அவசர அனர்த்தங்கள் ஏற்பட்ட கணத்திலிருந்து தொடர்ந்தும் முப்படையினர், பொலிஸார், அரச அதிகாரிகள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொது மக்கள் வழங்கும் ஒத்துழைப்பை வெகுவாகப் பாராட்டுகிறேன்
அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களை மீண்டும் குடியேற்றுதல் மற்றும் அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் போலவே, அனர்த்தங்களால் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைத்தல் என்பவற்றை தேசியத் தேவையாகக் கருதிச் செயற்பட வேண்டும் என்றும், அவசர அனர்த்த நிலைமை ஏற்பட்டதிலிருந்து, முப்படையினர், பொலிஸார், அரச அதிகாரிகள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொது மக்கள் வழங்கும் ஒத்துழைப்பைப் வெகுவாகப் பாராட்டுவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டச் செயலகத்தில் இன்று,2025 டிசம்பர் 02 நடைபெற்ற கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களை, வெள்ள நிலைமை தணிந்து வருவதற்கு ஏற்ப படிப்படியாக மீண்டும் நிரந்தர வசிப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தற்போது சுமார் 110 இடம்பெயர்வு முகாம்களில் மக்கள் தற்காலிகமாகத் தங்கியிருப்பதாகவும் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். கொழும்பு மாவட்டத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்காக ஒரு நாளைக்கு சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் சமைத்த உணவுப் பொதிகளை வழங்க வேண்டியுள்ளதாகவும், அரச நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளினால் உரிய உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்றும், கொழும்பு மாவட்டத்திற்குத் தேவையான குடிநீர் விநியோகத்தைத் தொடர்ச்சியாக வழங்க முடியும் என்றும் அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
வெள்ளம் வடிந்த பகுதிகளில் வீடுகளைச் சுத்தம் செய்து, மீண்டும் குடியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர்,
"கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனர்த்தங்களுக்கு உள்ளான பகுதிகள் போலவே, அதை விட அதிகமாக அனர்த்தங்களுக்கு உள்ளான பகுதிகள் குறித்தும் கவனம் செலுத்தி, கொழும்பு மாவட்ட அனர்த்தக் குழுவாக அந்தப் பகுதிகளுக்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும். கொழும்பு மாவட்டத்தில் வெள்ளம் காரணமாகத் தடைப்பட்ட வீதிகளை மீண்டும் திறந்து, சேதமடைந்த வீதிகளை அடையாளம் கண்டு உடனடியாகப் புனர் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதேபோல, மக்களுக்குத் தேவையான குடிநீரை உடனடியாக வழங்குவதும் மிகவும் அவசியமாக இருக்கின்றது. மின்சாரத் தடைகளைச் சீர்செய்வதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உதவிகளை வழங்கும் போது, மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் சரியாக ஒருங்கிணைத்து, அனர்த்தங்களுக்கு உள்ளான அனைவருக்கும் உதவிகளை வழங்க வேண்டும். மீண்டும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து முறையாக மதிப்பீடுகளை மேற்கொண்டு, முன்பு ஏற்பட்ட தவறுகள் மீண்டும் ஏற்படாத வகையில் அபிவிருத்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். டிசம்பர் 16ஆம் திகதி குறைந்தளவு அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்த, அனைத்துப் பகுதிகளிலும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த தகவல்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். அனர்த்தங்களுக்கு உள்ளான ஏனைய பகுதிகளில் பிரதேச மட்டத்தில் ஆராய்ந்து பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டும். அதற்காகப் பாடசாலைகளின் நிலைமை, பிள்ளைகளின் பாடசாலை உபகரணங்கள் மற்றும் ஏனைய கற்றல் உபகரணங்கள் குறித்து ஒரு மதிப்பீட்டைப் பெற்றுக்கொள்வதும் அவசியம். அனர்த்த நிலைமையின்போது முப்படையினர், பொலிஸார், அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகள் போலவே பொது மக்கள் வழங்கும் ஒத்துழைப்பை வெகுவாகப் பாராட்ட இதை ஒரு வாய்ப்பாகக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.
திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் குடியேறக்கூடிய 100இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25,000 ரூபா நிதியுதவி கொழும்பு மாவட்டச் செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. மீண்டும் தமது வீடுகளில் குடியேறக்கூடிய மக்கள் வீடுகளைச் சுத்தம் செய்வதற்காகத் தமது பிரதேச செயலகங்கள் ஊடாக உரிய நிதியுதவியைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு செய்யப்பட்டிருக்கின்றது.
இந்தக் கூட்டத்தில் பிரதிச் சபாநாயகர் மொஹமட் ரிஸ்வி சாலி, பிரதி அமைச்சர்களான ஹர்ஷன நாணாயக்கார, எரங்க குணசேகர, கௌசல்யா ஆரியரத்ன, சுனில் வட்டகல, சதுரங்க அபேசிங்க, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆரச்சி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, முஜிபூர் ரஹ்மான், எஸ். எம். மரிக்கார், மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக்க குமார, வீதி அபிவிருத்தி அதிகார சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், மின்சார சபை, பொலிஸ், முப்படை உள்ளிட்ட அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் பங்கேற்றதுடன், கொழும்பு மாவட்ட பிரதேச செயலாளர்கள் Zoom ஊடாக கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு