பேதங்கள் இன்றி மகிழ்ச்சியான, பண்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கு பொருத்தமான சூழலை அனைவருக்கும் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்கு. - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

எந்தவொரு பேதங்களும் இன்றி மகிழ்ச்சியான பண்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கு பொருத்தமான சூழலை அனைவருக்கும் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்கு என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் 22 பில்லியன் ரூபா சீன நிதியுதவியின் கீழ் இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படும் வீடமைப்பு திட்டத்தின் முதற்கட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு மொரட்டுவை, பெடரிவத்த பகுதியில் இன்று (27) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

சீன நிதியுதவியின் கீழ் 1996 வீடுகளை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் மொரட்டுவை, பெடரிவத்த பகுதியில் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் ஊடாக குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கென 575 வீடுகள் மற்றும் கொட்டாவ பகுதியில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வீடமைப்பு திட்டத்தின் ஊடாக 108 வீடுகள் மூத்த கலைஞர்களுக்கும் வழங்கப்படவுள்ளன.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

இந்த வீடமைப்பு திட்டத்தினை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்ததை முன்னிட்டு நாம் சீன அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கின்றோம். வீடு என்பது குடும்பத்திற்கு, நபருக்கு அரவணைப்பை வழங்கும் ஒரு இடமாகும். பிரஜை என்ற அடிப்படையில் கிடைக்க வேண்டிய நல்லதொரு வாழ்க்கைக்கும், பண்புமிக்க வாழ்க்கைக்கும் பாதுகாப்பை வழங்கக்கூடிய ஓர் இடமாகும். வீடு மாத்திரமல்ல, பலம்மிக்க குடும்பம், சமூகத்தை கட்டியெழுப்புவதும் அரசிற்கு அவசியமானது. விசேடமாக பெண்கள் மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்பு, அவர்களின் தேவைகளுக்கு கிடைக்கும் சந்தர்ப்பம் மிகவும் முக்கியமானது.

புறநகர் பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறுவோர் மிகவும் நெருக்கடி நிறைந்த வாழ்க்கையை வாழுகின்றனர். அதேபோல் வீடு ஒன்று இல்லாததால் சிலர் மிகவும் பாதுகாப்பற்ற வாழ்க்கையை வாழுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் இன, மத, பாலின சமூகத்தன்மை உள்ளிட்ட எந்தவொரு பாகுபாடும் இன்றி மகிழ்ச்சியான, பண்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கு பொருத்தமான சூழலை அனைவருக்கும் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்காகும். இதற்கென சீன அரசாங்கத்திடமிருந்து எமக்கு கிழ்க்கப்பெறும் இந்த நிதியுதவியைப் போன்று இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படும் ஒத்துழைப்புக்கும் தனது நன்றியைத் தெரிவிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக, நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் டி.பீ.சரத், இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhen Hong, சீன தூதுவர் அலுவலகத்தின் பொருளாதார மற்றும் வணிக ஆலோசகர் டென்க் யான் டி, நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், சீன அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு