இலங்கையின் பன்முக மத நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில், பாராளுமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நவராத்திரி பூசை விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் ஒக்டோபர் 20 ஆம் திகதி கோலாகலமாக நடைபெற்றது.
வருடாந்தம் நடத்தப்படும் நவராத்திரி பூசை, இம்முறை புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் இந்து சமய விவகாரத் திணைக்களத்தின் அனுசரணையுடன் இலங்கைப் பாராளுமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சமய அனுட்டானங்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நவராத்திரி விழா ஆரம்பமானது. சில நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்று நிகழ்வுக்கு மெருகூட்டின. இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நல்லெண்ணத்துடன் முன்னெடுக்கப்படும் இந்த நவராத்திரி பூசை முழு நாட்டிற்கும் ஓர் ஆசீர்வாதமாகும் எனக் குறிப்பிட்டார். அத்துடன், பிற கலாசாரங்களை மதிக்கும் சமய மற்றும் கலாசார நல்லிணக்கத்தின் ஊடாகச் சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன உரையாற்றுகையில், இந்து சமய நம்பிக்கையின்படி துர்க்கா தேவியின் அருளால் தீமைகள் அகன்று, இலட்சுமி தேவியின் அருளால் செல்வ வளம் பெருகி, சரஸ்வதி தேவியின் அருளால் ஞானம் வளர வேண்டும் எனப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார். எவ்வித வேறுபாடுகளுமின்றி அனைவரினதும் பங்களிப்புடன் இவ்வாறான கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வது சிறந்த முன்மாதிரியாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் இந்து சமயக் குருமார்கள், பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஆளுங்கட்சியின் முதன்மைக் கொறடாவும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், எதிர்க்கட்சியின் முதன்மைக் கொறடா கயந்த கருணாதிலக, பாராளுமன்றச் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர ஆகியோருடன், பாராளுமன்றப் பணியாளர்கள், இணைந்த சேவைப் பணியாளர்கள், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு