’புதிதாகச் சிந்திப்போம், புதுமை காண்போம்’ வழிகாட்டல் தொகுப்பு பிரதமரிடம் கையளிப்பு

"புதிதாகச் சிந்திப்போம், புதுமை காண்போம்" என்ற கருப்பொருளின் கீழ் ருஹுணு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களின் கொழும்பு சங்கத்தினால் தயாரிக்கப்பட்ட மக்கள் நேய சிறந்ததோர் இலங்கை சமூகத்திற்கான வழிகாட்டல் முன்மொழிவுகள் இன்று (18 ) பாராளுமன்ற வளாகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

வினைத்திறனான அரச சேவையின் மூலம் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குதல், புதிய அணுகுமுறைகளை உருவாக்குதல் மற்றும் பொதுப் போக்குவரத்து போன்றவை உள்ளிட்ட தெரிவுசெய்யப்பட்ட விசேட துறைகளில் செய்ய வேண்டிய மாற்றங்களை இந்த முன்மொழிவு உள்ளடக்கியுள்ளது.

நாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மக்களுக்கு அறிவூட்டுவதற்காக உருவாக்கப்பட்ட “நவ நெத்” (புதிய பார்வை) என்ற முகநூல் பக்கத்தையும் பிரதமர் ஆரம்பித்து வைத்தார்.

அரசாங்கம் நாட்டில் ஏற்படுத்தப்போகும் மாற்றத்திற்கு தொழில் வல்லுநர்கள் உட்பட அனைத்து மக்களினதும் ஆதரவு தேவை எனவும், அந்த வகையில் ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களின் கொழும்பு சங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகள் பாராட்டுக்குரியது எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதன் போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ருஹுனு பல்கலைக்கழக பழைய மாணவர்களின் கொழும்பு சங்கத்தின் செயலாளர் லால்காந்த, ஒருங்கிணைப்பாளர் பாலித உதயகாந்த உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு