நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும்போது எதிர்ப்புகள் எழுவது இயல்பே. நாட்டுக்குத் தேவையான முன்னேற்றகரமான சமூகப் பிரஜைகளை உருவாக்குவதற்காக எம்மால் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்வி முறைமையை எக்காரணம் கொண்டும் கைவிடமாட்டோம்.
அரசாங்கம் நாட்டைப் பொறுப்பேற்றபோது, ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய பிரதான துறையாகக் கல்வித்துறை இனங்காணப்பட்டிருந்தது எனவும், இவ்வாறான சமூக மாற்றங்களை முன்னெடுக்கும்போது ஒரு சிறிய தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பக்கூடும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். எவ்வாறாயினும், சிறுவர் பாதுகாப்புக் கொள்கைக் கட்டமைப்பிற்குள் புதிய கல்வி மறுசீரமைப்பு முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கல்வி மறுசீரமைப்பு குறித்துத் தெளிவுபடுத்துவதற்காகச் சிலாபம் கல்வி வலயத்தின் கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுடன் இன்று (16) மாதம்பை செடெக் (SEDEC) நிறுவன மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, 176 பாடசாலைகளையும் சுமார் 76,000 மாணவர்களையும் கொண்ட சிலாபம் கல்வி வலயம் குறித்த சுருக்கமான அறிமுகத்தைச் சிலாபம் வலயக் கல்விப் பணிப்பாளர் முன்வைத்தார். கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்துவதற்காக வடமேல் மாகாணக் கல்வி அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் பிரதமருக்குச் சமர்ப்பிக்கப்பட்டன. அத்தோடு, கலந்துகொண்ட கல்வி அதிகாரிகள் தமது கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைக்க வாய்ப்பளிக்கப்பட்டதோடு, கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் அதற்கான தயார்நிலை குறித்துப் பிரதமரின் கவனம் ஈர்க்கப்பட்டது.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
தவறுகளை இனங்கண்டு அவற்றைச் சரிசெய்து முன்னெடுக்கப்படுகின்ற புதிய கல்வி முறையின் கீழ், பிள்ளைகளுக்குத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது, சிறுவர் பாதுகாப்புக் கொள்கைகள் பேணப்படும் வகையில் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்தக் கல்வி மறுசீரமைப்புகளை முன்னெடுப்பதில் புத்தளம் மாவட்டக் கல்வி அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பானது, கல்வி மறுசீரமைப்பைக் குழப்ப முயற்சிக்கும் தரப்பினரின் நோக்கங்களை முறியடிக்கும் அளவிற்குப் பலமானதாக இருக்கின்றது என்பதை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.
தொழிற்கல்விக்காக ஒதுக்கப்பட்ட ஆகக்கூடிய வரவுசெலவுத் திட்ட நிதி, இக்கல்வி மறுசீரமைப்பின் ஊடாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளுக்கிடையிலான டிஜிட்டல் வளங்களின் சமத்துவமின்மை மற்றும் உட்கட்டமைப்பு வசதிப் பிரச்சினைகளை நீக்குவதற்காகத் தற்போது உரிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 6ஆம் தரக் கல்வி மறுசீரமைப்பைத் தற்காலிகமாக நிறுத்தியதன் மூலம் அநீதி இழைக்கப்பட்ட மாணவர்களுக்கு விரைவில் நீதியைப் பெற்றுக்கொடுக்க நாம் நடவடிக்கை எடுப்போம். கல்வியை ஒரு பாரிய மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்லும் இந்தப் பயணத்தில் மக்களின் அங்கீகாரம் மிகவும் முக்கியமானதாகும்" எனப் பிரதமர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வடமேல் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் பி.எம்.சி.கே. வன்னிநாயக்க, உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி, பாடசாலை அதிபர்கள், மகா சங்கத்தினர் மற்றும் கத்தோலிக்க மதகுருமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு