை நாங்கள் செயற்படுத்தி வருகிறோம், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒன்லைன் முறையை வெற்றிகரமாக செயற்படுத்த முடியும். அடுத்த ஆண்டு இந்த பணி மேலும் எளிதாகும். கிராமத்திற்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை அதிகரித்தது. மறுபுறம், பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இணங்கினோம். அது ஒரு முக்கியமான விடயம். அஸ்வெசும பயனாளிகள் கிராமத்தில் வாழ நல்ல வருமானம் கிடைக்கும். அந்த வருமானமும் கிராமத்திலேயே செலவிடப்படுகிறது. அது ஒரு முக்கியமான விடயம். குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இது இரண்டு விடயங்களைச் செய்கிறது. ஒன்று, இவர்களுக்கு இன்னொரு நிவாரணம் கிடைக்கிறது. இரண்டாவது, இந்த அரிசியை சிறு ஆலைகளில் இருந்தே கொள்வனவு செய்யப்படுகிறது. இதனால் சிறு ஆலை உரிமையாளர்களுக்கும் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.

முடிந்தால் சந்தை விலையை பார்க்கிலும் சற்று அதிகரித்து சரி பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினேன். இந்தப் பணமெல்லாம் கிராமத்துக்குள் வருகிறது. நகரத்திற்கு அல்ல. கிராமத்தின் வளர்ச்சிக்காக இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. மூன்றாவது விடயம் காணி உரிமையை வழங்குவது. சில பகுதிகளில், காணிகளுக்கு உரிமை இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். நில அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் அனுமதிப்பத்திரங்கள் மட்டுமே உள்ளன, இரண்டு, மூன்று அல்லது நான்கு தலைமுறைகள் வரை உரிமை இல்லை. அவர்கள் விவசாயம் செய்யலாம், வேறு பயிர்ச்செய்கை நடவடிக்கையை மேற்கொள்ளலாம், அவர்கள் வசிக்கும் இடத்தில் வீடு இருக்கலாம், அவர்களுக்கு அந்த உரிமை இல்லை. இன்று அவர்கள் அனைவருக்கும் இலவச காணி உறுதிப்பத்திரங்களை வழங்க உள்ளோம். உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும்போது ஒரு பெரிய வித்தியாசம் ஏற்படும். மேலும், வங்கிக்குச் சென்று உங்கள் சொந்த நிலத்தை அபிவிருத்திசெய்ய நல்ல கடன் பெறலாம். இந்தப் பணமெல்லாம் கிராமத்துக்குத் திரும்பி வருகிறது.

பிரதமர் ஊடகப் பிரிவு