பணியாளர் முகாமைத்துவக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய முறையான பொறிமுறை மூலமாக அரச சேவையின் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்படுவர். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அரச சேவையின் ஆட்சேர்ப்புச் செயல்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாம் முகாமைத்துவக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, அமைச்சரவையின் அனுமதியுடன் முறையான பொறிமுறையின் ஊடாக, எதிர்காலத்தில் பட்டதாரிகள் ஆட்சேர்ப்புச் செய்யப்படுவார்கள் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே 2025 நவம்பர் 26ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

தற்போது இலங்கையில் வேலைவாய்ப்பு அற்றோர் எண்ணிக்கை மூன்று இலட்சத்து அறுபத்தைந்தாயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்து ஒன்றாகும். வேலையின்மையைக் குறைப்பதற்காக அரசாங்கம் குறுகிய கால, நடுத்தர, மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் பலவற்றை எடுத்திருக்கின்றது.

இதன்படி, பருப்பொருளியல் இலக்காக (Macro Economic Target), எதிர்வரும் ஆண்டுகளில் வேலையின்மையை, 2025ஆம் ஆண்டில் 4.4% ஆகவும், 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளில் 4.2% ஆகவும் அதனை குறைக்க வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

தற்போதைய அரசாங்கம் 35,000 முதல் 40,000 வரையிலான பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக ஒரு முன்னோக்குத் திட்டத்தைத் தயாரித்திருக்கிறது. அதற்கமைய, அரச சேவையில் காலியாக உள்ள பதவிகளுக்கு, அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செய்யும் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாம் முகாமைத்துவக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், அமைச்சரவையின் அனுமதியுடன் முறையான பொறிமுறைகளின் ஊடாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தற்போது, 12,309 பேரை ஆட்சேர்ப்புச் செய்வதற்குப் பணியாளர் முகாமைத்துவக் குழுவின் ஊடாக அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த ஆட்சேர்ப்புகள் ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு அமைய அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கை ஆசிரியர் சேவையின் 3 - I (அ) தரத்திற்கு 25,000 பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வது தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்கில் இறுதித் தீர்ப்பு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டவுடன் அந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன்படி 37,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் குறிப்பிட்டார்.

பிரதமர் ஊடகப் பிரிவு