எதிர்காலத்தில், ஒரு வருடம் முன்னதாகவே பட்டப்படிப்பை நோக்கி செல்ல முடியும். - பிரதமர் தினேஷ் குணவர்தன.

உரிய காலத்தில் பரீட்சைகளை நடத்தி, உரிய காலத்தில் பெறுபேறுகளை வழங்க வேண்டும்.

தேசத்திற்கே பெருமை சேர்த்த விசாகா கல்லூரி தேசத்திற்கு வழங்கிய மனித வளங்கள் ஏராளம்.

2023.09.15 அன்று விசாகா கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்...

“பௌத்த மகளிர் கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்ட விசாகா, எமது நாட்டின் கல்வித்துறைக்கு சிறந்த முன்மாதிரிகளை வழங்கியுள்ளது. பாணதுறை ஜெரமியஸ் அம்மையார் அவர்கள் ஆரம்பித்த இந்த கல்விப் பயணம் வெறுமனே ஒரு பாடசாலையை உருவாக்குவதற்கு மட்டுமன்றி, கல்வித்துறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பெண்கள் தலைமுறைக்கு வழிகாட்டும் கல்வியின் மைய ஊற்றாக மாறியது. இதனை முறையான திட்டத்தின் கீழ் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லக் கிடைத்திருப்பது ஒரு பாக்கியமாகும். இந்த மகளிர் கல்லூரி பிற்காலத்தில் ஏனைய பல்வேறு விசேட துறைகளை நோக்கி பயணிக்கும் கல்லூரியாக மாறியது.

சிறந்த கல்விப் பின்னணியுடன் ஒரு பூரணமான குடிமகனை உருவாக்கும் பணி மற்றும் அதன் தாக்கத்தால் விசாகா தேசிய அளவில் பிரகாசிக்கத் தொடங்கியது. இதனாலேயே இலங்கையின் பாடசாலைக் கல்வி முறையில் விசாகாவிற்கு தனி இடம் உண்டு. அதுதான் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பேசப்படும் செய்தி. விசாகா எமது தேசத்திற்கு பெருமை சேர்க்கிறது.

ஐம்பதுகள் மற்றும் அறுபதுகளின் தொடக்கத்தில் கூட, தென்னை ஓலையிலான கூரையுடன் கூடிய பாடசாலைகளைப் பார்த்தோம். அது எதுவும் விசாகாவை அதன் பயணத்தை விட்டும் திருப்பிவிடவில்லை. விசாகா பல துறைகளிலும் பொறுப்பேற்கும் குடிமக்களை உருவாக்கும் தொட்டிலாக இருப்பது பெருமைக்குரியது. விசாகா கல்வியில் பெரும் புரட்சியின் மையமாக மாறியது.

இந்த நாட்டில் பெண்களுக்கு விஞ்ஞான துறை திறக்கப்பட்டது. அதன் மூலம் பல கல்லூரிகளில் பெண்களுக்கு விஞ்ஞானத் துறைக்கான வாய்ப்புகள் கிடைத்தது. பல விடயங்களை சமூகத்திற்கு அளித்துள்ள விசாகா கல்லூரி நாட்டைக் கட்டியெழுப்பும் பணியிலும் பெரும் பங்களிப்பை செய்துள்ளது.

ஒரு கல்லூரியை விட்டு வெளியேறி, உலகளாவிய அறிவை அணுகுவதற்கான மையமாக இருக்கும் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறோம், இதன் மூலம் நாட்டிற்கு பல நன்மைகளை சேர்க்கிறோம். அதனால்தான் கல்லூரிக்கும் பல்கலைக்கழகத்துக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது.

மாணவிகளாக, நீங்கள் ஒரு கடினமான காலத்தை கடந்து வந்துள்ளீர்கள். அண்மைய காலங்களில், நாடு மிகவும் கடினமான காலத்தை எதிர்கொண்டது. இப்போது நாம் மீண்டும் எழுந்து நிற்கும் நாடாக இருக்கிறோம். அறிவை வழங்கும் துறைகளை விரிவுபடுத்துவதற்கான வலுவான அர்ப்பணிப்பும், பல புதிய துறைகளும் உருவாகியுள்ளன. நீங்கள் பெரிய பதவிகளுக்கு சென்று நாட்டுக்கு சேவை செய்யலாம்.

எங்களைப் போலவே, பெற்றோர்களும் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளும், உரிய நேரத்தில் பரீட்சைகள் நடத்தப்பட வேண்டும், உரிய நேரத்தில் பெறுபேறுகளைப் பெற வேண்டும், உயர்கல்விக்கான கதவுகள் சரியான நேரத்தில் திறக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த காலச் சட்டகத்தை உறுதியுடன் செயற்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது. இது அவசியமானது.

கல்விக் காலத்தை ஓராண்டு குறைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதனைச் செய்ய முடியுமாக இருந்தால், எமது பிள்ளைகள் ஒரு வருடம் முன்னதாகவே பட்டப்படிப்பை நோக்கிச் செல்ல முடியும். மேலும், பல்வேறு துறைகளுக்கு செல்ல முடியும். அந்தச் சவாலை நாம் வெற்றி கொள்ள வேண்டும்.

பரீட்சைகள் ஆணையாளர் எச்.ஜே.எம்.சி. ஜயசுந்தர, அதிபர் மனோமி செனவிரத்ன, ஆசிரியர்கள், தற்போதைய மற்றும் பழைய மாணவிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


பிரதமர் ஊடகப் பிரிவு