ஐக்கிய அரபு இராச்சியத்துடன் சக்தி வள ஒத்துழைப்பு குறித்து பிரதமர் கலந்துரையாடல்

இலங்கையில் சக்திவள துறையில் ஐக்கிய அரபு இராச்சியம் முதலீடுகளை செய்வதற்கான ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் அல்அமெரி தெரிவித்தார். இலங்கையில் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி வள திட்டங்களில் முதலீடு செய்ய தாம் ஆர்வமாக உள்ளதாக அவர் கூறினார்.

இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தனவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி வள துறைக்கு மேலதிகமாக விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகள் போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்வதற்கு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வாய்ப்புகள் உள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அபிவிருத்திப் பணிகளுக்காகவும், தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து விரைவாக மீள்வதற்காகவும் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவு மற்றும் உதவிகளுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பிரதர் நன்றி தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்னவும் பிரசன்னமாகியிருந்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு