நாட்டின் கல்வித் துறையில் தரநிலைப்படுத்தல் மற்றும் தொழில்சார் அபிவிருத்திக்காக ’கல்விச் சபை’யை நிறுவுவதற்கான சட்டவரைவு - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாட்டின் கல்வித் துறையில் தரநிலைப்படுத்தல், தொழில்சார் அபிவிருத்தி மற்றும் ஆசிரியர் தொழிலின் கௌரவத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் “கல்விச் சபை”யை நிறுவுவதற்கான சட்ட வரைவைத் தயாரிக்கும் பணிகளை ஒரு வருட காலத்திற்குள் நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பத்மசிறி பண்டாரவினால் முன்வைக்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இன்று (ஒக்டோபர் 07) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் பின்வருமாறு தெரிவித்தார்:

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்தக் கல்விச் சபையை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்கான சட்ட வரைவைத் தயாரிப்பதற்கு 2026 ஆகஸ்ட் 25 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளது. அதற்கமைய, அரசியலமைப்புக்கும் தற்போது நடைமுறையில் உள்ள சட்ட விதிகளுக்கும் ஏற்ப இந்தச் சட்ட வரைவைத் தயாரிப்பதற்கான குறித்த அறிக்கையை சட்டவரைஞருக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த முன்மொழியப்பட்ட கல்விச் சபையை நிறுவுவதன் மூலம் பல பிரதான நோக்கங்களை நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. முன்பள்ளி, ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வி மட்டங்களில் உள்ள கல்வித் தொழில் வல்லுநர்களின் தொழில்சார் அபிவிருத்தி, தரநிலைப்படுத்தல், பதிவு செய்தல் ஆகியவற்றுடன் அவர்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேற்பார்வை செய்தல் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளும் இதன் மூலம் மேற்கொள்ளப்படும். அதேபோன்று, தொழில்சார் அபிவிருத்தி மற்றும் தர உத்தரவாதம் தொடர்பாக கல்வி அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதும் இதன் மற்றுமொரு பணியாகும். அனைவருக்கும் இருமொழிக் கல்விக்கான வாய்ப்புகளை வழங்குவதற்காகத் தரமான இருமொழிக் கல்வியாளர்களையும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட கல்வித் தொழில் வல்லுநர்களையும் உருவாக்குவதும் இதன் நோக்கங்களில் ஒன்றாகும். இதற்கு மேலதிகமாக, ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் தொழில்சார் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களுக்கான தகைமைகளைத் தரநிலைப்படுத்துதல், கல்வித் தொழில் வல்லுநர்களின் உரிமைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கும் அவர்களுக்கும் இடையில் இடைத்தரகராகச் செயற்படுதல், அத்துடன் அனைவருக்கும் நியாயமானதும் தரமானதுமான கல்வியைப் பெறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துதல் ஆகியவையும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்த மறுசீரமைப்புகளில் மிகவும் முக்கியமான விடயம் ஆசிரியர்களுக்கான விசேட தொழில்சார் அனுமதிப்பத்திரம் மற்றும் சான்றிதழ் வழங்கும் முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதாகும். திறன் தரநிலைகள் மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில் தகைமைகளைப் பெற்றுள்ளவர்களுக்கு மாத்திரமே இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்படும். இதன் மூலம் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட தொழில் வல்லுநர்களுக்கு இருப்பதைப் போன்ற உயர்ந்த தொழில்சார் கௌரவத்தை ஆசிரியர் தொழிலுக்கும் வழங்க முடியும். அதேபோன்று, ஆசிரியர்கள் தமது சேவையை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்குத் தேவையான பாடசாலை மற்றும் வகுப்பறை மட்டத்திலான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எவ்வாறாயினும், இந்தக் கல்விச் சபையை நிறுவுவதன் மூலம் அரச அல்லது அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதோ அல்லது அவற்றின் கற்கைநெறிகளின் தரத்தைப் பரிசீலிப்பதோ இடம்பெறாது. இது பொதுக் கல்வி முறைமையின் தரத்தை மேம்படுத்துவதற்காக மாத்திரம் கொண்டுவரப்படும் வேலைத்திட்டமாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு