யுனான்-இலங்கை வர்த்தகம் மற்றும் முதலீட்டை முன்னேற்ற நடவடிக்கை

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் யுனான் மாகாணக் குழுவின் துணைத் தலைவரும், சீன யுனான் மாகாண கைத்தொழில் மற்றும் வர்த்தகச் சங்கத்தின் தலைவருமான காவோ ஃபெங் (Gao Feng) தலைமையிலான குழுவுக்கும் இடையிலான சந்திப்பு 2010.10.20 ஆந் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.

கடந்த ஓகஸ்ட் மாதம் யுனானுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது முன்வைக்கப்பட்ட வர்த்தக மற்றும் முதலீட்டு முன்மொழிவுகள் தொடர்பிலான தொடர் திட்டங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

சீனாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, பிரதமர் யுனான் விவசாய விஞ்ஞான நிலையம், குன்மிங் சர்வதேச மலர் வர்த்தக மையம் மற்றும் யுனான் சூரிய மின் நிலையம், குஷேன் கிராமிய அராய்ச்சி நெல் வயல், எர்ஹாய் சூழல் பாதை மற்றும் சியாகுவான் துஓசா தேயிலை ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் மற்றும் யுன்னானின் முன்னணி தொழில்முனைவோர் ஆகியோரால் யுனானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் யுன்னான் மாகாணக் குழுவின் துணைத் தலைவர், இலங்கைக்கும் யுனான் மாகாணத்துக்கும் இடையே நெருங்கிய உறவுகளை ஏற்படுத்துவதற்கான தனது ஆர்வத்தை தனது இலங்கைக்கான பயணத்தின் மூலம் விளக்கினார்.

இக்கலந்துரையாடலின் போது, தேயிலை, நெல் மற்றும் ஏனைய பயிர்கள், இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் மற்றும் சுற்றுலாத்துறையில் ஒத்துழைத்து செயற்படுவதென தீர்மானிக்கப்பட்டது.

வர்த்தகம், சுற்றுலா, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் சூரிய மற்றும் காற்றாலை சக்திவளம் ஆகியவற்றில் முதலீடுகள் ஒத்துழைப்பின் சாத்தியமான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டன.

"இலங்கைக்கும் யுனானுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன, சீனாவின் மிகவும் சிறப்பு வாய்ந்த நட்பு நாடான இலங்கையுடன் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்த சீனா ஆர்வமாக உள்ளது" என யுனான் மாகாண கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்தார்.

யுனான் விஜயத்தின் போது எட்டப்பட்ட உடன்படிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தூதுக்குழுவினரின் விஜயம் பயனுள்ளதாக அமையும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

சீன வர்த்தக சம்மேளனத்தின் தலைவர்கள், யுனானின் முன்னணி தொழில் முயற்சியாளர்கள், இராஜாங்க அமைச்சர்களான ஜனக வக்கும்புர, பியல் நிஷாந்த, சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சுதர்சன தெனிபிட்டிய, டபிள்யூ. டி. வீரசிங்க, யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, அமைச்சின் செயலாளர்கள், அரச நிறுவனங்கள் மற்றும் வர்த்தக சபை அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு