"தகவல் தொடர்பாடலின் போது ஊடக நிறுவனங்கள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும்"
"மீட்பு நடவடிக்கைகளுக்காக சர்வதேச ஒத்துழைப்பு பெறப்படுகிறது"
நாடு முழுவதும் நிலவும் அனர்த்த நிலைமையின் காரணமாக, அபாயகரமான இடங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் பொலிஸ், இராணுவம் மற்றும் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய, உங்கள் மற்றும் உங்கள் நெருங்கியவர்களின் உயிர் பாதுகாப்பு குறித்துக் கவனத்தில் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அனர்த்தத்திற்கு உள்ளான மக்களின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்குப் பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டம் உட்பட நாடு முழுவதும் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை தொடர்பில் நவம்பர் 28 ஆம் திகதி சூம் (Zoom) தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு நாடு முழுவதும் நிலவும் அபாய நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதமர், மற்ற எல்லாவற்றையும் விட உயிர்களைக் காப்பாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு எனக் குறிப்பிட்டார். இந்தத் தருணத்தில் முழு நாடும் ஒரு தேசியப் பேரழிவை எதிர்கொண்டுள்ளதாகவும், இதில் அனைவரும் மிகுந்த ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் எனவும், நேற்று முதல் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் இடருக்குள்ளாகியுள்ள மக்களை மீட்பதற்காகப் பொலிஸ், முப்படையினர், தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம், மாவட்ட அதிகாரிகள், பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் அனைத்து அதிகாரிகளும் பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை இணைத்துக்கொண்டு விசேட கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டங்கள் நேற்று முதல் நடத்தப்பட்டதாகவும், அந்தக் கலந்துரையாடல்களுக்கு அமைய, தேசியப் பேரழிவை எதிர்கொண்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் அனைவரினதும் இணக்கப்பாட்டுடன் மக்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அனர்த்த நிலைமை குறித்து வெளியாகும் தகவல்களுக்கு அமையச் செயற்படும் போது, அரசாங்கத் தகவல் திணைக்களம் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் ஊடாக வெளியாகும் உண்மையான தகவல்களின் அடிப்படையில் மட்டும் முடிவுகளை எடுக்குமாறும், அனைத்து ஊடக நிறுவனங்களும் இந்தத் தருணத்தில் தகவல் தொடர்பாடலின் போது மிகுந்த பொறுப்புடன் செயற்படுமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டார். அத்துடன் சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் சுகாதாரம் மற்றும் செல்லப்பிராணிகளின் பாதுகாப்பு குறித்தும் விசேட கவனம் செலுத்துமாறு அனைத்துத் தரப்பினரிடமும் அவர் கோரிக்கை விடுத்தார்.
நாட்டின் 25 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ள இந்தத் தருணத்தில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அனைத்து வசதிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவைகளுக்காக 30 பில்லியன் ரூபா நிதியும், அனர்த்த மற்றும் நிவாரண சேவைகளுக்காக 1.2 பில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிகமாகத் தேவைப்படின் மேலும் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு, திம்பிரிகஸ்யாய, கடுவெல, கொலன்னாவ, சீதாவக்க, பாதுக்கை, ஹோமாகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் அதிக இடர் மிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அப்பிரதேசங்களில் அபாயத்திற்கு உள்ளான இடங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகள் தற்போது முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை ஏனைய பிரதேசங்களில் வீதிகள் மற்றும் நீர் வழிந்தோடும் இடங்களைச் சுத்தம் செய்யும் பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
கொழும்பு மாவட்டம் சார்ந்து நோயுற்றவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை வைத்தியசாலைகளில் அனுமதிப்பதற்கு மாவட்ட வைத்தியசாலைகள் தயாராக இருப்பதாகவும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்கும் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அத்துடன், மக்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காகச் சர்வதேச ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்தக் கலந்துரையாடலின் போது பிரதமர் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், வளிமண்டலவியல் திணைக்களம், தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம், நீர்ப்பாசனத் திணைக்களம், கொழும்பு மாநகர சபை, இலங்கை பொலிஸ், இலங்கை இராணுவம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு