எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் புத்தகங்களுக்கென விதிக்கப்பட்டுள்ள வெட் வரியில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பில் அரசு கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் 27வது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச புத்தகக் கண்காட்சியை இன்று (25) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் வகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் முன்னெடுத்துச் செல்லப்படும் ’தரு திரிய’ புலமைப்பரிசில் நிதியத்தின் கீழ் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கும் நிகழ்வும் பிரதமர் தலைமையில் இதன்போது இடம்பெற்றது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரமதர், இம்முறை வரவு செலவு திட்டத்தில், புத்தகங்களுக்கென விதிக்கப்பட்டுள்ள வெட் வரியில் விசேட மாற்றத்தை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளதை தெரிவிக்குமாறு, ஜனாதிபதி தமக்கு விசேடமாக அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
புத்தகங்களின் பெறுமதியை அறிந்துள்ள அரசாக, இவ்வாறான மாற்றம் மக்களுக்கு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அரசு நன்கு அறிந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியானது, வருடத்திற்கு ஒரு தடவை நடாத்தப்படும் மற்றுமொரு கண்காட்சி மாத்திரமல்ல, இது இந்நாட்டின் இலட்சக்கணக்கான மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கலாசார வாழ்வியலின் ஒரு பகுதியாகுமெனவும், 1999ம் ஆண்டில் ஆரம்பமான இந்த பயணம் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நாட்டின் வாசிப்பு கலாசாரத்தை போஷித்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
வாசிப்பு என்பது மற்றுமொருவரின் வாழ்க்கை, சமூகம், கலாசாரம் மற்றும் நிலைப்பாட்டை புரிந்துகொள்ளும் ஒன்றெனவும், கருணையுடன் கூடிய சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு அது மாபெரும் பலமாக அமையுமெனவும் பிரதமர் தெரிவித்தார்.
புதிய கல்வி சீர்த்திருத்தம் ஊடாக சிறுவர்களின் வாசிப்பு ஆர்வத்தை வளர்ப்பதற்கும், பாடசாலை நேரத்தின் போது வாசிப்பிற்கு அதிக நேரம் ஒதுக்குவதிலும் உள்ள முக்கியத்துவம் குறித்தும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வில் இராஜதந்திரிகள், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உப்புல் சுபசிங்க, இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் அத்துல ஜயக்கொடி உள்ளிட்ட எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் விருந்தினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடக பிரிவு