நிப்பான் நிதியத்தின் (The Nippon Foundation) கௌரவத் தலைவர், இலங்கைப் பிரதமரைச் சந்தித்தார்.

நிப்பான் நிதியத்தின் (The Nippon Foundation) கௌரவத் தலைவர் திரு. யோஹெய் சசகாவா (Yohei Sasakawa) அவர்கள், நவம்பர் 6ஆம் திகதி அலரி மாளிகையில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தார்.

திரு. சசகாவாவை அன்புடன் வரவேற்றப் பிரதமர், அவரது இரண்டாவது இலங்கை விஜயத்தைப் பாராட்டினார். இதன்போது, ஜனாதிபதியின் பங்கேற்பில் இன்று காலையில் நடைபெற்ற, குஷ்டரோக (Leprosy) நிவாரணம் பற்றிய மாநாடு குறித்துத் திரு. சசகாவா பிரதமருக்கு விளக்கமளித்தார். அத்தோடு விசேட தேவைகள் உள்ள மாணவர்களுக்கு உதவியளித்தல் உள்ளிட்ட, இலங்கையில் நிப்பான் நிதியத்தின் தொடர்ச்சியான செயற்றிட்டங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

அத்தோடு இலங்கையில் இயங்கி வரும், செயற்கை மற்றும் எலும்பு முறிவுச் சாதனப் பாடசாலை (Sri Lankan School of Prosthetics and Orthotics) குறித்துக் கலந்துரையாடியதோடு, அரசாங்கத்தின் உதவியுடன் அந்த நிறுவனத்தைப் பல்கலைக்கழக அந்தஸ்திற்குத் தரமுயர்த்த வேண்டுமென முன்மொழிந்தார். அதற்குப் பதிலளித்த பிரதமர், இந்த முன்மொழிவின் சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்யும் பொறுப்பைக் கல்வி அமைச்சுக்குக் கையளிப்பதாகத் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் செயல்படுத்தி வரும், நிப்பான் நிதியத்தின் "100 பாடசாலைகள் திட்டத்தினை"ப் பாராட்டிய பிரதமர், விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வி மற்றும் அவர்களைச் சமூகமயப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார். அத்தோடு சில திட்டங்கள் எதிர்கொள்ளும் வளப் பற்றாக்குறையை ஏற்றுக்கொண்ட பிரதமர், இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்தார்.

இதன்போது இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர், அகியோ இசோமாட்டா​ைAkio Isomat, உடல் அல்லது அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்களுக்கும் சம வாய்ப்புகளையும் வசதிகளையும் பெற்றுக் கொடுப்பதற்கும் அவர்களது சமூக நலன்களை மேம்படுத்துவதில் இலங்கையுடனான இருதரப்புக் கூட்டணி உறவை பலப்படுத்துவதில் ஜப்பானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

கல்வி, வளங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு அணுகல்தன்மை மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் இலங்கை, ஜப்பான் மற்றும் நிப்பான் நிதியம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான பொதுவான உறுதிப்பாட்டை இருதரப்பினரும் வெளிப்படுத்தினர்.

இந்தச் சந்திப்பில் நிப்பான் நிதியத்தின் கௌரவத் தலைவர் திரு. யோஹெய் சசகாவா , இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகியோ இசோமாட்டா Akio Isomata, ஜப்பானியத் தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் திரு. ரியோ தகாவோகா Ryo Takaoka மற்றும் நிப்பான் நிதியத்தின் தலைவரின் செயலாளர் திரு. ஷோட்டா நகயாசு Shota Nakayasu ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கைத் தரப்பில் பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த, வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி சாவித்திரி பானபொக்கே, மற்றும் வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா பிரிவின் உதவிப் பணிப்பாளர் திருமதி காயங்கா டயஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு