இலங்கையை உலகின் பிரதான வர்த்தக மையமாக மாற்றுவதற்குப் பொறியியலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழில்வல்லுநர்களும் முன்வந்து செயற்பட வேண்டிய காலம் கனிந்துள்ளது
மக்களை மையப்படுத்திய அபிவிருத்திச் செயற்பாட்டுக்காகப் பெருமளவில் முதலீடு செய்ய அரசாங்கம் தயாராக உள்ளதாகவும், இலங்கையை உலகின் பிரதான வர்த்தக மையமாக மாற்றுவதற்குப் பொறியியலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழில்வல்லுநர்களும் முன்வர வேண்டிய காலம் கனிந்துள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.
"ஸ்மார்ட் பொறியியல், தாக்குப்பிடிக்கும் திறன் மற்றும் நிலைபேறான தன்மை" (Smart Engineering, Resilience and Sustainability) எனும் கருப்பொருளின் கீழ், நவம்பர் 11ஆம் திகதி பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகம் (CECB) மற்றும் மத்திய பொறியியல் சேவை நிறுவனத்தின் (CESL) 2026ஆம் ஆண்டுக்கான மாநாட்டில் (CECB-CESL Symposium 2026) கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
மக்களை மையப்படுத்திய அபிவிருத்திச் செயற்பாட்டுக்காகப் பெருமளவில் முதலீடு செய்ய அரசாங்கம் தயாராக உள்ளது. தொலைதூரப் பிரதேசங்களில் பாடசாலைகளையும் வைத்தியசாலைகளையும் நிர்மாணித்தல், வீதிக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், அத்துடன் துறைமுகங்கள் மற்றும் சமுத்திர சேவைகளை மீளக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றின் மூலம் இலங்கையை உலகின் பிரதான வர்த்தக மையமாக மாற்றுவதற்குப் பொறியியல் துறையின் பங்களிப்பு அத்தியாவசியமானதாகும். நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்வதற்காகப் பொறியியலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழில்வல்லுநர்களும் முன்வர வேண்டிய காலகட்டத்திலேயே நாம் இருக்கிறோம்.
சுற்றுச்சூழலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் துறையாகப் பொறியியல் துறை விளங்குவதால், நாம் தற்போது முகங்கொடுத்து வரும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் சவால்கள் குறித்து விசேடமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. வெள்ளப்பெருக்கு போன்ற சுற்றுச்சூழல் அனர்த்தங்கள் இப்போது அரிதானவை அல்ல; அவை அடிக்கடி இடம்பெறுகின்றன. எனவே, எமது வடிவமைப்புகளிலும் திட்டமிடல்களிலும் நிலைபேறான தன்மை, எந்தவொரு அனர்த்தத்தையும் தாக்குப்பிடிக்கும் திறன் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அத்துடன், செயற்கை நுண்ணறிவு AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு மத்தியில், பொறியியல் கல்வியும் பயிற்சியும் எதிர்காலத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட வேண்டும்.
கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய சூழ்நிலை காரணமாகப் பல திறமையான இளம் பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதால், பாரிய ஆளணிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளுக்காக அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்தபோதிலும், திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்குப் போதுமான தொழில்நுட்பப் பணியாளர்கள் இல்லை. எனவே, இளம் தொழில்வல்லுநர்களை நாட்டுக்குள் தக்கவைத்துக்கொள்வதற்கும், அவர்களை நிறுவனங்களின்பால் ஈர்ப்பதற்கும் புதிய கோணத்தில் சிந்திக்க வேண்டியுள்ளது.
பொறியியலாளர்கள் தொழில்நுட்ப அம்சத்துக்கு மாத்திரம் மட்டுப்பட்டுவிடாமல், திட்டங்களை விரைவாகவும் வினைத்திறனாகவும் நிறைவு செய்யக்கூடிய முகாமைத்துவத் திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், ஒவ்வொரு உட்கட்டமைப்பு வசதியும் இறுதியில் பொதுமக்களாலேயே பயன்படுத்தப்படுவதால், மக்களின் நடத்தைகள் மற்றும் சமூகம் குறித்த நல்லதொரு புரிதலுடன் வடிவமைப்புகளில் ஈடுபடுவது மிகவும் அவசியமாகும், என பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க, CECB/CESL இன் தலைவர் பொறியியலாளர் ஏ. பி. ஜயதிஸ்த, CECB இன் பொது முகாமையாளர் பொறியியலாளர் எஸ். ஏ. யு. டி. சி. சிரிவர்தன ஆகியோருடன், அமைச்சுகளின் செயலாளர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு