கழிவு முகாமைத்துவம் தொடர்பில் சமூக மற்றும் பாடசாலை மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
மேல் மாகாண கழிவு முகாமைத்துவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட உபகுழுவின் கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்பில் நவம்பர் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் போது, மேல் மாகாணத்தின் வீடுகள், வீதிகள், நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் வெளியேற்றும் நகரத் திண்மக் கழிவு முகாமைத்துவத்தின் தற்போதைய நிலை, திண்மக் கழிவுகளால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் கழிவு முகாமைத்துவம் பற்றிய நிபுணத்துவமிக்க உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை, கழிவு முகாமைத்துவத்திற்குப் பொருத்தமான நிலங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போதாமையினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், கழிவு முகாமைத்துவம் தொடர்பில் சமூக மட்டத்திலும் பாடசாலை மட்டத்திலும் முறையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியதோடு, இதற்கு ’பிரஜா சக்தி ’மற்றும் க்ளீன் ஸ்ரீலங்கா’ ஆகிய செயர்த்திட்டங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பாரிய பணியை முன்னெடுக்க முடியும் என்பதை வலியுறுத்தினார்.
தொழிற்கல்வித் துறையுடன் இணைந்து, கழிவு முகாமைத்துவத்தைப் புதியதொரு தொழில்சார் கற்கையாக அறிமுகப்படுத்துவதன் மூலம், கழிவு முகாமைத்துவம் குறித்த சமூகப் புரிதலை ஏற்படுத்தவும், புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான லக்ஷ்மன் நிபுணாரச்சி, பாராளுமன்ற உறுப்பினரும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுவின் தலைவருமான சந்தன சூரியாரச்சி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக்க குமார, மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகாரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு