தொழில்துறையின் எதிர்காலமானது தொழினுட்ப அறிவில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை, மாறாக நேர்மை, தம்மைத் தயார்படுத்திக்கொள்ளும் திறன், புத்தாக்கத் திறன் மற்றும் அரச சேவை மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக்கொண்ட சந்ததியினர் மீதே தங்கியிருக்கின்றது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
“எல்லைகளுக்கு அப்பால்சென்று, அடிவானத்திற்கு அப்பால் - உலகின் எதிர்காலத்தைச் சித்தரித்தல்” எனும் கருப்பொருளில் ஆகஸ்ட் 02 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இலங்கை அளவையாளர் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது, தேசிய பங்களிப்பு மற்றும் தொழில்முனைவோர் விருது மற்றும் தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கான கௌரவிப்பு விருது ஆகிய விருதுகள் இதன்போது வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
அளவையாளர் தொழில்துறையானது ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு அடிப்படையாக அமையும் பிரதான தொழில்களுள் ஒன்றாகும். அவர்களின் பெரும்பாலான பணிகள் பொதுமக்களுக்கு நேரடியாகப் புலப்படாவிட்டாலும், நிலையான அபிவிருத்தி, திறமையான காணி முகாமைத்துவம், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாகச் செயற்படுத்துதல் உள்ளிட்ட தேசிய வளர்ச்சியின் ஒவ்வொரு துறையிலும் செல்வாக்குச் செலுத்துகின்றன. சிறப்பாகத் திட்டமிடப்பட்ட ஒவ்வொரு நகரத்திற்கும், பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கும், விவசாய அபிவிருத்திக்கும் மற்றும் பாதுகாப்பான காணி உறுதிக்கும் பின்னால் திறமையான அளவையாளர்களின் தொழினுட்ப அறிவே இருக்கின்றது.
இலங்கை முழுவதும் செயற்படுத்தப்படும் பிரதான உட்கட்டமைப்பு மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்கள் ஊடாகத் தேசிய அபிவிருத்திக்காக அளவையியல் துறையின் தேவை எவ்வாறானது என்பது தெளிவாகின்றது. பாதுகாப்பான காணி உரிமையையும் திறமையான காணி நிர்வாகத்தையும் உறுதிப்படுத்துவதற்காகத் நாடளாவிய ரீதியில் வருடாந்தம் சுமார் 50,000 காணித்துண்டுகளின் எல்லைக் கற்களை அடையாளப்படுத்தி, அரசாங்கத்தின் காணி உரிமை வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதும் அளவையியல் துறை மேற்கொண்டு வரும் முக்கியமானதொரு பணியாகும்.
வடமத்திய மற்றும் வட மாகாணங்களின் நீர்ப்பாசன அபிவிருத்தி மற்றும் நீர்வள மேலாண்மைக்காக அளவையாளர்களினால் 100 க்கும் மேற்பட்ட குளங்களின் அளவீட்டுப் பணிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து அனுராதபுர மாவட்டத்தின் ஹுருளுவேவ வரை நீரைக் கொண்டுசெல்லும் ரஜரட்ட கால்வாய் திட்டம் நீண்ட நிலத்தடிச் சுரங்கப்பாதையினைக் கொண்டுள்ளதுடன், அகழ்வாராய்ச்சிப் பணிகளின் துல்லியத்தன்மை மற்றும் தரத்தினை உறுதிப்படுத்துவதற்காக அளவையாளர்களினால் அதன் சீரமைப்பு மற்றும் சரிவுக் கோணங்கள் (gradient) தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அதிவேகப் பாதைகளுக்கான அளவீட்டுப் பணிகள் உள்ளிட்ட பிரதான உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் அவர்களின் அறிவும் திறனும் அத்தியாவசியமானதாக இருக்கின்றன. அளவையாளர்களின் துல்லியமான அளவீடுகளினாலும் தொழினுட்ப அறிவினாலும் பிரம்மாண்டமான தேசியத் திட்டங்கள் பாதுகாப்பாகவும் துல்லியமாகவும் முன்னெடுக்கப்படுகின்றன என்பதையே இந்த அபிவிருத்தித் திட்டங்கள் எமக்கு உணர்த்துகின்றன.
இன்று ஒரு அளவையாளரின் பங்களிப்பானது காணி எல்லைகளை அளவிடுவதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை. உலகம் முழுவதிலும் செயற்கைக்கோள் தொழினுட்பம், புவியியல் தகவல் முறைமைகள் (GIS), தொலைவு உணர்தல் (Remote Sensing), செயற்கை நுண்ணறிவு (AI), ட்ரோன் (Drone) தொழினுட்பம் மற்றும் டிஜிட்டல் வரைபடமாக்கலின் வளர்ச்சி ஆகியவற்றின் ஊடாக அரசாங்கங்கள் நகரங்களைத் திட்டமிடுதல், இயற்கை வளங்களை நிர்வாகித்தல், பேரிடர்களுக்கு பதிலளித்தல் மற்றும் அரச சேவைகளை வழங்கும் முறையை முற்றிலும் மாற்றியமைத்திருக்கின்றன. நம்பகமான புவிசார் தகவல்கள் இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமான தேசிய வளமாக மாறியிருக்கின்றன.
நாம் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் நிலையான அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்கும் போது, திறமையான, வெளிப்படைத்தன்மைமிக்க மற்றும் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்ட நிறுவனங்களை உருவாக்க வேண்டும். காணி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் டிஜிட்டல் நிர்வாகத்தினைப் பலப்படுத்துவதற்கு எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றது. நீண்டகாலத் தேசியத் திட்டமிடலுக்குத் துல்லியமான அதே நேரத்தில், இலகுவாகப் பெறக்கூடிய காணி பற்றிய தகவல் முறைமையொன்று அத்தியாவசியமாகின்றது. அதற்காக அரச நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் இலங்கை அளவையாளர் நிறுவனம் போன்ற தொழில்சார் நிறுவனங்களுக்கு இடையே நெருங்கிய ஒத்துழைப்பு இருக்கவேண்டியது அவசியமாகும்.
வெள்ளப்பெருக்கு, வறட்சி, கடற்கரை அரிப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் சவால்கள் ஊடாகக் காலநிலை மாற்றங்கள் எமது சமூகத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. எனவே புவிசார் அறிவியல்துறையின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கின்றது.
அண்மையில் ஏற்பட்ட ’திட்வா’ சூறாவளி (Cyclone Ditwah) மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கானது, வழமை நிலைக்குத் திரும்புவதன் உண்மையான அளவுகோல் என்பது மீளக் கட்டியெழுப்பும் வேகமல்ல, மாறாக நாம் மீளக் கட்டியெழுப்பியவற்றின் தரம், மீளெழும் திறன் மற்றும் நிலையான தன்மையே ஆகும் என்பதையே எமக்கு நினைவூட்டியது.
பெரும்பாலான வீடுகள், அரச கட்டிடங்கள், வீதிகள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகளுக்குக் கடும் சேதங்கள் ஏற்பட்டதோடு பெரும்பாலும், பொருத்தமற்ற நிலத்தைத் தேர்வுசெய்தல், போதியளவு திட்டமிடலின்மை, தரக்குறைவான பலவீனமான கட்டுமானம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் குறித்துப் போதிய கவனம் செலுத்தாமை ஆகியவற்றின் காரணமாகவே ஏற்பட்ட அழிவுகள் மேலும் அதிகரித்தன.
ஆகையினால், சான்றுகளின் அடிப்படையிலான திட்டமிடலும், துல்லியமான வரைபடமாக்கலும், மீளெழும் திறன்கொண்ட உட்கட்டமைப்பு வசதிகளைக் கட்டியெழுப்புதலும், பாதிப்பிற்குள்ளாகக்கூடிய சமூகங்களைப் பாதுகாப்பதற்கும், எதிர்காலச் சந்ததியினருக்காக தகவல்களுடன் கூடிய சரியான தீர்மானங்களை எடுப்பதற்கும் மிகவும் அவசியமானவையாகும்.
தொழில்துறையின் எதிர்காலமானது வலுவான தொழினுட்ப அறிவில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை, மாறாக நேர்மை, மீண்டும் தம்மைத் தயார்படுத்திக்கொள்வதற்கான திறன், புத்தாக்கம் மற்றும் அரச சேவை மீதான வலுவான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு தலைமுறையிலேயே தங்கியுள்ளது என்பதே எனது நம்பிக்கையாகும்.
அவர்கள் புவிசார் தொழினுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு (AI), தொலைவு உணர்தல், ட்ரோன்கள், செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் கட்டமைப்புகள், Digital Twins (நிஜத்தின் மெய்நிகர் நகல்) மற்றும் தரவுப் பகுப்பாய்வுகளின் வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் அதிவேகமாக மாற்றமடைந்துவரும் ஒரு தொழிற்துறைக்குள்ளேயே பிரவேசிக்கின்றனர். இந்த மாறிவரும் சூழலில் காலத்திற்கு ஏற்றவாறு நிலைத்திருக்க வேண்டுமாயின், இளம் தொழில்முறையாளர்கள் தங்களது தொழினுட்ப ஆற்றல்களைத் தொடர்ச்சியாகக் கூர்மைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதோடு பொறியியலாளர்கள், திட்ட வடிவமைப்பாளர்கள், சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றும் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்" என பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் காணி மற்றும் நீர்ப்பாசனப் பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண, பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஏ. ருவன்திலக்க, தெஹிவளை கல்கிஸ்சை மாநகரசபையின் முதல்வரும் முன்னாள் மேலதிக நில அளவையாளர் நாயகமுமான பராக்கிரம சாந்த, விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி. பி. விக்கிரமசிங்க, மேலதிக நில அளவையாளர் நாயகம் பாக்யா பிரணாந்து, முன்னாள் நில அளவையாளர் நாயகம் ஷியாமாலீ பெரேரா ஆகியோர் உட்பட இலங்கை அளவையாளர் நிறுவனத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு