பிராந்தியத்தின் குறைந்த மின்சாரக் கட்டணத்தைக் கொண்ட நாடாக இலங்கையை மாற்றுவதன் மூலம், நாட்டின் அனைத்து மக்களுக்கும் நியாயமான விலைக்கு மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இலங்கையை பிராந்தியத்தின் குறைந்த மின்சார கட்டணத்தைக் கொண்ட நாடாக மாற்றுவதன் மூலம், நாட்டின் அனைத்து மக்களுக்கும் நியாயமான விலைக்கு மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

தேசிய மின்சாரத் தேவையின் 12% அதாவது 350 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கெரவலப்பிட்டிய "சோபாதனவி" ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையத்தை செப்டம்பர் 17ஆம் திகதி திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

"வலுசக்தித் துறையில் தொடர்ச்சியாக மாற்றம் பெற்று வரும் நுகர்வோரின் தேவைகள் மற்றும் ஒழுங்குபடுத்தல் கட்டமைப்புக்களுக்கு ஏற்ப மாற்றம் பெற்று, நிலையான தன்மை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்திய மாறுதலடையும் யுகத்தை உலகம் தற்போது கடந்து கொண்டிருக்கிறது.

உலகளாவிய போக்குகள் இவ்வாறு இருக்கும் பின்னணியில், பிராந்தியத்தில் மின்சாரக் கட்டணம் அதிகமாக இருக்கும் நாடுகளில் இலங்கை உயர்ந்த ஸ்தானத்தில் இருந்து வருகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் நாடு வீழ்ந்திருக்கும் பொருளாதாரப் படுகுழியிலிருந்து மீண்டு வருவதற்கான உற்பத்திப் பொருளாதாரத்திற்குள் நுழைவதற்கான பிரதான தடையாக தாங்க இயலாத இந்த வலுசக்திச் செலவினமே இருந்து வருகின்றது.

அதிக மின்சாரச் செலவைக் குறைக்கும் நோக்கியே, எமது அரசாங்கம் புதிய வலுசக்தித் துறைகள், குறிப்பாக சூரிய வலுசக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்தைப் பயன்படுத்துவதைப் பற்றி விசேட கவனம் செலுத்தி வருகிறது.

இலங்கையை பிராந்தியத்தின் குறைந்த மின்சார கட்டணத்தைக் கொண்ட நாடாக மாற்றுவதற்காக, கொள்முதல் மற்றும் விலைமனுக்கோரல் ஆகிய செயல்முறைகளை அமுல்படுத்தி, மசகு எண்ணெயை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தியைச் சூரிய மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க மூலங்களுக்கு மாற்றியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாட்டின் அனைத்து மக்களுக்கும் நியாயமான மற்றும் மலிவான விலையில் மின்சாரத்தை வழங்குவதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பணியில் உற்பத்தியாளர்களை அதிகளவில் பங்களிக்கச் செய்வது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அத்துடன், உள்நாட்டுப் பொறியியலாளர்கள் மற்றும் உள்நாட்டு மனிதவளத்தைக் கொண்டு இந்த மின் உற்பத்தி அமைப்பு உருவாக்கப்பட்டதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

அத்தோடு, நிறுவன ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், தேவையற்ற மின்சாரப் பயன்பாடுகளை மட்டுப்படுத்தி தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிக்குமாறும் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி அவர்கள்,

"புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களின் கட்டுமானங்கள் சில அரசியல் நோக்கங்களுக்காக முடக்கப்பட்டிருந்தன. எமது அரசாங்கத்தின் கொள்கைகளின்படி, சரியான அதே நேரத்தில் வெளிப்படைத்தன்மை மிக்க முறையில் தேவையான கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் செயல்பட்டு வருகிறோம். மின்சாரத் துறையின் எதிர்காலம் குறித்து நாம் அவதானத்துடன் இருத்தல் வேண்டும். நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களைப் பயன்படுத்த இயலாத ஒரு சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் நமக்கு எந்த விதமான தீர்வுகள் எஞ்சியிருக்கின்றன என்பதைக் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்.

நமது நாட்டின் மனிதவளத்திற்கு சர்வதேச ரீதியிலும் பெறுமதி ஏற்பட்டிருக்கின்றது, ஆயினும் அந்த மனிதவளத்தை நமது நாட்டில் பயன்படுத்த இயலாது இருக்கின்றது. வெளிநாடுகளுக்குச் செல்லும் நமது மக்கள் சிறப்பாக வேலை செய்கிறார்கள். சுகவீன விடுமுறையைக் கூட பெற்றுக்கொள்வதில்லை. ஆயினும் இலங்கையில் தொழில் புரியும் போது அவர்களுக்குப் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

இந்த நாட்டின் பிரச்சனை, அந்த மனிதவளத்தைச் சரியான விதத்தில் பயன்படுத்தத் தவறியமையே ஆகும். இந்த புரிதல் எனக்கு இருக்கின்றது. அதனாலேயே, உள்நாட்டு மனிதவளத்திற்கு முன்னுரிமை அளித்து முன்னோக்கிச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகிறோம். அந்தத் திறனை வளர்த்துக்கொண்டு உலகிற்குச் செல்ல நமது நாட்டின் மனிதவளம் வலுவானதாக இருக்க வேண்டும்.

அரசாங்கம் மின்சார சபையை மறுசீரமைத்து வருகின்றது. இதன் போது புதிய அறிவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். பல நிறுவனங்களில் உயர்ந்த அந்தஸ்தை அடைந்தவர்கள் புதிய அறிவுக்கு ஒருபோதும் வாய்ப்பளிப்பதில்லை என்பதை நாம் காண்கிறோம். அந்த நிலை மாற வேண்டும்.

மின்சார சபை ஊழியர்கள் மீது நாம் எந்தவிதமான அரசியல் தலையீட்டையும் ஏற்படுத்த மாட்டோம். திறமையாக வேலை செய்யுங்கள் என்றே நாம் கூறுகின்றோம். மின்சார சபையின் கட்டமைப்பில் பல பிரச்சனைகள் காணப்படுகின்றன. மறுசீரமைப்பின் மூலம் அனைவருக்கும் தொழில் பற்றிய கௌரவம் கிடைக்கப்பெறும் வகையில் தொழில் புரிவதற்கான ஒரு வாய்ப்பையே நாம் உருவாக்குகிறோம். ஆயினும், அரசியல் நோக்கங்களுக்காக இதற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இன்றும் கூட ஒரு சிறிய குழுவினர் சாத்தியமற்ற ஒரு முயற்சியில் ஈடுபட்டார்கள். உங்களது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஊழியர்களிடம் பொய் சொல்லி ஏமாற்று அரசியலில் ஈடுபடாதீர்கள் என நான் அவர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்" என அவர் மேலும் தெரிவித்தார்.

தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, கடுவெல நகர பிதா ரஞ்சன் ஜயலால், இலங்கை மின்சார சபையின் உப தலைவர் சாலிய ஜயசேகர, L.T.L. Holdings நிறுவனத்தின் நிறுவனர் யூரி ஜயவர்தன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு