2026 புத்தாண்டில் பிரதமர் அலுவலகப் பணிகள் ஆரம்பம்!

நாம் ஆரம்பித்த பயணத்தை மேலும் பலப்படுத்தி, 2026ஆம் ஆண்டிலும் நம்பிக்கைக்குரிய மக்கள் சேவையை முன்னெடுப்போம். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

2026 புத்தாண்டில் பிரதமர் அலுவலகத்தின் கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி ஆகியோரின் தலைமையில் இன்று ஜனவரி 01 காலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, புத்தாண்டு நிமித்தம் அனைத்துப் பணியாளர்களினாலும் அரச சேவைச் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பிரதமர் தனது புத்தாண்டு நல்வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

கடந்த ஆண்டானது பிரதமர் அலுவலகம் என்ற ரீதியில் பாரிய பணிகளை ஆற்றிய ஓர் ஆண்டாகும் எனக் குறிப்பிட்ட பிரதமர், டிஜிட்டல் செயலணி, சர்வதேச உறவுகள் பிரிவு மற்றும் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு உட்பட அனைத்துப் பிரிவுகளினூடாகவும் அனைவரதும் அர்ப்பணிப்புடன் பல கடமைகளை நிறைவேற்ற முடிந்தது எனத் தெரிவித்தார். அத்துடன், முன்னைய காலங்களை விடவும் மக்கள் மத்தியில் அதிக நன்மதிப்பையும் நம்பிக்கையையும் வென்றெடுத்த ஒரு நிறுவனமாகப் பிரதமர் அலுவலகம் தற்போது மாற்றம் பெற்றுள்ளதாகவும், அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

கடந்த ஆண்டில் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. இந்தப் புத்தாண்டானது அதனை விடவும் சவால்கள் மிக்கதாக அமையக்கூடும். ஆயினும், நீங்கள் அனைவரும் ஒரு குழுவாக அந்தச் சவால்கள் அனைத்தையும் உறுதியுடன் எதிர்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். கடந்த ஆண்டில் ஏற்பட்ட ’டிட்வா’ சூறாவளியினால் நாம் பல பாடங்களைக் கற்றுக்கொண்டோம். குறிப்பாக, எவ்விதப் பாகுபாடுமின்றி இவ்வாறான அவசர நிலைமைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றிய அனுபவத்தைப் பெற்றோம். இனிவரும் காலங்களில் மேலும் சூழல்நேயமிக்கவர்களாக மாறி, இவ்வாறான அனர்த்தங்களைக் குறைக்கும் வகையில் சுற்றாடலைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்குண்டு. அதற்கமைய, காலநிலை மாற்றங்கள் குறித்த புரிதலுடன், அபிவிருத்தியடைந்து வரும் நாடாக எமது அனைத்துத் திட்டங்களையும் வகுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து உரையாற்றிய பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி,

2024ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட அந்த மறுமலர்ச்சி மாற்றத்தை, அரச சேவையின் ஊடாக மக்களுக்கு நெருக்கமான விதத்தில் கொண்டுசெல்ல ’வளமான நாடு - அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தின் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தினோம். பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பாரிய வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள அரச ஊழியர்களாகிய நீங்கள் அனைவரும் வழங்கிய உன்னதமான பங்களிப்புப் பாராட்டுக்குரியது.

’வளமான நாடு - அழகான வாழ்க்கை’ கொள்கையை நடைமுறைப்படுத்துகையில், அரச சேவையின் ஆரோக்கியமான மாற்றத்திற்காக அத்தியாவசியமான பத்து கோட்பாடுகளை நாம் இனங்கண்டோம். அதில் திறமை அடிப்படையிலான பதவி நியமனங்கள் மற்றும் பதவியுயர்வுகள் ஊடாக அரச சேவையில் பாரிய சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த எம்மால் முடிந்துள்ளது. மக்கள் அந்த மாற்றத்தை நன்கு உணர்ந்துள்ளனர். இந்தச் சிறந்த நடைமுறையை மீண்டும் மாற்றுவதற்கு நாட்டு மக்கள் தயாராக இல்லை, எனத் தெரிவித்தார்.

இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் பிரதமர் அலுவலகத்தில் கடமையாற்றும் முழுப் பணியாளர் குழாமும் கலந்துகொண்டது.

பிரதமர் ஊடகப் பிரிவு