தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சித் திணைக்களத்தின் கீழ் உள்ள 25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழுவின் மூன்றாவது கூட்டம், ஜூலை 09, பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் கூடியது.
இதன்போது, தொழிற்கல்வித் துறையில் புதிய கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், உள்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் தொழிற்கல்விக்கான புதிய பாதைகளைத் திறந்துவிடுவதற்கான ஓர் முன்னோடி நகர்வாக இந்த 25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக, தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே ஆகியோருடன் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு