பொதுநலவாய அரசத் தலைவர்கள் மாநாட்டின் (CHOGM 2026) நிறைவேற்று அமர்வில் பிரதமர் பங்கேற்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அன்டிகுவா மற்றும் பர்புடாவில் 2026 நவம்பர் 3ஆம் திகதி ஆரம்பமான பொதுநலவாய அரசத் தலைவர்கள் மாநாட்டின் (CHOGM 2026) நிறைவேற்று அமர்வில் (Executive Session) கலந்துகொண்டார்.

இவ்வமர்வின்போது, பொதுநலவாயத் தலைவர்கள் முக்கிய உலகளாவிய பொருளாதார மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்துக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன், பொதுவான சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும் பகிரப்பட்ட இலக்குகளை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் ங்குடைமையையும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆராய்ந்தனர்.

இக்கலந்துரையாடல்கள், பொதுநலவாய அமைப்புக்குள் வர்த்தகத்தையும் முதலீட்டையும் அதிகரித்தல், தனியார் துறையின் பங்களிப்பையும் நிதியளிப்புக்கான வாய்ப்புகளையும் விரிவுபடுத்தல், அத்துடன் அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான உலகளாவியப் பொருளாதாரச் சூழலை உறுதிசெய்வதற்காகச் சர்வதேச நிதி மற்றும் வர்த்தக அமைப்புகளில் சிறந்த ஒருங்கிணைப்பை முன்னெடுத்தல் ஆகிய விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தின.

காலநிலை மீள்தன்மைக்கும் நிலையான அபிவிருத்திக்கும், குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய உறுப்பு நாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், காலநிலை நிதிப் பங்களிப்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், பொதுநலவாயத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் முக்கிய பங்கை அங்கீகரித்து, இளைஞர்களுக்கான திறன் அபிவிருத்தி, தொழில்முனைவு மற்றும் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதன் அவசியத்தை இவ்வமர்வு வலியுறுத்தியது.

பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், மீள்தன்மையைக் கட்டியெழுப்புதல், பொதுநலவாயம் முழுவதும் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னெடுத்தல் ஆகியவற்றுக்கான கூட்டு அணுகுமுறைகளை ஆராய்வதற்கும், கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதற்கும் பொதுநலவாயத் தலைவர்களுக்கு இவ்வமர்வு ஒரு முக்கியமான தளமாக அமைந்தது.

பிரதமர் ஊடகப் பிரிவு