இலங்கைக்கான அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தூதுவருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு.

இலங்கைக்கான அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தூதுவர் திருமதி. Julie Jiyoon Chung அவர்கள் 2025 நவம்பர் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது தூதுவர் திருமதி. Julie Jiyoon Chung அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்படும் சமாதானப் படையின் (Peace Corps) கல்வி மற்றும் கலாசாரப் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டம் குறித்தும், ஏனைய ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் விளக்கப்படுத்தியதுடன், Fulbright சர்வதேச புலமைப்பரிசில் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் எடுத்துரைத்தார்.

சர்வதேசக் கல்வி மற்றும் கலாசாரப் பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஒரு முன்னணிப் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டமான Fulbright புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டம், 160க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மாணவர்களுக்கும், கல்விமான்களுக்கும் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி, கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் பரஸ்பர உறவுகளை வளர்த்துக்கொள்ளுதல் ஆகியவற்றுக்கான வாய்ப்பை வழங்கி வருகின்றது.

பரீட்சையை மையமாகக் கொண்ட ஒரு கட்டமைப்பிலிருந்து ஒத்துழைப்புமிக்க கற்றல்-கற்பித்தல் சூழலை உருவாக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்களுக்காக, கல்வி அமைச்சு, பரீட்சைத் திணைக்களம் மற்றும் தேசிய கல்வி நிறுவனம் ஆகிய துறைகளில் தொழில்நுட்ப நிபுணத்துவ உதவியை அதிகரித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், நாட்டின் மனித அபிவிருத்தி முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகும் அறிவாளிகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

இந்தச் சந்திப்பில், அமெரிக்கப் பொது விவகார அதிகாரி திருமதி. Menaka Nayyar, அமெரிக்க ஐக்கிய நாடுகள் - இலங்கை Fulbright ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி Patrick McNamara, மற்றும் பாலின சமத்துவம், பாலின அடிப்படையிலான வன்முறைகள் பற்றிய (SGBV) நிலையத்தின், அத்துடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மாணவர் பகிடிவதைத் தடுப்பு நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பிரபா மனுரத்ன, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி. சாகரிகா போகஹவத்த, இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் திருமதி. பிரமுதித்தா மனுசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு