பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஒக்டோபர் 30ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ’இலங்கை அக்ரிகனெக்ட் கூட்டு நடைமுறைப்படுத்தல் திட்டத்தின்’ (Sri Lanka AgriConnect Joint Implementation Plan) அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டார். டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயப்படுத்துவதையும் தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக வங்கிக் குழுமத்தின் (World Bank Group) அக்ரிகனெக்ட் (AgriConnect) திட்டம், இலங்கை அரசாங்கம், உலக வங்கிக் குழுமம் மற்றும் சர்வதேச விவசாய அபிவிருத்தி நிதியம் (IFAD) ஆகியவற்றின் கூட்டாண்மையுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சிறு விவசாயத் துறையை மாற்றியமைத்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் உலகளாவிய உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
இதன்போது, இலங்கை அக்ரிகனெக்ட் கூட்டு நடைமுறைப்படுத்தல் திட்டம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, உலக வங்கிக் குழுமம் மற்றும் சர்வதேச விவசாய அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இலங்கையின் விவசாயத் துறையின் எதிர்காலம் தேசியப் பொருளாதாரத்துடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் நீண்டகால அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதற்கும் விவசாயிகளுக்கு ஆதரவளித்தல், உணவு முறைமைகளை வலுப்படுத்துதல் மற்றும் கிராமிய சமூகங்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவை அத்தியாவசியமானவை எனவும் அவர் வலியுறுத்தினார்.
அக்ரிகனெக்ட் ஸ்ரீலங்கா திட்டமானது, நாட்டின் விவசாய–உணவுத் துறையை அதிக உற்பத்தித்திறன் கொண்டதாகவும், சவால்களுக்கு ஈடுகொடுக்கக்கூடியதாகவும், போட்டித்தன்மை மிக்க பொருளாதாரத்தை நோக்கி முன்னேறுவதற்கான பாதையாகவும் மாற்றுவதற்கான முக்கியமானதொரு படியாகும் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார். இந்தப் பொதுவான இலக்கை அடைவதற்காக அரசாங்கம், அபிவிருத்திப் பங்காளிகள், தனியார் துறை மற்றும் விவசாயச் சமூகங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
2027–2031ஆம் ஆண்டுகளுக்கான பொது முதலீட்டுத் திட்டம் (Public Investment Programme) தொடர்பாகக் குறிப்பிட்ட பிரதமர், ஐந்து வருடக் காலப்பகுதியில் பொது முதலீடுகளுக்காக ஏறத்தாழ 17.5 ட்ரில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சுமார் 8.3 ட்ரில்லியன் ரூபா உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை நோக்கிய மாற்றத்துக்கு ஆதரவளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த முதலீடுகளின் மூலம் விவசாயம், கைத்தொழில், சுற்றுலாத்துறை, புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் ஆகிய துறைகள் வலுப்படுத்தப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார். அதேவேளை, உற்பத்தித்திறனை அதிகரித்தல், முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் நாடு முழுவதும் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதும் இந்த முதலீடுகளின் மற்றுமொரு நோக்கமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் மூலோபாயக் கூட்டாண்மைகள் ஊடாக விவசாயத்தை நவீனமயப்படுத்துதலும் வலுவான விவசாயத் துறையைக் கட்டியெழுப்புதலும் இலங்கையின் நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கு அத்தியாவசியமானவை என்பதையும் பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த; பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமன்த வித்யாரத்ன; பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி; அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க; சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத் துணைத் தலைவர் சர்வேஷ் சூரி; சர்வதேச விவசாய அபிவிருத்தி நிதியத்தின் (IFAD) இலங்கைக்கான பணிப்பாளர் ஷெரினா தபஸ்ஸும் ஆகியோர் உள்ளிட்ட உலக வங்கிக் குழுமம் மற்றும் ஏனைய அபிவிருத்திப் பங்காளர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அத்தோடு, தனியார் துறையினர், விவசாய அமைப்புகள், மீனவ மற்றும் கால்நடை வளர்ப்புச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள், பெருந்தோட்டத் துறையின் பங்குதாரர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு