அரசியல் என்பது அபிவிருத்தியிலிருந்து பிரிந்த ஒன்றல்ல. அரச நிர்வாகத்தில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு தெரிவும் தீர்மானமும் அதன் மூலமே வடிவமைக்கப்படுகின்றன - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அரசியல் என்பது அபிவிருத்தியிலிருந்து வேறுபட்ட ஒன்றல்ல என்றும், அரச நிர்வாகத்தில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு தெரிவும் தீர்மானமும் அதன் மூலமே வடிவமைக்கப்படுகின்றன என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஐக்கிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 19 ஆம் திகதி சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக் கற்கை நிறுவகத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

18 பிற்பகல் இலங்கையிலிருந்து புறப்பட்ட பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினர், இலங்கை நேரப்படி இரவு 8.00 மணியளவில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தைச் சென்றடைந்தனர். ஹீத்ரோ விமான நிலையத்தில் பிரதமரையும் குழுவினரையும், ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீர, ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான அமைச்சின் செயலாளரின் விசேட பிரதிநிதியும், இலங்கைக்கான முன்னாள் பிரித்தானிய உயர்ஸ்தானிகருமான ரிச்சர்ட் வைல்டாஷ் உள்ளிட்ட இராஜதந்திர அதிகாரிகள் குழுவினர் மிகவும் அன்புடன் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, 19 காலை பிரைட்டனில் அமைந்துள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற பிரதமரை, அப்பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அனு ஜோஷி, பேராசிரியர் மிக் மூர் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் வரவேற்றனர்.

அங்கு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இலங்கையின் சமீபத்திய அரசியல் மற்றும் பொருளாதார அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, அரசியல், நல்லாட்சி மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகளை விளக்கினார். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுதல் மற்றும் ஜனநாயகப் பொறுப்புக்கூறலைப் பாதுகாத்தல் ஆகியவற்றுடன், அரச நிர்வாகம், பொருளாதார மீட்சி, சமூகப் பாதுகாப்பு மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களைச் சமநிலையில் முன்னெடுத்துச் செல்வதில் உள்ள சவால்களைப் பற்றி அவர் இதன்போது வலியுறுத்தினார்.

அதேபோன்று, ஊதியம் பெறும் மற்றும் பெறாத பராமரிப்புச் சேவைகளைத் தேசிய பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக அங்கீகரிப்பதில் அரசாங்கம் கொண்டுள்ள கொள்கை ரீதியான கவனம் மற்றும் பராமரிப்புத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களின் பங்களிப்பு ஆகியன குறித்தும் பிரதமர் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய மற்றும் பிராந்திய கற்கைகள் பிரிவில் இடம்பெறவுள்ள விசேட உரையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொள்ளவுள்ளார். அத்துடன், அங்குள்ள அறிஞர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.

மேலும், பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் இவெட் கூப்பர் (Yvette Cooper), கல்வி இராஜாங்க செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் (Bridget Phillipson) மற்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் ஷெர்லி அயோர்கோர் போச்வே (Shirley Ayorkor Botchwey) உள்ளிட்ட ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் பலரைச் சந்திக்கவுள்ளார்.

பிரித்தானிய கவுன்சில் பிரதிநிதிகள், செவ்னிங் புலமைப்பரிசில் பெற்றவர்கள் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் இலங்கை உயர்ஸ்தானிகராலய உத்தியோகத்தர்கள் ஆகியோருடனான உத்தியோகபூர்வ சந்திப்புகளும் இந்த விஜயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பிரதமர் ஊடகப் பிரிவு