ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் பிரதமருக்கும் இடையில் ’டிட்வா’ சூறாவளிக்குப் பிந்தைய நிவாரண நடவடிக்கைகள் பற்றிய கலந்துரையாடல்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் (Marc-André Franche) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு மே 29 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.

’டிட்வா’ (Ditwah) சூறாவளிக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்டுவரும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலும், இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் இடையிலான மனிதாபிமான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது தொடர்பிலும் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட ’மனிதாபிமான முன்னுரிமைத் திட்டம்’ (Humanitarian Priority Plan – HPP), சூறாவளியால் பாதிக்கப்பட்ட 25 மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் நோக்கில் 81 பங்காளர் அமைப்புகளின் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், இத்திட்டம் கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இத்திட்டத்தின் மூலம் சர்வதேச சமூகத்தினால் வழங்கப்பட்ட பாரிய ஒத்துழைப்பினைப் பாராட்டிய பிரதமர், எட்டப்பட்ட முன்னேற்றங்களைத் தொடர்ச்சியாக நிலைநிறுத்துவதற்காகத் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும், இக்கலந்துரையாடலின்போது ’டிட்வா’ சூறாவளி பற்றிய சமீபத்திய நிலைமையறிக்கையினை (Situation Report) ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.

இச்சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, மூலோபாய செயற்பாடுகள் தொடர்பான சிரேஷ்ட உதவிச் செயலாளர் எஸ்.யூ.ஏ. வீரசிங்க மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான உதவிச் செயலாளர் சஷினி அனுபமா ஆகியோரும், ஐக்கிய நாடுகள் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அலுவலகத் தலைவர் ஆண்ட்ரியாஸ் கர்பாத்தி அவர்களும், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சஷிகா சோமரத்ன மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு பணிப்பாளர் சமன்மலி அதுலகம ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு