காணாமல் போனவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

காணாமல் போனவர்கள் தொடர்பில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இன்று (09) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய:

காணாமல் போனோர் தொடர்பாக அநீதிக்குள்ளானவர்களுக்கு நீதி மற்றும் சமத்துவத்தை வழங்க அரசாங்கம் உறுதியுடன் உள்ளது. ஆனால் நாங்கள் நேரில் சென்று இந்தப் விசாரணைகளைச் செய்ய முடியாது. இந்த விடயம் சட்ட ரீதியாகவும் நிறுவன ரீதியாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட நிறுவன ரீதியான தோல்விகளும், முறைமை ரீதியான தோல்விகளுமே இந்த விடயங்களில் தாமதத்திற்கு முதன்மையான காரணங்களாகும். எனவே நாம் அதில் கவனம் செலுத்த வேண்டும்.

இதன் மூலம் பிரபல்யமாவதற்காகவன்றி, இதுபோன்ற விடயங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்குத் தேவையான நிறுவனங்கள் மற்றும் சூழலை உருவாக்குவது பற்றியும், ஏற்கனவே உள்ள அநீதிகள் குறித்து விசாரித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

நிவாரணம் வழங்கும் அலுவலகம் மற்றும் காணாமல் போனோர் அலுவலகம் என்பன பெயரளவில் மட்டுமே நிறுவப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு அவற்றின் மீது நம்பிக்கை இல்லை. போதுமானளவு பலமில்லாதமையாலும் அவை தோல்வியடைந்தன.

எனவே இதுதான் கடந்த காலங்களில் நடந்தது, இதைத்தான் நாங்கள் சரிசெய்ய முயற்சிக்கிறோம். இந்த இடங்களில் சரியான நபர்கள் இருப்பதையும், வளங்கள் போதுமான அளவு ஒதுக்கப்படுவதையும், இந்த நிறுவனங்கள் அவற்றின் செயற்பாடுகளைச் செய்ய முடியும் என்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.

காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகள் இன்னும் உள்ளன. இவை கடந்த 16 ஆண்டுகளாக இருந்து வரும் வழக்குகள். இவை எளிதானவை அல்ல. எனினும் நீதியை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்காக நீதி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை தற்போது அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு