இலங்கைக்கு கிடைக்கும் சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் சிறந்த நிலையில் உள்ளது

ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் பிரதமரிடம் தெரிவிப்பு.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் Marc-André Franche அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று 2025 டிசம்பர் 20 ஆந் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை அண்மையில் சந்தித்த இயற்கை பேரழிவைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு நிவாரணம் வழங்க அரசாங்கம் விரைவாகவும் முறையாகவும் செயற்பட்டதற்கு திரு. மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் பாராட்டு தெரிவித்தார்.

உலகின் ஏனைய நாடுகளின் அனுபவங்களுடன் ஒப்பிடும்போது, இதுபோன்ற பேரனர்த்தங்களின் போது இலங்கைக்கு கிடைத்த சர்வதேச ஒத்துழைப்பின் அளவு மிக உயர்ந்த நிலையில் உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைக்குத் தேவையான உதவிகளை வழங்க தனது தொழில்முறை மற்றும் தனிப்பட்ட ஈடுபாட்டை முழுமையாகப் பயன்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து இலங்கைக்கு கிடைத்துவரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பைப் பாராட்டிய பிரதமர், இந்த பேரனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளில் அரசியல் அதிகார தரப்புகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆற்றிய பணி சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டார். இந்த வெற்றிக்கு, குறிப்பாக மாவட்டத் தலைமை முதல் பிரதேச மட்டத்தில் கீழ் மட்ட அதிகாரிகள் வரை அனைவரின் கூட்டு முயற்சியே காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

கிடைக்கப்பெற்ற சர்வதேச ஒத்துழைப்பை முறையாக நிர்வகிப்பதற்கும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டெடுப்பதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு