சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி

இலங்கை சமூகத்தில் பெண்ணுக்கு ஒரு தனித்துவமான இடம் இருந்து வந்துள்ளது. தேசத்தின் பெருமையாக விளங்கிய அவள், அரசாங்கத்திலும், சாசனத்திலும் மற்றும் அரசியலிலும் முன்னணி வகித்தாள். நெருக்கடி நிலையிலும் உறுதியுடன் செயற்படும் பெண் குடும்பம், சமூகம் மற்றும் நாட்டின் பெரும் பலமாக விளங்குகிறாள்.

மொத்த சனத்தொகையில் ஐம்பத்தி இரண்டு சதவீதத்தைக் கொண்டுள்ள பெண்கள், நாட்டின் அபிவிருத்தியில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். மகளாகவும், மனைவியாகவும், தாயாகவும், பாட்டியாகவும், நாட்டின் பிரஜையாகவும், சமூக சேவகியாகவும் தன் பாத்திரத்தை வெளிப்படுத்தும் அவள், பாடசாலையிலும், வீட்டிலும், தொழிற்செய்யும் இடத்திலும், பாதைகளிலும் அவள் முகம்கொடுக்கும் பிரச்சனைகள் தொடர்பில் இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். சமூகத்தினதும் குடும்பத்தினதும் முன்னேற்றத்திற்காக தங்கள் இன்னுயிரையும் துச்சமாக மதித்து செயற்படும் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது ஒட்டுமொத்த சமூகத்தினதும் பொறுப்பாகும்.

நாட்டின் அபிவிருத்திக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய போதிலும், இந்நாட்டில் பெரும்பான்மையான பெண்கள் இன்னும் வங்கித் துறையில் இணையவில்லை என்பது கவலைக்குரியதாகும். இதன் காரணமாக, பெண்களின் எதிர்கால நலனுக்காக வங்கி முறைமையில் இணைவதற்கான தடைகளை நீக்குவதில் அரச மற்றும் வர்த்தக வங்கிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியாக பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டங்களையும் கொள்கைகளையும் மகளிர் விவகார அமைச்சு உருவாக்கி வருகிறது. தற்போதைய சமூக நெருக்கடிகளின் மத்தியிலும் கூட, பெண்களின் போசனை, சுகாதாரம் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காகவும் அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்களது அறிவு மற்றும் திறன்களைப் புரிந்துகொள்வதன் மூலம் புதிய உலகத்திற்கு ஏற்ற வலுவான மற்றும் உற்பத்தித்திறன் வாய்ந்த பெண்கள் தலைமுறையை உருவாக்குவதே எமது ஒரே நோக்கம் ஆகும்.

மகளிருக்கான சர்வதேச தினம் மற்றுமொரு கொண்டாட்ட நாளாக மட்டும் இருந்துவிடாது, முன்மாதிரிமிக்க வகையில் அர்த்தமிக்கதாக கொண்டாடப்பட வேண்டும். அதனை ஒரு நாளுடன் மட்டுப்படுத்திவிட முடியாது. அவள் இந்த பூமிப்பந்தின் மற்றுமொரு விடியல்.

தினேஷ் குணவர்தன (பா.உ)
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

2024 மார்ச் 08