ஏற்பட்டுள்ள நிலைமைகளைச் சமாளிக்க, தந்திரோபாய ரீதியில் செயற்பட வேண்டும் என்றும், வரவுசெலவுத் திட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டு முதலீட்டுப் பின்னணியையும் சூழலையும் சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும், சரியான கொள்கைகளின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
கொழும்பு ஷங்ரிலா (Shangri-La) விடுதியில் டிசம்பர் 02ஆம் திகதி நடைபெற்ற ’இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாடு 2025’ (SRI LANKA ECONOMIC AND INVESTMENT SUMMIT 2025) இல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
500க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் மற்றும் உலகளாவிய ரீதியில் உள்ள சுமார் 100 முதலீட்டாளர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் ’இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாடு 2025’ நடைபெற்றது.
இந்த மாநாட்டில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் தெரிவித்ததாவது:
"இலங்கைக்காக முன்மொழியப்பட்டிருக்கும் எதிர்வு கூறலுக்கு அமைய, முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் நாம் இருக்கிறோம். எம்மால் மீண்டும் பின்னோக்கிச் செல்ல இயலாது. நாட்டைப் பின்னோக்கிச் செல்லவிடவும் முடியாது. ஆகையால், நாம் ஏற்படுத்திக் கொண்ட இலக்குகளை அடைவதே எமது இலக்காகும்.
தற்போது நிலவுகின்ற சூழ்நிலைகளும் வாய்ப்புகளும் மாறும்போது, நாமும் அதற்கு இணங்கிச் செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக, ஏற்பட்டுள்ள மற்றும் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற நிலைமைகளைச் சமாளிப்பதற்காக, நாம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. ஆயினும், அரசாங்கத்தின் இலக்குகளில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. வரவுசெலவுத் திட்ட உரையின்போது, ஜனாதிபதி அவர்கள் நிலையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய அபிவிருத்தி, ஏற்றுமதி பல்வகைப்படுத்தல், டிஜிட்டல் மயமாக்கல், உற்பத்தித்திறன் மிக்க பொருளாதாரம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தினார்.
அந்த இலக்குகளை அடைவதற்குச் சரியான பாதையில் பயணிக்க வேண்டுமென நாம் உறுதிபூண்டுள்ளோம்.
அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் பிரதான தந்திரோபாய முன்மொழிவுகள் குறித்துப் பேசியது. வர்த்தகம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மறுசீரமைப்புச் செயல்முறைகளுக்கான ஒட்டுமொத்த பொருளாதாரக் கட்டமைப்பு தொடர்பான முன்மொழிவுகளும் அதில் உள்ளடங்குகின்றன. அதற்கான பல சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்கும் பணியை நாம் ஏற்கெனவே ஆரம்பித்து இருக்கின்றோம். அவை அடுத்த வருட ஆரம்பத்தில் முன்வைக்கப்பட உள்ளன. அவற்றைத் தாமதப்படுத்த வேண்டிய எந்த அவசியமும் இல்லை. உண்மையில், நாம் இன்னும் வேகமாக முன்னோக்கிச் செல்வோம், ஏனெனில் அது எமது மீண்டும் கட்டி எழுப்பும் தந்திரோபாயத்தின் ஓர் அங்கமாகும்.
பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்குத் தேவையான சூழல் உருவாக்கப்பட்டு இருக்கின்றது என்பதை நாம் உறுதிப்படுத்துவோம். ஆகையினால், எதையும் பிற்போடுவதில் எண்ணம் எமக்கு இல்லை.
ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமைக்கு ஏற்ப தந்திரோபாயத்துடன் செயற்பட வேண்டி இருக்கின்றது. அத்தோடு, எமது வரவுசெலவுத் திட்டத்திலும் சில பொருத்தங்களை ஏற்படுத்த வேண்டி வரலாம்.
இந்த அழிவில் இருந்து மீண்டு வர முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டுமாயின், நாம் எமது பொருளாதாரத்தை வலுவானதாகவும் தாக்குப் பிடிக்கக் கூடியதாகவும் வைத்திருக்க வேண்டும். இவை வெறும் ’அலங்காரத்திற்காக செய்யப்படும் மேலதிக விடயங்கள்’ அல்ல. பொருளாதாரத்தை நிலையானதாகவும், போட்டியிடக் கூடியதாகவும் வைத்திருப்பதற்கு இவை அடிப்படைக் காரணிகளாகும். ஆகையினால், இந்த அத்தியாவசிய விடயங்களைச் செய்து ஆகவேண்டும். அதற்குத் தேவையான நிதியைத் தேடிக்கொள்வதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். இதன் போது நிதியை விடச் சரியான கொள்கைகளே மிகவும் முக்கியமாகின்றன.
உதாரணமாக, ஒற்றைச் சாளர முறைமையை (single window) முன்னெடுத்துச் செல்வதற்கு அதிக செலவு ஏற்படாது. அது ஒரு முகாமைத்துவம் பற்றிய விடயம். ஆதலால், கொள்கைகளைச் சரியாக வகுப்பதே மிக முக்கியமானதாக அமைகின்றது. அதேபோல, அனைவரும் சட்டதிட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்குக் கட்டுப்படுவதை உறுதிப்படுத்த அரசியல் தலையீடும் முக்கியமானதாக அமைகின்றது.
எமது நாட்டில் கல்வித் துறையில் மேற்கொள்ளவிருக்கும் மாற்றத்தை நான் ஒரு மறுசீரமைப்பு என்பதைவிட ’மாற்றம்’ (transformation) என்று குறிப்பிட விரும்புகிறேன். காரணம், நாம் தற்போதுள்ள முறைமையை மறுசீரமைப்பதற்குப் பதிலாக, ஒரு புதிய முறைமையை அறிமுகப்படுத்தவே திட்டமிடுகிறோம்.
இந்த மாற்றம் ஐந்து தூண்களை அடிப்படையாகக் கொண்டது. அவை: மதிப்பீட்டு மற்றும் விசாரணை முறைகளின் மறுசீரமைப்பு, கல்வி நிர்வாகத்தின் மறுசீரமைப்பு, பாடசாலை உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியனவே ஆகும். நாம் முன்மொழியும் இரண்டு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கின்றன. முதலாவது, மதிப்பீட்டு முறைமையின் மாற்றம். தற்போது எமக்கு இருப்பது பரீட்சையை இலக்காகக் கொண்டு கற்பித்தல் நடைபெறும், பெரும்பாலும் பரீட்சையை மையமாகக் கொண்ட முறைமையாகும். இதனால், மாணவர்கள் பரீட்சைகளில் சித்தி அடைவதற்காகவே கற்கிறார்கள்.
நாம் இதை பாடசாலை அடிப்படையிலான, தொடர்ச்சியான மதிப்பீட்டு முறைமையாக மாற்ற விரும்புகிறோம். இதன்மூலம் போட்டிப் பரீட்சைகள் மீதான கவனம் குறையும். அதேநேரம், கற்றலை ஓர் அனுபவமாகவும் செயற்பாடாகவும் கருதுவதில் அதிக கவனம் செலுத்தப்படும். கட்டக முறைகள் (Modular Systems), பாடசாலை அடிப்படையிலான மதிப்பீடுகளை அறிமுகப்படுத்தவும், பரீட்சை பற்றிய சுமையைக் குறைக்கவும் நாம் திட்டமிடுகிறோம். இது கல்வியில் ஒரு பாரிய மாற்றம். இதற்கு, கற்றலை நோக்கும் விதத்தில் ஒரு மனப்பாங்கு மாற்றமும் தேவைப்படுகிறது.
நாம் ஏற்படுத்த இருக்கும் இரண்டாவது பாரிய மாற்றம், தொழிற்கல்வியை (Vocational Education) முதன்மை கல்வியில் ஒரு முறைசார் பாடத்திட்டமாகத் தெரிவு செய்யத்தக்க பாடமாக அறிமுகப்படுத்துவதே ஆகும்.
தற்போது, தொழிற்கல்வி என்பது ’தோல்வியடைந்தவர்களின் தெரிவு’ என்றே கருதப்படுகிறது. எவரேனும் பரீட்சையில் தோல்வியடைந்தால் அல்லது வகுப்பறையின் பின்வரிசையில் இருக்கும் மாணவராக இருந்தால், அவர்கள் மாத்திரமே தொழிற்கல்விக்கு அனுப்பப்படுகிறார்கள். மேலும், பொதுவாகத் தொழிற்கல்வி பெற பாடசாலையில் இருந்து விலக வேண்டியுள்ளது. நாம் முன்மொழிவது என்னவென்றால், தரம் 6 இலிருந்தே தொழிற்கல்வியைத் முதன்மை கல்வியின் ஒரு பகுதியாக மாற்றுவதுதே ஆகும். இதன் மூலம், அனைத்து மாணவர்களும் தொழில்சார் துறைகளை அடையாளம் காண முடியும். அத்துடன், கல்வியின் ஒவ்வொருப் படியிலும் ஒரு தொழில்சார் பாதையைத் தெரிவுசெய்யும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும். இது ஜேர்மன் முறைமைக்கு ஓரளவுக்குச் சமமானது. அங்கு பாடசாலையில் கற்கும் காலப்பகுதியைப் போலவே, தொழில்நுட்பப் பயிற்சிக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் ஒதுக்கப்படும்.
அதேபோல, நாம் வர்த்தக சம்மேளனங்கள் மற்றும் தனியார் துறையுடன் மிக விரைவில் கலந்துரையாட எதிர்பார்க்கிறோம். மேலும், திறன் தேவைப்படும் துறைகளை அடையாளம் காண, தனியார் துறையிடம் இருந்து எமக்குத் தொடர்ச்சியான தகவல்கள் தேவைப்படுகின்றன.
எமது மாணவர்களுக்கு உள்ளகப் பயிற்சி (Internships) வழங்குவதற்கும், தேசிய கல்வி நிறுவனத்துடன் இணைந்து பாடத்திட்டங்களை மேம்படுத்துவதற்கும் தனியார் துறை பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். பாடவிதானங்களைத் தயாரிப்பதற்கும் அவர்களின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.
அத்தோடு, நான் இதையும் குறிப்பிட வேண்டும், எமது கல்வி மறுசீரமைப்பின் நோக்கம் வெறுமனே தொழில் சந்தைக்காக ஒருவரை உருவாக்குவது மட்டும் அல்ல. குறிப்பாக, எமக்குத் தேவைப்படுவது ஒரு நல்ல குடிமகனை உருவாக்குவதே. பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு செய்வது ஒரு நல்ல குடிமகனாக இருப்பதன் ஒரு பகுதியே ஆகும். ஒரு பணியாளராக, தொழில்முனைவோராக அல்லது ஆக்கப்பூர்வமான ஒருவராக நாட்டை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய குடிமக்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்காகும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.
’இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாடு 2025’, ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி குழுமம், வெளிவிவகார அமைச்சு, இலங்கை வர்த்தகத் திணைக்களம், வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பங்குதாரர்கள் பலரின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.
பிரதமர் ஊடகப் பிரிவு